• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வைரமாளிகை நகைக்கடை

சினிமா

தங்க நகைகளை வியாபாரம் செய்து வந்த ஸ்தாபனங்களில் பிரபல்யமானது 'வைரமாளிகை' நகைக்கடை!

அதேபோன்று யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் கோமாளி போன்ற தோற்றத்துடன் ஒரு தத்துவஞானி சுவீப்ரிக்கற் வித்துக் கொண்டிருப்பார்! அவரையும் எழுதில் மறந்து விட முடியாது! தலையில் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் தொப்பி போட்டிருப்பார். தனது நீளக்காற்சட்டையில் பல இடங்களில் கிழிசல்களை மறைத்து துணிகள் வைத்து தைக்கப்பட்டிருக்கும். 

உடம்பில் ஒரு சேட், அந்த சேட்டிற்குமேலே நீளமான ஒரு கோட் அந்த கோட்டினிலே உலக அழகு ராணிகளாக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஐயர்களுக்கு பூணூல் போடுகின்ற பாணியில் அழகிய முறையில் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு றிப்பண் அணிந்திருப்பார்களே! அதே மாதிரி 'வைரமாளிகை' என்னும் எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும்! அவர்தான் 'வைரமாளிகை."

இவருடைய உண்மையான பெயர்  என்னவென்பது என்னவென்பது எவருக்கும் தெரியாது!? ஆனால் வைரமாளிகை என்றால் எல்லோருக்கும் அவரைத் தெரிந்து விடும். இவர் பார்ப்பதற்கு கோமாளி போலத்தான் தேர்ற்றமளிப்பார்! ஆனால் இவர் பேசும் பேச்சுகளில் தத்துவங்கள் பொதிந்திருக்கும்.

இவர் கதை சொல்லும் பாணியே வித்தியாசமானது! ம! வாயைத் திறக்கமாட்டார். மேல்பல்லும் கீழ்ப்பல்லும் ஒட்டியபடியே இருக்கும். ஆனால் சொண்டுகள் மட்டும் அசைந்து கொள்ளும்.

'ஐம்பது சதம், ஐம்பது சதம், ஐம்பது சதம், நாளைக்கு லட்சாதிபதி, ஒரு லட்சம்" இப்படியாக அவர் சுவீப்ரிக்கற் விற்பனை செய்யும் பாணியே வித்தியாசமானது!

சுவீப்ரிக்கற் விற்பனை செய்வதுடன் இவர் பல சமுதாயப் பணிகளும் செய்து கொள்வார்! பஸ்சில் ஏறுவதற்காக மக்கள் நெருக்கியடித்துக் கொள்ளும் சமயங்கள்தான் திருடர்களுக்கு வசதியான நேரம். திருடர்கள் பயணிகள் போலவே நிற்பதால் ஏனைய பயணிகள் அவர்களை அடையாளம் காணமாட்டார்கள். ஆனால் அங்கு வரும் பயணிகள், திருடர்கள் அனைவரையும் வைரமாளிகைக்கு நன்றாகத் தெரியும்!

அப்படியான சந்தர்ப்பங்களில் தனக்கு எதுவும் தெரியாதவர் மாதிரியும் மக்களைச் சிரிக்க வைக்க நாடகம் நடிப்பவர் போல 'கள்ளனைத் தேடி பெலிசு வாறான் பிள்ளையள் பொக்கற் கவனம்! பொக்கற் கவனம்!" எனச் சொல்லி பயணிகளை எச்சரிக்கைப்படுத்துவார்.

பஸ் சுணங்கினாலும் நேரம் போவது தெரியாமல் பயணிகளுடன் மகிழ்ச்சியாகக் கதைத்துக் கொண்டிருப்பார். தங்கள் பிள்ளைகள் யாரைக் காதலிக்கின்றார்கள் என்பது தாய், தகப்பனுக்குத் தெரிவதற்கு முன்பே வைரமாளிகைக்குத் தெரிந்துவிடும். இளம் காதலர்களைக் கண்டால் அவர்களுக்கென்றே குசியான பாடல்களைப் பாடுவார். அதேநேரம் பயணம் செய்ய வரும் கல்லூரி மாணவிகள், மற்றும் இளம் பெண்களை சைட் அடிப்பதற்கென்றே இளைஞர்கள் பஸ் நிலையம் வருவதுண்டு! 

இந்த இளம் பெண்களை பாதுகாக்கும் பணிகளிலும் வைரமாளிகை தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுண்டு! எப்படி?

இந்தக் காதல் மன்னர்கள்!? பஸ் நிலையத்தில் நிற்கும் ஏனையவர்களுக்குத் தெரியாமல்தான் தங்கள் குறும்புகளையும் சேட்டைகளையும் செய்வார்கள். ஆனால் இவர்களைக் கண்டதுமே தனது ஞானக் கண்களால் இவர்களின் செய்கைகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் வைரமாளிகை சினிமாவில் வரும் ஒரு காதல் பாட்டை பாடியபடியே அங்கு வருவார் 'தம்பிக்கு மீசை முளைச்சிட்டிது! கல்யாண ஆசை வந்திட்டிது! இப்ப சைட் அடிக்கிறார்

தம்பி சைட் அடிக்கிறார்' என மிகப்பலமாகச் சத்தமிட்டுச் சொல்லுவார். அப்பொழுது அங்குள்ள பயணிகளின் பார்வையெல்லாம் குறிப்பிட்ட அந்த வாலிபர்கள் மேல்தான் விழும். மின்னல் வேகத்தில் வாலிபர்கள் அந்த இடத்தைவிட்டு

மறைந்த சம்பவங்கள் பல தடவைகள் நடந்ததுண்டு!

Sinnakuddy Mithu

Leave a Reply