• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தளபதி விஜய்க்கு 500 ரூபாய் கொடுத்த நடிகர் திலகம் சிவாஜி.. எதற்காக தெரியுமா?

சினிமா

இன்று தளபதியாக தமிழக இளைஞர்களின் மனதில் நீங்க இடம் பெற்றிருப்பவர் நடிகர் விஜய். தந்தை மூலம் சினிமாவிற்கு வந்தாலும் ஓரளவிற்கு மேல் தானே தனியாக வெற்றிப்படிக்கட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார். இவருடன் போட்டியில் அஜீத், பிரசாந்த் என சக நடிகர்கள் இருந்தாலும் கவனத்துடன் கதை களங்களைத் தேர்வு செய்து நடிப்பிலும், நடனத்திலும் அடுத்த இடத்திற்கு முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார்.

தன்னை வளர்தெடுத்த தமிழ் மண்ணிற்கு தன்னால் முடிந்த சமுதாய நலன் பங்களிப்பைச் செய்யும் நோக்கில் தற்போது அரசியலிலும் குதித்து அதிலும் ஓட ஆரம்பித்துவிட்டார். சிறு வயது முதலே அப்பா எஸ்.ஏ.சி இயக்கத்தில் நடித்ததால் இயல்பாகவே விஜய்க்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ‘என்னை ஹீரோவாக போட்டு சினிமா எடுங்கள்’ என அப்பாவிடம் அடிக்கடி கேட்டும் வந்துள்ளார்.

‘அதற்கான வயது இப்போது உனக்கு இல்லை. முதலில் கல்லூரி படிப்பை முடித்துவிடு. அதன்பின் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்’ என அறிவுரை சொல்லி சென்னை லயோலா கல்லூரியில் விஸ்வல் கம்யூனிக்கேஷன் சேர்த்துவிட்டார் எஸ்.ஏ.சி. அது சினிமா தொடர்பான படிப்பு என்பதால் ஆர்வமாக கல்லூரிக்கு போனார் விஜய்.

மீண்டும் அப்பாவை நச்சரித்ததால் இனிமேல் இவனை நிறுத்த முடியாது என நினைத்த எஸ்.ஏ.சி. சொந்த காசைப் போட்டு ‘நாளைய தீர்ப்பு’ என்கிற படத்தை எடுத்தார். படம் சுமாராக ஓடியது. அதன்பின் மேலும் சில படங்களை தயாரித்து இயக்கினார். அதில், ரசிகன் குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றது.

அதன்பின் செந்தூரப்பாண்டி, பூவே உனக்காக படம் மூலம் விஜயின் கேரியர் டேக் ஆப் ஆனது. அப்படம் அவருக்கு பெண் ரசிகைகளை பெற்று கொடுத்தது. துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் விஜய்.

விஜய் சிறு வயதாக இருக்கும்போது எஸ்.ஏ.சி தான் இயக்கிய படங்களில் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் சிறுவயது ஹீரோவாக விஜயை நடிக்க வைத்திருக்கிறார். அப்படி அவர் நடித்த முதல் படம் வெற்றி. 1984ம் வருடம் வெளியான இந்த படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிறுவயது விஜயகாந்தாக விஜய் நடித்திருந்தார்.

இந்த படத்தை பார்த்த நடிகர் திலகம் சிவாஜி விஜயின் நடிப்பை பாராட்டி 500 ரூபாயை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். இதுதான் விஜய் நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு. அதன்பின் ஒன்ஸ்மோர் படத்தில் நடிகர் திலகத்துடன் விஜய் நடித்திருந்தார். அப்போதும் ‘உன் பையன் நல்லா நடிக்குறான்டா’ என எஸ்.ஏ.சியிடம் சிவாஜி கூறினார். நடிகர் திலகத்திடம் பரிசு வாங்கியதும், அவருடன் நடித்ததும் தன்னால் மறக்கவே முடியாது என விஜய் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
 

Leave a Reply