• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாரும் அறியாத பிரபல கவிஞரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாக்யராஜ்!

சினிமா

இந்த ஹிட் பாட்டெல்லாம் இவர் எழுதியதா? யாரும் அறியாத பிரபல கவிஞரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாக்யராஜ்!

சினிமா உலகில் நமக்குத் தெரிந்த வரை பாடலாசிரியர்கள் என்றால் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து, நா.முத்துக்குமார், பா.விஜய், தாமரை என்று குறிப்பிட்ட சிலரின் லிஸ்ட் மனதில் இருக்கிறது. ஆனால் சில பாடல்களைக் கேட்கும் போது இந்தப் பாட்டை எழுதியது யார் என்று தேடத் தோன்றும். அவ்வாறு பல ஹிட் பாடல்களை எழுதி கடைசிவரை கொண்டாடப்படாத பாடலாசிரியர்தான் குருவிக்கரம்பை சண்முகம்.

எத்தனையோ நடிகர்களையும், சினிமா தொழில்நுட்ப வல்லுநர்களையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய திரைக்கதை பிதாமகன் பாக்யராஜ்தான் குருவிக்கரம்பை சண்முகத்தை சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.

தஞ்சை மாவட்டம் குருவிக்கரம்பை என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர் சண்முகம். இளம் வயதிலேயே இவருக்கு கவிதை எழுதும் ஆற்றல் கைக்கு வந்தது. பாரதிதாசன் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டிருந்த சண்முகம், அவரது மாணவர்களுள் ஒருவராக இருந்து கவிப்புலமையை மேம்படுத்தினார்.

1968 ஆம் ஆண்டு நடந்த உலகத்தமிழ் மாநாட்டு கவிதைப் போட்டியில் பங்கேற்று, ‘புகாரில் ஒருநாள்’ என்ற கவிதைக்கு முதல்பரிசு பெற்று, தமிழறிஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஆரம்பத்தில் மரபுக்கவிதை, பின்னர் புதுக்கவிதை என பயணம் மாறிய கவிஞர்களுள் இவரும் ஒருவர். இவரது படைப்புகளில் ‘நினைவுச் சின்னம்’, ‘பாட்டுப் பறவை’, ‘ஒரு குயிலின் குரல்’, ‘செந்நெல் வயல்கள்’, ‘குருவிக்கரம்பை சண்முகம் கவிதைகள்’, ‘பூத்த வெள்ளி’, ‘கவிதை அரங்கேறும் நேரம்’, ‘விரல் விளக்குகள்’ ஆகியவை பரிசுகளையும் பலரது பாராட்டுகளையும் அள்ளி வந்தன.

சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த சண்முகத்தை ஒரு கவியரங்கில் இவரின் புலமையைப் பார்த்து வியந்த இயக்குநர் கே.பாக்யராஜ் தனது அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் முதன்முதலாக வாய்ப்புக் கொடுத்தார். ‘அந்த 7 நாட்கள்’ படத்துக்காக ஒரு டூயட் ட்யூன் கவிஞரிடம் கொடுக்கப்பட்டது. தனது கவிதைத் தொகுப்பின் தலைப்பான ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்று வார்த்தைகளை அடுக்கி, ‘மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்……’ என ஒரு மணி நேரத்துக்குள் எழுதி முடித்தார்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கட்டிப்பிடித்துப் பாராட்டி, கவிஞரைப் பெருமைப்படுத்தினார். எழுதிய முதல் பாடலே மிகப்பெரும் புகழைப் பெற்றதில் மெய்சிலிர்த்துப் போனார் சண்முகம். போகுமிடங்களில் எல்லாம் ‘அந்தப் பாட்டை எழுதியது நீங்கள் தானே?’ என்று கேட்டு, ரசிகர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ஜெயச்சந்திரன் – ஜானகி குரலில் ஒலித்த அந்தப் பாடல் உலகத்தமிழ் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அதன்பின் பாக்யராஜ் நடித்த பல படங்களில் பாடலாசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் வரிகளில் உருவான சில ஹிட் பாடல்கள் : ‘டார்லிங் டார்லிங் டார்லிங்‘ படத்தில் இடம்பெற்ற ‘ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்…’ ‘கன்னிராசி’ படத்தில் இளையராஜா இசையில் இவர் எழுதி, மலேசியா வாசுதேவனும் வாணி ஜெயராமும் பாடிய ‘சுகராகமே சுகபோகமே…’ ‘ஆண்பாவம்’ படத்தில் சண்முகம் எழுதிய ‘குயிலே குயிலே பூங்குயிலே…’  'எங்க சின்ன ராசா’ படத்தில் ‘மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்…’ போன்ற பல ஹிட் பாடல்களை இயற்றி சண்முகம் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேன்மொழி
 

Leave a Reply