• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டொனால்டு ட்ரம்புக்கு 3 ஆண்டுகளுக்கு தடை, ரூ 2,937 கோடி அபராதம் விதிப்பு

கடன் வழங்குவோர்களை ஏமாற்றும் பொருட்டு தமது நிகர சொத்து மதிப்பை மிகைப்படுத்தி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பால் டொனால்டு ட்ரம்பின் நிலம் மற்றும் கட்டுமான சாம்ராஜியம் ஆட்டம் காணும் என்றே கூறப்படுகிறது. மூன்று மாத காலம் நீடித்த விரிவான விசாரணைக்கு பின்னர் நீதிபதி Arthur Engoron தனது தீர்ப்பை வழங்கியுள்ளார்.
  
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள டொனால்டு ட்ரம்ப், அடுத்த மூன்றாண்டுகளுக்கு நியூயார்க் கார்ப்பரேஷனின் அதிகாரியாக அல்லது இயக்குநராக செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுமார் 2,937 கோடி ரூபாய் அபராதம் செலுத்தவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, டிரம்ப் மற்றும் வழக்கில் பெயரிடப்பட்டுள்ள அவரது நிறுவனங்கள் நியூயார்க்கில் உள்ள எந்தவொரு நிதி நிறுவனத்திடமிருந்தும் கடன் பெற மூன்று ஆண்டுகளுக்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவின் முதன்மையான பல வங்கிகளில் இருந்து அவர் பணம் பெற முடியாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என ட்ரம்ப் தரப்பு உறுதி அளித்துள்ளது.

ட்ரம்ப் மற்றும் அவரது குடும்ப வணிகங்கள் தமது நிகர மதிப்பை ஆண்டுக்கு 3.6 பில்லியன் டொலர் அளவுக்கு அதிகமாகக் கூறி, கடன் வழங்குவோர்களை ஏமாற்றி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அதிக தொகை பெற்றுள்ளதாக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் Letitia James குற்றம் சாட்டினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ட்ரம்ப் பதிலளித்திருந்தார். தேர்தலில் தம்மை முடக்க முன்னெடுக்கப்படும் சதி என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a Reply