• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய் நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு

சினிமா

சிறு வயது முதலே அப்பா எஸ்.ஏ.சி இயக்கத்தில் நடித்ததால் இயல்பாகவே விஜய்க்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ‘என்னை ஹீரோவாக போட்டு சினிமா எடுங்கள்’ என அப்பாவிடம் அடிக்கடி சண்டையும் போட்டு வந்துள்ளார்.

‘அதற்கான வயது இப்போது உனக்கு இல்லை. முதலில் கல்லூரி படிப்பை முடித்துவிடு. அதன்பின் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்’ என அறிவுரை சொல்லி சென்னை லயோலா கல்லூரியில் விஸ்வல் கம்யூனிக்கேஷன் சேர்த்துவிட்டார் எஸ்.ஏ.சி. அது சினிமா தொடர்பான படிப்பு என்பதால் ஆர்வமாக கல்லூரிக்கு போனார் விஜய்.

அதன்பின் அப்பாவை நச்சரித்ததால் இனிமேல் இவனை நிறுத்த முடியாது என நினைத்த எஸ்.ஏ.சி. சொந்த காசைப் போட்டு ‘நாளைய தீர்ப்பு’ என்கிற படத்தை எடுத்தார். படம் ஓடவில்லை. அதன்பின் மேலும் சில படங்களை தயாரித்து இயக்கினார். அதில், ரசிகன் மட்டுமே ஓடியது. மற்றதெல்லாம் நஷ்டம்தான்.

அதன்பின் பூவே உனக்காக படம் மூலம் விஜயின் கேரியர் டேக் ஆப் ஆனது. அப்படம் அவருக்கு பெண் ரசிகைகளை பெற்று கொடுத்தது. துள்ளாத மனமும் துள்ளும், லவ் டுடே, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் விஜய். இப்போது ரசிகர்களால் தளபதி என அழைக்கப்பட்டு வருகிறார்.

விஜய் சிறு வயதாக இருக்கும்போது எஸ்.ஏ.சி தான் இயக்கிய படங்களில் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் சிறுவயது ஹீரோவாக விஜயை நடிக்க வைத்திருக்கிறார். அப்படி அவர் நடித்த முதல் படம் வெற்றி. 1984ம் வருடம் வெளியான இந்த படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிறுவயது விஜயகாந்தாக விஜய் நடித்திருந்தார்.

இந்த படத்தை பார்த்த நடிகர் திலகம் சிவாஜி விஜயின் நடிப்பை பாராட்டி 500 ரூபாயை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். இதுதான் விஜய் நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு. அதன்பின் ஒன்ஸ்மோர் படத்தில் நடிகர் திலகத்துடன் விஜய் நடித்திருந்தார். அப்போதும் ‘உன் பையன் நல்லா நடிக்குறான்டா’ என எஸ்.ஏ.சியிடம் சிவாஜி கூறினார். நடிகர் திலகத்திடம் பரிசு வாங்கியதும், அவருடன் நடித்ததும் என்னால் மறக்கவே முடியாது என விஜய் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
 

Leave a Reply