• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜி தங்கையாக ஸ்ரீதேவி.. அந்த காலத்திலேயே ஒரு புதிய பாதை.

சினிமா

நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது ஒருசில திரைப்படங்களில் சிவாஜியின் மகளாக நடித்திருக்கிறார். அதர் பின் வளர்ந்து கதாநாயகியான பின் சிவாஜியின் ஜோடியாக ‘சந்திப்பு’ உள்பட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் சிவாஜியின் தங்கையாக ஸ்ரீதேவி நடித்த திரைப்படம்தான் ‘பட்டாக்கத்தி பைரவன்’.

பார்த்திபன் நடித்து இயக்கிய முதல் படமான ‘புதிய பாதை’ திரைப்படத்தில் குப்பைத் தொட்டியில் குழந்தையை போடும் கதை தான் பட்டாகத்தி பைரவனின் கதை.

தமிழ் திரை உலகில் ராமநாராயணன், கே.பாலசந்தர் ஆகியோர் நூறு படங்களுக்கு மேல் இயக்கி சாதனை செய்தார்கள் என்றால் அதேபோல தெலுங்கு திரையுலகில் 150 படங்களுக்கு மேல் இயக்கி சாதனை செய்தவர் தாசரி நாராயண ராவ். இவர் இயக்குனர் மட்டுமின்றி தயாரிப்பாளர், நடிகர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் 150 படங்களுக்கு மேல் இயக்கி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

தாசரி நாராயண ராவ் இயக்கிய ‘கட்டகட்டல ருத்ரைய்யா’ என்ற தெலுங்கு படம்தான் தமிழில் ‘பட்டாகத்தி பைரவன்’ என ரீமேக் ஆனது. தெலுங்கில் கிருஷ்ணன் ராஜு, ஜெயசுதா, ஜெயசித்ரா ஆகியோர் நடித்திருக்க தமிழில் சிவாஜி கணேசன், ஜெயசுதா, ஸ்ரீதேவி, சௌகார் ஜானகி, ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சிவாஜியுடன் சில படங்களில் நடித்த ஸ்ரீதேவி இந்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். சௌகார் ஜானகி சிவாஜிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

சின்ன வயதில் தன்னை தன்னுடைய அம்மா குப்பை தொட்டியில் போட்டு விட்டதால், அனாதையாக வளரும் பட்டாக்கத்தி பைரவனுக்கு அம்மா மீது பயங்கர கோபம். அதனால் அம்மாவை தேடி அவரிடம் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார். அப்போதுதான் அவருக்கு அம்மாவின் பின்னால் உள்ள ரகசியம் தெரியவரும். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தில் பகலில் தொழிலதிபராகவும் இரவில் பட்டாக்கத்தி பைரவன் என்ற கொள்ளைக்காரனாகவும் சிவாஜிகணேசன் நடித்திருப்பார். இவரை பிடிப்பதற்காக ஒரு ரகசிய போலீஸ் நியமனம் செய்யப்படுவார். அவர் தான் ஜெய்கணேஷ்.

தனது சகோதரி ஸ்ரீதேவியின் நெருங்கிய தோழியான ஜெயசுதாவை சிவாஜி காதலிப்பார். அதேபோல் பட்டாகத்தி பைரவனை பிடிக்க நியமனம் செய்யப்பட்ட ஜெய்கணேஷூம் ஜெயசுதாவை காதலிப்பார். இருவரில் யாரை ஜெயசுதா கைப்பிடித்தார், இதில் ஸ்ரீதேவியின் பங்கு என்ன என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

இந்த படத்தை ராஜேந்திர பிரசாத் என்பவர் இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே பல தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களை இயக்கியவர். ஏற்கனவே சிவாஜிகணேசன் நடித்த ‘எங்கள் தங்க ராஜா’, ‘உத்தமன்’ ஆகிய படங்களையும் இவர் இயக்கியிருந்ததால் சிவாஜிக்கும் இவருக்கும் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி உண்டு.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் வரும் 'எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்',  ‘யாரோ நீயும் நானும் யாரோ’, ‘தேவதை ஒரு தேவதை’, ‘நெஞ்சுக்குள்ளே சிங்கக்குட்டி’ ஆகிய பாடல்கள் ஹிட்டாகின.

இந்த படத்தில் சிவாஜி கணேசன் உயிரை கொடுத்து நடித்திருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை, சுமாரான வெற்றிதான் பெற்றது. ஆனால் அதே நேரத்தில் இலங்கையில் இந்த படம் சூப்பர் ஹிட்டனாது. அங்கு ஒருசில திரையரங்குகளில் 20 வாரங்கள் ஓடியதாக கூறப்படுகிறது.

Leave a Reply