• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமுதைப்பொழியும் நிலவே..

சினிமா

பி.சுசீலாவிற்கு மிகவும் புகழ் தேடி தந்த “அமுதைப்பொழியும் நிலவே” தங்கமலை ரகசியம் பாடல் இவரது இசையமைப்பே. திருச்சியில் வசித்து

வந்தபோது அங்கே எம்.கே.டி, கே.பி.சுந்தராம்பாள் போன்றவர்களுக்கு இசையமைத்து பயிற்சி அளித்தவர் லிங்கப்பாவின் தந்தை. பல வாத்திய

கருவிகள் வாசிப்பதில் வல்லுனர் லிங்கப்பா. பல பட நிறுவனங்களில் பணியாற்றினார். மார்டன் தியேட்டர்ஸ் போன்ற பிரம்மாண்ட நிறுவனத்தில்

கே.வி.மகாதேவன் மற்றும் பாப்பாவுடன் கூட்டு சேர்ந்து வேலை செய்தார்பின் சுதர்ஸனம் மாஸ்டரிம் வேலை செய்தார்.இப்படி பல

நிறுவனங்களில் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் வேலை செய்தார்.


டி.ஆர் மகாலிங்கமும் பந்துலுவும் சேர்ந்து தயாரித்த 1951’ல் வெளியான மோகன சுந்தரம் படத்தின் மூலம் இசையமைப்பாளரானார் லிங்கப்பா. சி.ஆர்.சுப்புராமன் மரணமடைய அந்த இடத்திற்கு வந்தார் லிங்கப்பா. படம் தோல்வியடைந்தாலும் பாடல்கள் இன்றும் நம் நினைவில் உள்ளவை.

கார் சவாரிப்பாடலான ஓ ஜகமதில் இன்பம் இன்றும் அதே இனிமையுடன்
நம் காதுகளுக்கு விருந்தளிக்கிறது.
பி.ஆர்.பந்துலு பத்மினி பிக்சர்ஸ் உருவாகி 1954’ல் “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி” படத்தை தயாரித்தால், ப. நீலகண்டன் இயக்கினார். அதற்கு இசையமைப்பு
லிங்கப்பா. பாடல்கள் எல்லாம் அருமை. மக்களை சென்றடைந்தன.
சந்திரபாபுவை பாடவைத்ததும் லிங்கப்பாவே. இதில் சிவாஜிக்கு ஜாலி லைப் பாடலில் குரல் கொடுத்ததும் சந்திரபாபுவே.

பந்துலுவின் அடுத்த தயாரிப்பு முதல் தேதி(எனக்கு மிகவும் பிடித்த படம்)
சிவாஜி,அஞ்சலி தேவி, கலைவாணர், மதுரம் அம்மா நடித்தனர். கலைவாணர் பாடும் தேதி ஒண்ணுலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கருத்தாழமிக்க பாடல். இன்றும் மனிதனின் நிலை அதே.
இப்படி பத்மினி பிக்சர்ஸ்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆனார் லிங்கப்பா

பந்துலு-லிங்கப்பா-கு.மா.பா வெற்றிக்கூட்டணியாக மாறியது
அடுத்து தங்கமலை ரகசியம். படத்தில் பத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் இருந்தும் ஒரு மெட்டு இன்றும் லிங்கப்பாவின் பெயர் சொல்லிக்கொண்டிருக்கிறது என்றால் அது அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ.. தேன் குரலாள் எங்கள்
இசையரசி இசைத்த இந்த கானம் தேவகானமாக இன்றும் நம் செவிக்கு விருந்தாகிக்கொண்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.
இதே படத்தை பல மொழிகளிலும் இசையமைத்தவர் லிங்கப்பா
அடுத்து சபாஷ் மீனா.. இது லிங்கப்பாவிற்கு பெரும் புகழ் தேடி தந்த படம்
கு.மா.பாவின் வரிகள், சித்திரம் பேசுதடி, காணா இன்பம் என வெளுத்து வாங்கினார்.
பந்துலு கன்னடர் ஆக தங்கமலை ரகசியம் கன்னடத்திலும் எடுத்தார்
ரத்னகிரி ரகஸ்யா அங்கேயும் லிங்கப்பா அறிமுகம். பின் கன்னடத்தில் என்னற்ற

படங்களுக்கு இசையமைத்தார் லிங்கப்பா.. கன்னட திரையிசை உலகில்
லிங்கப்பாவிற்கு தனி இடம் உண்டு. கிட்டூரு சென்னம்மா, ஸ்ரீ கிருஷ்ண தேவராயா, பப்ருவாகனா, ஸ்கூல் மாஸ்டர் என அடுத்தடுத்து வெற்றி பாடல்கள் . தமிழில் கவனம் செலுத்த இயலவில்லை .ஒரு இடைவெளி ஏற்பட்டது.
அப்படியும் பந்துலு தயாரித்தால் அதில் இவர்தானே. எல்லோரும் இன்னாட்டு மன்னர் படத்தில் இவரது பாடல்கள் குறிப்பாக பட்டுக்கோட்டையாரின் என் அருமை காதலிக்கு வெண்ணிலாவே, மனமென்னும் வாணிலே மழை மேகமாகவே பாடல்கள் தெள்ளமுது.
பந்துலுவின் முரடன் முத்து (சிவாஜி பந்துலு கூட்டணியின் கடைசி படம்)
இதற்கும் இசை லிங்கப்பா. அருமையான பாடல்கள்
தாமரப்பூ குளத்திலே,கல்யாண ஊர்வலம் பாரு, செவ்வந்திப்பூ தோட்டத்திலே என அருமையான இனிமையான பாடல்கள்
பின்னர் தங்கமலர் என படங்களின் எண்ணிக்கை குறைந்தது.கன்னடத்தில்

ராஜன் நாகேந்திரா மற்றும் ஜி.ஜே.வெங்கடேஷ் போன்றோர் நிறைய பாடல்கள்
தர ஆரம்பித்தனர்.. இவரது முன்னேற்றம் பாதித்தது. தமிழில் எவ்வளவோ சிறப்பான பாடல்களை இவர் தந்தும் இன்றும் நாம் இவருக்கு உரிய மரியாதையை கொடுத்திருக்கிறோமா என்றால் இல்லை. மெல்லிசை மன்னர்கள் மற்றும் கே.வி.மகாதேவனுக்கு சற்றும் சளைத்தவரல்ல லிங்கப்பா. ஒரு மிகச்சிறந்த இசைக்கலைஞன்
அமுதை பொழியும் நிலவே உள்ளவரையில் இவரது பெயர் இருக்கும். ஒரு பாமர
இசை ரசிகனாக இந்த மகா கலைஞனுக்கு சாஷ்டாங்க வந்தனம்.
அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலில் ஒலிக்கும் சரோட் வாசித்தவரும் லிங்கப்பாவே --

"அமுதைப் பொழியும் நிலவே - நீ
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ..."

'தங்கமலை ரகசியம்' என்னும் திரையில் ஒலியேறிய பாடல் இது. பி.சுசிலாவின் தேனிசைக் குரலில் படத்தில் இருமுறை ஒலியேறும். சந்தோசத்திலும் சோகத்திலும் சுசிலா அசத்தி இருப்பார். பல வருடங்கள் ஆனாலும் இன்னும் நம் மலேசிய நாட்டில் அப்பாடலின் புகழ் மங்கவே இல்லை. வயதானோர் முதல் இளம் உள்ளங்கள் வரை இப்பாடல் அவர்களின் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ராகங்கள் பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது போனாலும் கவிஞர்கள் சொல்வது போல நம் மனதைக் கவர்ந்த மோகன ராகமோ இது?? கேட்க எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

'தங்கமலை ரகசியம்' நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.

"இகலோகமே, இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே"
என்றொரு பாடலும் இதில் இருந்தது. மொழி தெரியாது காட்டில் வளரும் சிவாஜி, இந்தப் பாடலில் தொடங்கி முடியும்போது தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்தவராக காட்டியிருப்பார்கள். இது ஒருவகையில் ரசிக்கும்படியாகவே இருந்தது. இரு குரலிசையான இதற்கு பி.லீலா மற்றும் டி எம் எஸ் இருவரும் குரல் கொடுத்திருந்தனர்.

அமுதைப் பொழியும் நிலவே' பாடலைப்போலவே, டி ஜி லிங்கப்பா இசையமைத்த இன்னொரு பாடலும் திரையில் இருமுறை இடம்பெறும்.
அது,
"சித்திரம் பேசுதடி - என்
சிந்தை மயங்குதடி
சித்திரம் பேசுதடி...."
என்ற பாடலாகும்.

மிக அருமையான இசையமைப்பில் உருவான பாடல் இது என்றே நான் சொல்லுவேன். ஆண் குரலில் மகிழ்ச்சியாக முதல் பாதியிலும் பெண் குரலில் சற்றே ஏக்கத்துடன் மறுபாதியிலும் இடம்பெற்று புகழைச்சேர்த்துக்கொண்ட பாடல் இது. திரையில் கதா நாயகிக்கு சூலமங்கலம் ராஜலக்ஷ்மியும் நாயகன் சிவாஜிக்கு டி எம் எஸ்ஸும் பாடி இருந்தனர். படம் : சபாஷ் மீனா

"ராதா மாதவ வினோத ராஜா
எந்தன் மனதின் ப்ரேம விலாசா" என்றும்,

"சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு
சும்மா சும்மா கூவுது
சோளக்கதிரு தாளம் போடுது.. தன்னாலே" என்றும,
'எங்கள் குடும்பம் பெரிசு' படத்துக்கு இசையமைத்து டி ஜி லிங்கப்பா பேரும் புகழும் சேர்த்துக்கொண்டிருந்தார் அப்போது.

தொடர்ந்து அவர் இசையமைப்பில் வந்த பாடல்களில் அவரின் மகத்துவம் பலருக்கும் தெரியத் தொடங்கியது.

இதோ சில பாடல்கள்..

"என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே"

"கோட்டையிலே ஒரு ஆலமரம் - அதில்
கூடு கட்டும் ஒரு மாடப்புறா"

"செவ்வந்திப்பூ செண்டு போல கோழிக்குஞ்சு - தன்
சிறகுக்குள்ளே குடியிருக்கும் கோழிக்குஞ்சு"

"கல்யாண ஊர்வளம் பாரு
மாப்பிள்ளை பெண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னுது பாரு
காரணம் நீயே சொல்லு..."

"பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளம் இல்லை - நல்ல
உள்ளம் இல்லை - என்றும்
பெண்ணாசை கொண்டோர்க்கு கண்ணும் இல்லை - இரு
கண்ணும் இல்லை"

"தங்க மலரே உள்ளமே
ததும்பி ஓடும் வெள்ளமே
அந்தி பகலாய் எந்தன் மனதில்
அருள் விளங்கும் தெய்வமே"

" ஆசை வைத்தால் அது மோசம்
அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம் கொள்வது பாவம்
பழகிப் பிரிவது துயரம் "

"அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி"

இவை மட்டுமா, 'வாழ்விலே ஒரு நாள்' படத்தில் இடம்பெற்ற,

"தென்றலே வாராயோ
இன்ப சுகம் தாராயோ
தேன் மலர்ச் சோலையிலே
சிங்கார வேளையிலே..."

என்னும் பாடல் டி எம் எஸ், யு ஆர் ஜீவரத்தினம் குரலில் இனிமையாய் ஒலித்ததை என்னைப்போன்ற பழைய பாடல் விரும்பிகள் பலர் இன்னும் நினைவில் வைத்திருப்பர். காலத்தால் அழிக்கமுடியாத அமுத கானங்களில் இதுவும் ஒன்று. அன்றைய மிகவும் மதிக்கப்பட்ட பெண்பாடகிகளுள் ஒருவரான யு ஆர் ஜீவரத்தினம் பாடிய இப்பாடலை ஒரு பொக்கிஷமாகவே பலரும் குறிப்பிடுகின்றனர்.

அவர் குரலுக்காக மட்டுமல்ல, அப்போதுதான் பின்னனி இசையில் பாடத்தொடங்கி குரல் கொடுத்துக்கொண்டிருந்த டி எம் எஸ்சின் இளைமைக்கால குரலை கேட்டு ரசிக்கவும் இப்பாடலை பல முறை கேட்கலாம்.

அற்புதமான இதுபோன்ற பல பாடல்களைத்தந்த இசையமைப்பாளர் டி ஜி லிங்கப்பா என்றென்றும் நம்மோடு நிலைத்து நிற்பார் அவரின் பாடல்கள் மூலம்......

Rj Nila
 

Leave a Reply