• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடு இந்தோனேசியா. 20 கோடி வாக்காளர்களை கொண்ட அங்கு இன்று அதிபர் தேர்தல் நடந்தது. மேலும் பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடந்தது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. மக்கள் காலையிலேயே வாக்குசாவடி மையங்களில் குவிந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.

தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதிபர் தேர்தலில் மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.

பாதுகாப்புத்துறை மந்திரியாக பிரபோலோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்களான அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். எந்த வேட்பாளர்களுக்கும் 50 சதவீத வாக்கு கிடைக்காவிட்டால் 2-வது சுற்றுத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்.

கருத்து கணிப்புகளில் பாதுகாப்பு மந்திரி பிரபோலோ வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 52 சதவீத வாக்குகள் பெறுவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இவர் தற்போதைய அதிபரின் ஆதரவை பெற்றவர் ஆவார். துணை அதிபர் பதவிக்கு அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை ஓட்டுப் பதிவு முடிந்ததும் அதில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்படுகின்றன.
 

Leave a Reply