• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சினிமா ரசிகர்கள் கொண்டாட மறந்த கலைஞன்..

சினிமா

தில்லானா மோகனாம்பாள் படம் ஹிட்டாக காரணமே இவரு தான்.. சினிமா ரசிகர்கள் கொண்டாட மறந்த கலைஞன்..

பழங்கால திரைப்பட ரசிகர்களுக்கு ’தில்லானா மோகனாம்பாள்’ என்று கூறிய உடனே சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோர் ஞாபகத்திற்கு வருவது போல, கொத்தமங்கலம் சுப்புவின் பெயரும் ஞாபகம் வரும். இந்த படத்தில் அவர் திரைக்கதை ஆசிரியராக பணிபுரிந்ததுடன் அவரது திரைக்கதையால் இந்த படம் மிகச்சிறந்த அளவில் ஒரு பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகி பெயர் எடுத்திருந்தது.

நடிகர், பாடல் ஆசிரியர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பல அவதாரங்களில் கொத்தமங்கலம் சுப்பு ஜொலித்தார். கடந்த 1910 ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறு வயதிலேயே பாடல்கள் எழுதுவதில் வல்லவரானார். மேலும் இவர் புத்தகங்கள் படிப்பதிலும் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார். அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் இவருடைய விருப்பத்திற்குரியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சுப்பு, சிறுவயதிலேயே தாயாரை இழந்ததால் தந்தையின் கட்டுப்பாட்டில் வளர்ந்தார். உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவர் முதலில் ஒரு மரக்கடையில் வேலை செய்தார். ஆனால் இவரது கவனம் முழுவதும் நடிப்பு நாடகங்கள் எழுதுவதில் தான் இருந்தது என்பதால் நாடகக் குழுவில் இணைந்தார்.

கொத்தமங்கலம் சுப்புவின் திறமையை நேரில் கண்ட எஸ்எஸ் வாசன் அவரை தன்னுடைய பல படங்களில் பணிபுரிய கேட்டுக் கொண்டார். மாதம் 300 ரூபாய் ஊதியம் பெற்ற அவர், எஸ் எஸ் வாசன் தயாரித்த பல படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணிபுரிந்தார்.

கொத்தமங்கலம் சுப்பு முதல் முதலாக 1948 ஆம் ஆண்டு வெளியான ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார். அதனை அடுத்து அபூர்வ சகோதரர்கள், அவ்வையார், வள்ளியின் செல்வன், வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதினார். இவரது திரைக்கதையால் தான் வஞ்சிக்கோட்டை வாலிபன் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

அதேபோல் சிவாஜி கணேசன், வைஜெயந்தி மாலா நடித்த இரும்புத்திரை, சிவாஜி கணேசன் நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை ஆகிய படங்களுக்கும் திரைக்கதை எழுதினார். தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு திரைக்கதை எழுதும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கதையை இவரால் மட்டுமே சிறப்பாக திரைக்கதை எழுத முடியும் என்று பட குழுவினர் நம்பினர். அந்த நம்பிக்கையை காப்பாற்றிய கொத்தமங்கலம் சுப்பு மிக சிறப்பாக திரைக்கதை எழுதி இந்த படம் மெகா ஹிட்டாக மாறவும் உதவினார்.

இந்த நிலையில் சிவாஜிகணேசன் நடித்த விளையாட்டு பிள்ளை என்ற படத்தின் கதையையும் இவர் எழுதினார். இது தவிர கொத்தமங்கலம் சுப்பு சில படங்களை இயக்கவும் செய்துள்ளார். குறிப்பாக எம்.கே. ராதா, சுந்தரி பாய் நடிப்பில் உருவான ’கண்ணம்மா என் காதலி’ என்ற படத்தை 1945 ஆம் ஆண்டு இயக்கினார். ஆனால் இந்த படத்தின் பிரதி தற்போது இல்லை என்பது சோகமான ஒரு தகவல்.

மேலும் கொத்தமங்கலம் சுப்பு அவ்வையார், வள்ளியின் செல்வன் போன்ற படங்களையும் இயக்கினார். கொத்தமங்கலம் சில படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். நாம் இருவர், சக்கரதாரி, வள்ளியின் செல்வன், ஆடிப்பெருக்கு, அன்னை, பழனி போன்ற படங்களில் இவரது பாடல்களும் இடம்பெற்றுள்ளன. கொத்தமங்கலம் சுப்பு சிவாஜி கணேசன் நடித்த பாவ மன்னிப்பு என்ற திரைப்படத்தில் ஆயுர்வேத டாக்டர் கேரக்டரில் நடித்திருப்பார்.

1970 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் திரை உலகில் இருந்து முற்றிலும் விலகினார். 1967 ஆம் ஆண்டு அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. வில்லுப்பாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்ட கொத்தமங்கலம் சுப்பு ’காந்தி மகான்’ கதையை வில்லுப்பாட்டு மூலம் தமிழக முழுவதும் நடத்தினார். நடிகர் மற்றும் பன்முக கலைஞரான கொத்தமங்கலம் சுப்பு 1974 ஆம் ஆண்டு பிப்ரவரி 1415ஆம் தேதி தனது 63வது வயதில் காலமானார்.

தேன்மொழி


 

Leave a Reply