• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கதாசிரியர் அ. செ. முருகானந்தன் பற்றிய ஒரு பார்வை.....

சினிமா

1921ஆம் ஆண்டு பிறந்த அ. செ. முருகானந்தன் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் மாணவனாக இருந்தபோதே எழுதத் தொடங்கியவர். ஈழகேசரி இதழின் கல்வி அனுபந்தத்தில் எழுதி வந்தார். இலக்கியச் சூழல் மிக்க வீடு,  அன்னையின் உற்சாகம் என்பன இவரை மிகவும் ஊக்கப்படுத்தின.

1941இல் ஈழகேசரி வார இதழ் ஆசிரிய குழுவில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிய இவர் 40களிலேயே தேசிய, அரசியல், சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றிச்  சிந்தித்து சமூகப் பிரக்ஞையோடு பல கதைகளை எழுதியிருக்கிறார்.

எழுத்தாளர் வரதருடன் இணைந்து 1943இல் மறுமலர்ச்சி சங்கமும் மறுமலர்ச்சி பத்திரிகை தோன்றவும் காரணமானவர். மறுமலர்ச்சி இதழின் தோற்றம் ஈழத்து எழுத்தாளர்களைத் தமிழ்நாடு முழுமையாக உணர்ந்து கொள்ள வழி வகுத்தது.

ஈழகேசரியைத் தொடர்ந்து மறுமலர்ச்சி, எரிமலை, சுதந்திரன், வீரகேசரி ஆகிய இதழ்களிலும் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு இதழிலும் பணியாற்றியுள்ளார்.

அ. செ. முருகானந்தன் அவர்கள் சிறுகதைகள், நாவல், குறுநாவல், நாடகம், விமர்சனம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, வரலாறு, செய்திக் கடிதம், வானொலி நிகழ்ச்சி என பல துறைகளிலும் நிறைய எழுதியுள்ளார்.

யாழ்ப்பாடி,  யாழ்தேவி,  பீஷ்மன்,  முருகு,  நீலாம்பரி,  காங்கேயன்,  கதிரவன்,  இளவேனில் என பல புனைபெயர்களில் எழுதியுள்ளார். "புகையில் தெரிந்த முகம் " இவரது மண்மணம் கமழும் ஈழத்தின் தரமான குறுநாவல்களில் ஒன்று. " மனிதமாடு " 1986இல் வெளிவந்த ஒரேயொரு சிறுகதைத் தொகுதியாகும்.

தமிழ்நாடு அலையன்ஸ் கம்பனி வெளியிட்ட " கதைக்கோவை "  தொகுதியிலும் சிற்பி சரவணபவன் தொகுத்த " ஈழத்துச் சிறுகதைகள் " தொகுதியிலும் இவரது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 

1973ஆம் ஆண்டில் தெல்லிப்பளை கலைப் பெருமன்றம் அ. செ. முருகானந்தன் அவர்களிற்கு "சிந்தனைச் செல்வர் " என்ற பட்டத்தினை வழங்கி கெளரவித்தது.

11/02/24 அன்று நான் வாசித்தளித்தவிருக்கும் " காளிமுத்துவின் பிராஜாவுரிமை"  சிறுகதை 1994இல் வெளியிடப்பட்ட  இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் இரண்டாவது தொகுதியான " ஒரு கூடைக் கொழுந்து " நூலில் இடம்பெற்றுள்ளது. மாருதம், ஆனி 1983 (மறுபதிப்பு) நவஜீவனம் (1951 - 52), விவேகி  (1967), ஈழத்துச் சிறுகதை மணிகள் (1973) ஆகியவற்றிலும் வெளிவந்தது.

Anandarani Balendra

Leave a Reply