• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தம்மை உயர வைத்த ஏணியைப் போற்றத் தவறாத எம்.ஜி,ஆர்

சினிமா

நீண்டு மெலிந்த தேகம். சற்றே குழி விழுந்த ஆனால் ஒளியுமிழும் கண்கள். சிவந்த நிறம். பேசத் துடிக்கும் உதடுகள். ஆனால் நினைத்ததைப் பேச முடியாது. தடுக்கும் பக்கவாத வியாதியின் அழுத்தம். உற்சாகமாகக் கதை சொல்லிப் பழக்கப்பட்ட அந்த நாக்கு இப்போது அரைமணி நேரம்கூடத் தெளிவாகப் பேச முடியாத பரிதாபம்.

வரவேற்பரையின் முகப்பில் இளமைப் பொலிவுடன் அழகு ததும்ப திரைப்பட ஹீரோவைப் போல் காட்சியளிக்கும் இளைஞரின் படம். மலைத்துப் போகிறோம்! இளமை எழுதிய அழகிய ஓவியம், கால வெள்ளத்தால் கரைந்து போனதை நம்ப முடியவில்லை.

எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் அவரது மனம் கவர்ந்த கதாசிரியராக இருந்தவர். இப்போது வயது எழுபத்தைந்து. பெயர் ரவீந்தர்.

ரவீந்தர் என்பது சொந்தப் பெயரல்ல. எம்.ஜி.ஆரால் பிரியத்துடன் சூட்டப்பட்ட பெயர். உண்மைப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன். சொந்த ஊர் நாகூர்.

காஜா முகைதீனுக்கு வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளில் கொள்ளைப் பிரியம். இதை அவரது வாய்வழிக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர், அவருக்கு ‘ரவீந்தர்’ எனத் திரையுலக நாமகரணம் சூட்ட அதுவே நிரந்தரப் பெயராய் மாறிப் போனது.

நடிகர் ‘டணால்’ தங்கவேலு, ‘நாம் இருவர்’ புகழ் சி.ஆர்.ஜெயலட்சுமி இணைந்து நடித்த ‘மானேஜர்’ எனும் மேடை நாடகத்திற்கு கதை வசனம் எழுதி அதன் வழி எம்.ஜி.ஆரின் அறிமுகத்தைப் பெற்றார்.

எம்.ஜி.ஆர் நடித்த ‘இன்பக் கனவு’, ‘அட்வகேட் அமரன்’ ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

திரையுலகில் இவர் முதன் முதலில் கதை-வசனம் எழுதிய படம் ‘குலேபகாவலி’. அந்தப் படத்திற்கு பிரபல கதை வசனகர்த்தா தஞ்சை ராமைய்யாதாஸ¥ம் கதை வசனம் எழுதியிருந்த காரணத்தால் புதியவரான இவரது பெயர் டைட்டிலில் இடம் பெறவில்லை.

1956-ல் வெளிவந்த இப் படத்துக்கு அடுத்தபடி, 1958-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’தான் முதன் முதலில் இவரது பெயரை வெள்ளித் திரையில் வெளிச்சப்படுத்தியது.

இந்தப் படத்திற்கும் இருவர் கதை வசனம் எழுதினர். கவியரசு கண்ணதாசன் பெயரோடு இவர் பெயரும் சேர்ந்து இடம் பெற்றது.

எம்.ஜி.ஆரின் மற்றொரு வெற்றிச் சித்திரமான ‘அடிமைப்பெண்’ படத்திற்கும் கதை-வசனம் எழுதியவர் ரவீந்தர்தான்.

32 படங்களுக்கு மேல் ரவீந்தர் கதை வசனம் எழுதியுள்ளார். ஆனால் இவரது பெயர் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டது சில படங்களில் மட்டுமே.

சிவாஜி நடித்த படம் ஒன்றுக்கும் ஜெமினி நடித்த படம் ஒன்றுக்கும் கதை வசனம் எழுதியிருக்கிறார்.

கலையரசி, சந்திரோதயம், என இவர் கதை வசனம் எழுதிய படங்களின் பட்டியல் நீள்கிறது. ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன் நடித்து வெளிவந்த ‘பாக்தாத் பேரழகி’ படத்துக்கும் கதை வசனம் இவர்தான்.

1951-ல் நூற்று ஐம்பது ரூபாய் மாதச் சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் வேலைக்குச் சேர்ந்த ரவீந்தர் , பின்னர் படிப்படியாக உயர்ந்து ஆயிரத்து ஐநூறு வரை பெற்றதைப் பரவசத்துடன் நினைவு கூர்கிறார்.

எம்.ஜி,ஆரை எந்த நேரத்திலும் அவரது வீட்டில் சந்திக்கும் உரிமை பெற்றிருந்தவர்களில் ஒருவராய் திகழ்ந்தார் ரவீந்தர்.

நாடோடி மன்னன் படம் வெளிவந்த சமயம் இவரது குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய் வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் அடையாறு பகுதியில் இவர் மனைவி பெயரில் ஒரு இடம் வாங்கித் தர முடிவு செய்தார். ஒரு எழுத்தாளனுக்கு உரிய தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் மனைவி பெயரில் இடம் வாங்க மறுப்பு தெரிவிக்க அத்துடன் அம்முயற்சி கிடப்பில் போடப்பட்டது எனச் சொல்லி வருந்துகிறார் ரவீந்தரின் மனைவி.

ரவீந்தர் தம் திருமணத்துக்கு அழைக்கச் சென்றபோது ‘என்ன வேண்டும்?’ என்று உரிமையோடு எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். தம் திருமணத்திற்கு கரியமணி சங்கிலி செய்யப் பணம் தாருங்கள் என கேட்டுள்ளார் ரவீந்தர்.

ரவீந்தர் விரும்பிய வண்ணம் தன் மூத்த சகோதரர் கையால் பணம் வழங்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.

ரவீந்தருக்கு தயக்கம். ‘என்ன விஷயம்?’ என்றார் எம்.ஜி,ஆர். ‘உங்க கையால் பணத்தை தரக் கூடாதா?’ என்று ரவீந்தர் கேட்டதற்கு ‘புரியாமல் பேசாதே! மாங்கல்ய நகைக்குரிய பணத்தை புத்திர பாக்கியம் உடையவர் கையால்தான் பெற வேண்டும்’ என்று சொன்னதைக் கண் கலங்க நினைவு கூர்கிறார் ரவீந்தர்.

அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகும் அவரைச் சந்திப்பதில் ரவீந்தருக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.

அ.தி.மு.க தோன்றுவதற்கு முன்னால் எம்.ஜி.ஆர் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டருந்த ‘இணைந்த கைகள்’ படத்திற்கு கதை வசனம் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கட்சி ஆரம்பித்து ஆட்சியையும் கைப்பற்றிய பிறகு படம் பாதியில் முடங்கிப் போனது.

தம்மை உயர வைத்த ஏணியைப் போற்றத் தவறாத எம்.ஜி,ஆர், 1982-ல் ரவீந்தருக்கு சிறந்த வசனகர்த்தாருக்குரிய சிறப்பு விருதும் பொற்பதக்கமும் வழங்கி ‘கலைமாமணி’ பட்டம் வழங்கி கௌரவித்தார்.

பத்தாண்டுகளுக்கு முன் தன்னைத் தாக்கிய வாதநோய் தரும் துன்பத்தை சிறிதும் பொருட்படுத்தாது எம்.ஜி.ஆர் என்ற வார்த்தையைக் கேட்ட அளவில் கண்களில் ஒளி பொங்க நாக் குழற உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்.

அவருக்கு உற்ற துணையாகத் திகழும் அவரது மனைவி, அவர் தடுமாறும்போதெல்லாம் தெளிவான விளக்கம் தருகிறார். ரவீந்தர் தம்பதியினருகு மூன்று மகன். மூன்று மகள்.

இப்போது ஸ்டெல்லா மேரி கல்லூரி பின்புறம் உள்ள எல்லையம்மன் காலனியில் ஒரு வாடகை வீட்டில் மெல்ல நகர்கிறது இவரது வாழ்க்கை. கூடவே வறுமையும்!

நன்றி : ஹ.மு.நத்தர்சா / தினமணி , 2002 .
ஆபீதின் பக்கம்

Leave a Reply