• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே ஒரு பொதுமன்னிப்பு... ஐரோப்பிய நாடொன்றின் பெண் ஜனாதிபதியின் பதவிக்கு வேட்டு

துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய விவகாரத்தில் ஹங்கேரிய முதல் பெண் ஜனாதிபதி பதவியை இழந்துள்ளார்.

ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய நபருக்கு ஜனாதிபதி Katalin Novak பொதுமன்னிப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த, வேறு வழியின்றி தமது பதவியை துறந்துள்ளார் ஜனாதிபதி Katalin Novak.

ஹங்கேரி மக்கள் ஒன்று திரண்டு வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், எதிர்க்கட்சிகளும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்தே 46 வயதான Katalin Novak பொதுமன்னிப்பு விவகாரத்தில் தாம் தவறிழைத்ததாக குறிப்பிட்டு, பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அத்துடன் தமது செயல் பாதிக்கப்பட்டவர்களை காயப்படுத்தியிருக்கும் என நம்புகிறேன் என்றும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறார்கள் மற்றும் குடும்பங்களை பாதுகாக்கவும், ஆதரவளிக்கவும் தாம் எப்போதும் முன்வரிசையில் இருப்பதை உறுதி செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2022 மார்ச் மாதம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக Katalin Novak பொறுப்புக்கு வந்தார்.

இந்த நிலையில் சிறார் காப்பகங்களுக்கான முன்னாள் துணை இயக்குனர் ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதே தற்போது ஜனாதிபதவிக்கு வேட்டு வைத்துள்ளது. குறித்த முன்னாள் துணை இயக்குனர் தமது மேலதிகாரியின் சிறார் துஸ்பிரயோக விவகாரத்தை மூடிமறைக்க உதவியதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த நபருக்கு ஜனாதிபதி Katalin Novak பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில் தான் இந்த விவகாரம் பத்திரிகை ஒன்றில் கசிந்துள்ளது.

இதனையடுத்தே பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக Katalin Novak தமது பதவியை துறந்துள்ளார்.

Leave a Reply