• Welcome to TamilsGuide
செய்திகள் 1

18 வருடங்களுக்கு பிறகு புனரமைக்கப்படவுள்ள வீதி

இலங்கை

சுமார் 18 வருடங்களாக புனரமைக்கப்படாத யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிராம மக்களிடமிருந்து கிடைத்த கோரிக்கைக்கு அமைய, சுமார் 2.34 கிலோமீற்றர் வீதியை புனரமைப்பு செய்வது தொடர்பில் உள்ளுராட்சிமன்ற ஆணையாளருக்கு, ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, சாவகச்சேரி பிரதேச சபையினால் வீதி புனரமைப்பிற்கான மதீப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை முழுமையாக புனரமைக்க 42 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியானது ஜே-320 மற்றும் ஜே-321 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் இடைப்பட்ட வீதியாக காணப்படுவதால் இந்த இரண்டு பகுதி மக்களும் வீதியை பயன்படுத்துகின்றனர்.

அத்துடன் நூற்றுக்கணக்கான மாணவர்களும் இந்த வீதியை பயன்படுத்துகின்றனர். குன்றும், குழியுமாக காட்சியளிக்கும் இந்த வீதியானது மழைக்காலங்களில் வெள்ளத்தால் மூடப்படும் என கிராம மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இதனால் குறித்த வீதியை புனரமைப்பு செய்து தருமாறு கொடிகாமம், மீசாலை வடக்கு இராமாவில் கிராம மக்கள், வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply