• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போருக்கு மத்தியில் ஆயுதப்படை தலைமை தளபதியை நீக்கிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் நாட்டின் ஆயுதப்படை தலைமை தளபதியாக இருந்தவர் வலேரி ஜலுன்ஸ்யி. இவரை அந்நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி அதிரடியாக நீக்கியுள்ளார். இருவருக்கும் இடையில் உரசல் இருந்து வந்த நிலையில் தற்போது ஜெலன்ஸ்கி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

ரஷியப் படைகள் உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தபோது இவரது தலைமையிலான ஆயுதப்படை சிறப்பாக செயல்பட்டது. இதனால் இரும்பு தளபதி என அழைக்கப்பட்டார்.

ரஷியாவை தொடக்கத்தில் சமாளித்த போதிலும், அதன்பின் ரஷியப்படைகள் உக்ரைனுக்குள் சென்று பேரழிவை ஏற்படுத்தியது.

ரஷியாவுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில், தலைமை தளபதி நீக்கப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்படும் நபர் எப்படி படைகளை வழிநடத்திச் செல்வார் என எதிர்பார்ப்புடன் கூடிய கேள்வி எழுந்துள்ளது.

ரஷியப்படைக்கு எதிராக உக்ரைன் எதிர்தாக்குதல் என்ற யுக்தியை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ரஷிய படைகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தாத போதிலும், உக்ரைன் படையால் சிறிய அளவிலேயே முன்னேற முடிந்தது. தொடர்ந்து முன்னேற முடியாமல் தவித்து வருகிறது. உக்ரைன் போரில் சுமார் 1000 கி.மீட்டரை இழந்துள்ளது.

புதிதாக நியமிக்கப்படும் தளபதி தலைமையில் உக்ரைன புதிய வியூகத்தின் போரை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுதம் வழங்க உத்தரவாதம் வழங்காத நிலையில், ரஷியா தொடர்ந்து டிரோன் தாக்குதல் மூலம் வளங்களை அழிப்பதை தடுக்க உக்ரைன் அதிக அளவில் செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

டிரோன்கள் மற்றும் பிற மேம்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் மட்டுமே உக்ரைன் ரஷ்யாவின் மிகப்பெரிய ராணுவத்துடன் போட்டியிட முடியும் என வலேரி ஜலுஸ்ன்யி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply