• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவு....

சினிமா

இந்தப்பாட்டு நீங்க பார்த்திருப்பீங்க. அதுல ரஜினியும் அவர் தங்கையும் உள்ள வீட்டு சுவரில் ஜீசஸ் படமும், சிலையும் இருக்கும்.
'தர்மயுத்தம்' பட ஷுட்டிங் நடக்கும் போது ரஜினி கொஞ்சம் வயலண்ட் மூடுல இருந்தார். ஷுட்டிங் வந்தாலும் அவர் சரக்கடிச்சுட்டு தான் வருவார். காரணம் அவர் மூன்று ஷிப்ட்டும், மூன்று பட வேலையும் செய்வார். உறக்கம் கிடையாது. உறக்கம் ஒழிக்க ஜர்தா பீடா போடுவார்.
தர்மயுத்தம் ஷுட்டிங் நடந்த வீடு ஒரு கிறிஸ்தவ தொழிலதிபர் வீடு. அந்த வீட்டு அம்மாவுக்கு வீட்டை ஷூட்டிங்குக்கு கொடுப்பதில் அவ்வளவாக விருப்பமில்லை. ஆனால் குழந்தைகள் ரஜினி படம் என்று சொன்னதால் ஆசைப்பட மாடியில் இருந்து கொண்டு கீழே மட்டும் கொடுத்தார்கள்.
தினம் தினம் ஷீட்டிங் ஏற்பாடு செய்வதும், பின் நின்று போவதுமாக செல்வதும், ஹீரோ தான் காரணம் என்பதும் அந்தம்மாவுக்கு தெரிய வருகிறது. ஒரு நாள் ரஜினி மாடியிலிருந்து இறங்கி வந்த அந்தம்மாவை பார்த்து அதிர்ச்சியாகி நின்று விடுகிறார். பின் "உங்கக்கிட்ட பேசணும் போல இருக்கு..." எனச்சொல்ல அந்தம்மாவோ ரஜினியை பார்த்து "நானும் உன்கிட்ட பேசணும்...சில அறிவுரைகள் சொல்ல வேண்டியது இருக்கு..." எனச்சொல்ல அடுத்த நாள் சரியாக வந்து எதிரே நிற்கிறார் ரஜினி. நின்றதோடு இல்லை. உடனே காலில் விழுந்து "அம்மா என்னை ஆசிர்வதியுங்கள்..." என விழுந்து விடுகிறார்.  அந்தம்மா "தினம் இப்படி குடிச்சிட்டு வந்தா ஷுட்டிங் எப்படி நடக்கும்..?" எனக்கூற அந்த அம்மாவையும், அவர் கேள்வியை பார்த்த ரஜினி அதிர்ச்சியாகிறார். 
"ஸாரிம்மா...நான் இதுவரைக்கும் இப்படி சத்தியம் செய்ததில்லை. இப்போது சொல்கிறேன். சத்தியமாக இனிமேல் ஷூட்டிங் போது குடிக்க மாட்டேன்"எனச்சொல்லி ஒழுங்காக வர த்தொடங்குகிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக குடியும் சில வேளை என மாறி குடிப்பதையே நிறுத்தும் அளவுக்கு போகிறது. நாளுக்கு நாள் சந்தித்த ரஜினி சில நாட்களுக்குப்பிறகு வருவதும் நின்று போகிறது.
திடீரென ஒரு நாள் அந்தம்மாவுக்கு டாக்டர் செரியனிடமிருந்து போன் வருகிறது. ரஜினி ரொம்ப வயலன்ட்டாகி ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், அம்மா அம்மா என அழைத்ததாகவும் யார் எனக்கேட்ட போது இவரின் பெயரைச் சொன்னதாகவும், யார் பேச்சுக்கும் அடங்காதவராக இருக்கிறார் எனக்கேட்டதும் ஆஸ்பத்திரி விரைகிறார் அந்தம்மா. அங்கே ரஜினியோடு டாக்டர் செரியனும், நர்சுகளும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தம்மா போய் ரஜினியை சமாதானப்படுத்த அவர் உடனே ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறி இந்தம்மா வீட்டுக்கு வந்திருக்கிறார்.
 அதோடு "ரஜினி இங்கேயே இருக்கலாமா?" எனக்கேட்க செரியனோ கை விட்ட கேஸான ரஜினி தங்க சம்மதிக்க அங்கேயே தங்கச்செய்கிறார் அந்தம்மா.
அடுத்த நாள் நன்றாக தூங்கியதாக ரஜினியே டாக்டரிடம் சொல்ல அவருக்கு ஆச்சர்யம். அப்படி நான்கு மாதம் அந்த 'தர்மயுத்தம்' வீட்டில் ரஜினி தங்குகிறார்.
 டாக்டர் அந்தம்மாவுக்கு போன் செய்து "எவ்வளவு பெரிய காரியத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள். ஒரு மனிதனுக்கு மறுவாழ்வு தந்திருக்கிறீர்கள்" என பாராட்டி இருக்கிறார்.  இப்படி தினம் போய் ரஜினியை பார்த்துக்கொண்டு, அவர் செலுத்திய அன்பினால் ரஜினி ஷூட்டிங் செல்லத்துவங்கினார். இவரே தன் வேலைக்காரர்களை ரஜினியோடு அனுப்பி எந்த அசம்பாவிதங்களும் படப்பிடிப்பில் நடக்காமல் பார்த்துக்கொண்டு பத்திரமாக அழைத்துக்கொண்டு வர உத்தரவிடுகிறார். 

நிம்மதியாக இருக்க வீடும், அன்பும், குழந்தைகளும், பரிவும் கொடுத்த அந்த வீட்டம்மா பின் அமெரிக்கா செல்ல நேர்ந்தது. "அமெரிக்காவுக்கு நீங்கள் போய் விட்டால் நான் என்ன செய்யப்போகிறேனோ?" என புலம்ப ஆரம்பித்து விட்டாராம் ரஜினி. "பத்திரமாக இரு. செலவுகளை குறைத்து செட்டிலாக பாரு " என அறிவுரைகளை சொல்லி விட்டு சென்ற அந்தம்மா மூன்று மாதம் கழித்து வந்து பார்த்த போது ரஜினி ஆளே மாறிப்போயிருந்தார். 
இப்போது அவர் ஒரு பெண்ணைப் பார்த்து திருமண பந்தத்தில் இணைவது தான் தன் முன்னேற்றத்துக்கு நல்லது என உணர்ந்திருப்பதையும் அதை நோக்கி பயணிப்பதையும் கண்கூடாக பார்த்தார் அந்தம்மா. அதை விட வேறு என்ன வேண்டும் அவருக்கு. அவர் பெறாத மகனல்லவா?.
காலம் இந்தச்சம்பவத்துக்குப்பிறகு இருவரையும் இரு வேறு தளங்களுக்கு அழைத்துச்சென்றது. அம்மாவின் அன்பினால் மாறிய ரஜினி சூப்பர் ஸ்டாராகி லதா ரங்காச்சாரியை திருமணம் செய்து கொண்டு பெரும்புள்ளியாக உருவெடுத்தார்.
யாரிடமும் அதிகம் பழகாத அந்தம்மா ரஜினியை கவனித்து மாற்றிய பிறகு பெரிய சமூக சேவையாளராக மாறினார். அவர் பெயர் ரெஜினா வின்சென்ட். 80களின் அறியப்பட்ட சமூக சேவகி.
(அந்தப்படத்திலும் ரஜினி வயலென்ட்டாகும் போது கட்டிப்போட்டு தவிக்கும் லக்ஷ்மி ஸ்ரீயும், அவர் அப்பா அந்த வீட்டுக்காரர் சுந்தர்ராஜன் தான் தத்தெடுத்து வளர்ப்பதாக கதையும் சில ஒற்றுமைகளை காட்டுவது ஆச்சர்ய நிகழ்வு)
"கண்ணீரினால் நீராட்டினால் 
என் ஆசை தீராதம்மா...
முன்னூறு நாள் தாலாட்டினால் 
என் பாசம் போகாதம்மா...
என் ஆலயம்...பொன் கோபுரம்...ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா...."
எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள்......

Selvan Anbu
 

Leave a Reply