• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காணாமல் போன 25 ஆயிரம் பணிகள்

2024 வருட ஜனவரியில் அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 25,000 ஊழியர்களை "லே ஆஃப்" எனப்படும் கூட்டு பணிநீக்கம் செய்தன.

புது வருட தொடக்கத்திலேயே இதன் அளவு பரவலாக அதிகரித்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் அதிகப்படியான எண்ணிக்கையில் பல நிறுவனங்கள் பணியமர்த்தின. தற்போது உலக பொருளாதாரம் நலிவடைந்து வருவதால் அதிகமாக உள்ள ஊழியர்களை நிறுவனங்கள் வெளியேற்றுகின்றன.

சில வருடங்களாகவே, "ரெவன்யூ பர் எம்ப்ளாயி" (RpE) எனப்படும் ஒவ்வொரு ஊழியராலும் நிறுவனம் பெறும் வருவாய் குறைந்து வருகிறது. அதிக ஊழியர்களால் செலவினங்கள் அதிகரிப்பதை குறைக்க நிறுவனங்கள் பணிநீக்கத்தை ஒரு வழிமுறையாக கடைபிடிக்கின்றன.

இந்நிறுவனங்கள் அனைத்தும் பங்கு சந்தையில் பதிவு பெற்றவை. கடினமான பொருளாதார சூழ்நிலையிலும் வருவாய் குறையாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக முதலீட்டாளர்களுக்கு காட்ட வேண்டிய கட்டாயம் இந்நிறுவனங்களுக்கு உள்ளது. எனவே ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதன் மூலம் தங்கள் பங்குகள் கணிசமாக ஏற அவை வழிவகுக்கின்றன.

ஒரே துறையில் உள்ள பல நிறுவனங்கள் ஒரே காலகட்டத்தில் லே-ஆஃப் செய்வதால், துறை சார்ந்த சிக்கல் இருப்பதாக கருதி, முதலீட்டாளர்கள், நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட தவறான முடிவுகளை பொருட்படுத்த மாட்டார்கள் என வாஷிங்டன் வணிக மேலாண்மை துறை பல்கலைக்கழக பேராசிரியர் ஜெஃப் ஷுல்மேன் தெரிவித்தார்.

தொழில்நுட்ப துறையில் துவங்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி வழங்கி வந்த முதலீட்டாளர்கள் குறைந்து வருகின்றனர். எனவே, அவையும் பணிநீக்கத்தில் ஈடுபடுகின்றன.

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறை பெரும் வளர்ச்சி பெறும் என நம்பி, 1 வருடத்திற்கும் மேலாக இந்நிறுவனங்கள் பிற துறைகளில் முதலீடுகளை குறைத்து ஏஐ துறையில் முதலீடுகளை அதிகரித்து வருவதும் ஒரு காரணம்.

உலக பொருளாதார மந்தநிலை நீடித்தால், இந்த சிக்கல் மேலும் தீவிரமடையலாம் என பொருளாதார வல்லுனர்களும், மனிதவள நிபுணர்களும் எச்சரிப்பதால் மென்பொருள் துறை ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
 

Leave a Reply