• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரைக்கதை எழுதுவது எப்படி ? -புத்தகத்தில் - சுஜாதாவின் என்னுரை

சினிமா

இந்தப் புத்தகத்தை எழுதுவது பற்றி திரு.கமல்ஹாசனுடன் பத்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே பேசியிருக்கிறேன்.
அப்போது நான் ஓரிரு படங்களுக்கு 'வசனம்' எழுதியிருந்தேன். அவர்கள் ஒரு 'ஸீன் ஆர்டர்' கொடுப்பார்கள். அதை வசனமாக எழுதித் தருவேன். கதை அமைப்புக்கு எந்த பொறுப்பும் கிடையாது. இப்படித்தான் பல எழுத்தாளர்கள் இன்றும் வசனம் எழுதுகிறார்கள்.
என் நாவல்கள் சிலவற்றை திரைப்படமாக எடுத்துக் கெடுத்து வைத்திருந்தார்கள்.

அப்போது விக்ரம் படத்திற்கு கமலும் நானும் திரைக்கதை எழுதினோம். தமாஷாக இருந்தது. ஆனால், அப்போதெல்லாம் கூட இந்தப் புத்தகத்தை எழுத எனக்கு தைரியம் வரவில்லை. அதற்கான தகுதி எனக்குக் கிட்டிவிட்டதாக நான் கருதவில்லை. அதன்பின், நட்புக்காகச் சில ஃபிலிம் டைரக்டர்களுக்கு சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதிக் கொடுத்தேன். அவைகளின் கதையிலும் கை வைத்தேன்.
நினைத்தாலே இனிக்கும், நாடோடி தென்றல் போன்றவை வியாபார கட்டாயங்களினாலும் கால்ஷீட் உபாதைகள் ஆகும் எழுதியதும் எடுப்பதும் வேறுபடும் என்கிற பாடத்தை எனக்குத் தந்தனவே தவிர திரைக்கதை பற்றி புத்தகம் எழுதும் தகுதியை தரவில்லை.
அதன்பின் கமலுடன் மருதநாயகம் எழுதினோம். முழுமையான திரைக்கதை அது. சினிமாவாக இன்னும் வராதது தமிழ் சினிமாவுக்கு பெரிய இழப்பு.
அதன்பின் தொண்ணூறுகளில் கொஞ்சம் கொஞ்சம் இந்த வித்தை பிடிபட ஆரம்பித்தது. ரோஜா, திருடா திருடா, இந்தியன், கண்ணெதிரே தோன்றினாள். முதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், நிலாக்காலம், இன்ஜினியர், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களுக்கு எழுதியபோது கொஞ்சம் கொஞ்சமாக சமாச்சாரம் புரிய ஆரம்பித்தது.
அவர்களின் டைரக்டர்கள் கூட கதை விவாதங்களில் கலந்து கொண்ட போது, திரைக்கதை என்பது வேறு பிராணி, சிறுகதை நாவல்களிலிருந்து மிகவும் மாறுபட்டது. சொல்லும் முறை தனிப்பட்டது. ஒரு திரைப்படத்துக்கு வசனம் என்பது இரண்டாம் அல்லது மூன்றாம் பட்சம். போன்றவைதான் முக்கியம்.
பக்கம் பக்கமாக வசனம் எழுத வேண்டியதில்லை. ஒரு சீனுக்கு இரண்டு பக்கமே அதிகம். இதுபோன்ற விஷயங்கள் தெளிவாயின.
இதை பற்றிய வெளிநாட்டு புத்தகங்கள் பலவற்றை படிக்க ஆரம்பித்தேன். பல உன்னத திரைப்படங்களின் திரைக்கதைகளையும் படித்து அவைகளின். உத்தியை அறிந்துகொண்டேன். Syd Field, Eugene Vale, Linda Cowgill போன்றவர்களின் புத்தகங்களையும் இந்த இயலின் தாதாவான Paddy Cheyefsky - திரைக்கதைகள், டெலிவிஷன் கதைகள், ரேடியோ நாடகங்கள், மேடை நாடகங்கள் அத்தனையும் படித்தேன்.
அவை மேல்நாட்டு திரைப் படங்களின் ‘ மூன்று அங்க’ அமைப்பை வலியுறுத்தின. நமக்கு முழுவதும் ஒத்து வராது. ஐரோப்பிய டைரக்டர்கள் ஹாலிவுட் முறையை மீறி சில சிறந்த படங்களை செய்திருப்பதையும் கவனித்தேன்.
நம் இந்திய திரைப்படங்களை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடும்போது முக்கியமாக சில வேறுபாடுகளை கவனிக்க முடியும். நம் படங்களில் பாட்டு முக்கியம். கதையை எழுதிவிட்டு சுவிட்சர்லாந்து நியூசிலாந்து போய் பாடிவிட்டு வருகிறோம், காத்திருங்கள் என்றால் காத்திருப்பார்கள். படங்கள் அனைத்தும் ஒருவகையில் மியூசிகல்கள்தான்.
மேலும் அளவில் நம் படங்கள் அவர்களின் இரண்டு படங்கள். அதனால் இன்டர்வெல் பிளாக் ஒன்று ஏற்படுத்தி டாய்லெட் போகிறவர்கள் திரும்பி வருமாறு சுவாரஸ்யம் அமைக்க வேண்டும்.
நம் படங்களில் ஹாலிவுட்டின் மூன்று அங்க அமைப்பு இவ்வாறு சற்றுத் திருப்பி அமைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் திரைக்கதை பற்றி ஏராளமான புத்தகங்கள் உள்ளன. அவை காட்டும் மேற்கோள்கள் படங்கள் பலவற்றை நாம் இன்ஸ்டிடியூட்டில் தான் பார்க்க முடியும்.
எல்லோரும் Battleship Potemkin, Citizen Kane, Bicycle Thieves என்று அலட்டுவார்கள் இல்லை டிவிடி விசிடி கடைகளில் தேடவேண்டும். நான் யோசித்ததில் தமிழ் சினிமா திரைக்கதை பற்றி நாம் எழுதுகிறோம்; அதற்கு நல்ல உதாரணங்களை நாம் பார்த்த நம் சினிமாவில் இருந்தே காட்டுவதுதான் உத்தமம் என்று தீர்மானித்தேன்.
நம் சினிமாவிலேயே நல்ல திரைக்கதைக்கான பல உதாரணங்கள் உள்ளன. அந்த வகையில் இந்த நோய் இந்திய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமாவுக்கு நல்ல திரைக்கதை அமைப்பது எப்படி என்பதை விளக்கும் நூல். இதை எழுதுவதும் முக்கிய காரணம் நம் சினிமாவில் மிக பலவீனமானது திரைக்கதைதான் என்கிற என் வலுவான நம்பிக்கை.
டெக்னாலஜி விஷயங்கள் , படப்பிடிப்பு, இசை இவைகளில் நாம் பாலிவுட்டுக்கோ ஏன் ஹாலிவுட்டுக்கோ சளைத்தவர்கள் அல்ல. திரைக்கதையில் தான் கோட்டை விடுகிறோம். வருஷத்துக்கு 100 படங்களில் 95 படங்கள் தோல்வியடைவது இக்காரணத்தினால்தான்.
கதையை எழுதிவிட்டு அதன்பின் படம் பிடிக்க வேண்டும் என்கிற ஆதார விதியைக்கூட பலர் கடைபிடிப்பதில்லை. செட்டில் உட்கார்ந்து பேப்பர் வைத்து எழுதுவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இதெல்லாம் பாவம் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.
அண்மையில் ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமான 'தில் சாத்தா ஹை' படத்தின் இளம் டைரக்டர் ஃபர்ஹான் அக்தர் ஒரு வருஷம் முன்பே அந்த ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிவிட்டு முக்கிய நடிகர்களை நாடகம் போல மனப்பாடம் செய்து வரச் சொன்னாராம். இதை என்னிடம் படம்பிடித்த ரவி கே சந்திரன் சொன்னார். இந்த அளவுக்கு வேண்டாம். திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு துவங்கினால் படத்தை சரியாக திட்டமிட்டு செய்ய முடியும். கால்ஷீட் விரயமாகாது. செலவு கணிசமாகக் குறையும்.
சமீபத்தில் நான் ஒத்துழைத்த "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தை முற்றும் வரை எழுதி முடித்த பின்புதான் மணிரத்னம் படம் பிடிக்கச் சென்றார். இது ஒன்றும் செப்பிடுவித்தை இல்லை என்று புரியும்படி நம் இளம் டைரக்டர்களுக்கு அலசிக்காட்டும் முயற்சிதான் இந்தப் புத்தகம்.
சில ஜாம்பவான்கள் இவன் யார் நமக்குச் சொல்ல என்று விலகிக் கொள்ளலாம். அவர்களும் திரைக்கதை எழுதாமல் படம் பிடிக்கச் சென்றால் துன்பப்படுவார்கள் என்பது மறுபடி, மறுபடி நிரூபிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதித் தந்த திரு.மணி ரத்னம் அவர்களுக்கும், இதைச் சிறப்பாக வெளியிடும் உயிர்மை பதிப்பகத்தின் மனுஷ்ய புத்திரனுக்கும், படியெடுத்த செல்வி. செல்விக்கும், எனக்குத் திரைக்கதை எழுத வாய்ப்பளித்த கே. பாலச்சந்தர், கமல்ஹாசன், பாரதிராஜா, ஷங்கர், மணி ரத்னம், ராஜீவ் மேனன், ரவிச்சந்திரன், காந்தி கிருஷ்ணா, ஜேடி -ஜெர்ரி, பெண்டாஃபோர் அதிபர் வி. சந்திரசேகரன்... அனைவருக்கும் நன்றி சொல்ல கடைமைப் பட்டிருக்கிறேன்.
இப்புத்தகம் தமிழ் சினிமாவுக்கு திரைக்கதை எழுதுவது பற்றி மட்டும்தான் பேசுகிறது. தொலைக்காட்சிக்கு எழுதுவதோ, மற்ற மொழிகளில் எழுதுவதோ பற்றிப் பிறகு யோசிக்க உத்தேசம்.

மைலாப்பூர்
தீபாவளி 2002
 

 

Leave a Reply