• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தகடு... தகடு!

சினிமா

அந்த வசனம் ‘தகடு.. தகடு’.. அந்த வில்லன் நடிகர் சத்யராஜ்.
என்னதான் வில்லன்களை வெறுத்தாலும் அவர்களிடமிருந்த தனித்தன்மையான நடிப்பிற்கு மக்கள் வரவேற்பை அளிக்கத் தயங்க மாட்டார்கள் என்பதற்கான முன் உதாரணம் எம்.ஆர்.ராதா. வில்லனாக அறிமுகமாகி பின்பு சூப்பர் ஸ்டார் என்னும் ஹீரோ அந்தஸ்தை எட்டிப் பிடித்தவர் ரஜினிகாந்த்.
இந்த வரிசையில் ஒரு முக்கியமான அடையாளத்தையும் வெற்றியையும் பெற்றவர் சத்யராஜ். இவரின் நக்கலான உடல்மொழியும் வசன உச்சரிப்பும் மக்களை வெகுவாக கவர்ந்தன. ‘தகடு.. தகடு’ என்கிற ஒரு சிறிய வசனம் இவரை வெற்றியின் உச்சியை நோக்கி நகர்த்திச் சென்றதில் ஒரு முக்கிய பங்கை ஆற்றியிருந்தது. சத்யராஜின் வெற்றிக்கு மட்டுமல்ல, ‘காக்கி சட்டை’ படத்தின் வெற்றிக்கும் இந்த அம்சம் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தது.
தற்செயலாக நிகழும் ஒரு விஷயம் ஒரு படத்தின் பிரமாண்டமான வெற்றிக்குக் காரணமாக அமைந்து விடும். இப்படி சினிமாவில் நிகழும் பல அதிசயங்களை யூகிக்கவே முடியாது.
சத்யராஜ் நடித்த குறிப்பிட்ட காட்சி எக்ஸ்பிரஸ் எஸ்டேட் பில்டிங்கில் (இப்போது எக்ஸ்பிரஸ் அவென்யூ) நடைபெற்றுக் கொண்டிருந்தது. நள்ளிரவில் இடியும் மின்னலுமாக இருந்த சமயம்.
“ஜனா... பாடிய நீதானே பார்சல் பண்ணே... தகடு எங்கே?” என்கிற வசனத்தை ஒரு துணை நடிகரைப் பார்த்து சத்யராஜ் கேட்க வேண்டும். இடி சத்தத்தில் அந்தக் கேள்வி துணை நடிகரின் காதில் சரியாக விழவில்லை. எனவே அவர் ‘என்ன?’ என்று கேட்டு விட சத்யராஜ் சமயோசிதமாக ‘தகடு... தகடு’ என்று அந்த வசனத்தை வித்தியாசமான உச்சரிப்பில் சொன்னார்.
சத்யராஜ் சொன்ன விதத்தை அப்போதே பாராட்டி மகிழ்ந்தவர் உடன் நடித்துக் கொண்டிருந்த ஹீரோவான கமல்ஹாசன். மற்றவர்களின் திறமைகளை நசுக்கி மிதித்து முன்னேற விரும்பும் ஹீரோக்களின் மத்தியில், ஒரு காட்சி நன்றாக வர வேண்டுமெனில் அதற்காக தன்னையும் பின்னே தள்ளிக் கொள்ளும் நாயகர்களில் ஒருவர் கமல். எனவே அவர் சத்யராஜின் திறமையை ஆதரித்ததிலும் ஊக்குவித்ததிலும் ஆச்சர்யமில்லை.
‘காக்கி சட்டை’ படத்தின் இயக்குநரான ராஜசேகருக்கு கூட ‘இந்த வசனத்தில் அப்படி என்ன சிறப்பு?” என்றுதான் முதலில் தோன்றியிருக்கிறது. ஆனால் இதை பார்வையாளர்கள் வரவேற்பார்கள் என்று முன்பே யூகித்திருக்கிறார் கமல். அது மட்டுமல்ல.., படத்தின் பல்வேறு இடங்களில் இந்த மாடுலேஷன் வருமாறு காட்சிகள் அமைக்கப்படுவதற்கும் காரணமாக இருந்திருக்கிறார்.
கமலைப் போலவே ‘தகடு தகடு’ என்கிற வசன உச்சரிப்பு, படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கப் போகிறது என்பதை கண்டுபிடித்தவர், படத்திற்கு வசனம் எழுதிய ஏ.எல்.நாராயணன். பல வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதி பழுத்த அனுபவம் கொண்ட இவர், படத்திற்கு வெற்றியைத் தேடித் தரப் போகும் ஒரு அம்சத்தை உடனே கண்டுகொண்டதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
‘காக்கி சட்டை’ படத்தின் கதை உருவானதே ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான். பாக்யராஜிடம் உதவியாளர்களாக இருந்த ஜி.எம்.குமாரும் லிவிங்ஸ்டனும் அவரிடமிருந்து வெளியேறி தங்களின் வாய்ப்புக்காக பல்வேறு இடங்களில் முயன்று கொண்டிருந்த சமயம். ஒரு கன்னட திரைப்படத்திற்காக கதை சொல்ல குமாரையும் லிவிங்ஸ்டனையும் தயாரிப்பு நிர்வாகத்தினர் அவசரமாக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது இவர்களிடம் கதை ஏதும் கைவசம் இல்லை. என்றாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற துணிச்சலில் கிளம்பி விட்டார்கள்.
காரிலிருந்து இறங்கியதும் ‘கதை ஏதும் இல்லையே.. என்ன செய்யப் போகிறோம்?” என்று லிவிங்ஸ்டனின் காதில் குமார் ரகசியமாக முணுமுணுக்க... படியில் ஏறிக் கொண்டிருந்த சமயத்தில் அன்றைய நாளிதழில் வெளிவந்த செய்தியில் இருந்த ஒரு சுவாரஸ்யமான முரணை லிவிங்ஸ்டன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

திரைப்படக் கல்லூரியில் தவறான சான்றிதழை தந்ததற்காக பாலுமகேந்திரா கைது செய்யப்பட்டிருந்த சமயம். அது தொடர்பான செய்தி ஒரு பக்கத்தில் வெளியாகியிருந்தது. அதே நாளிதழின் இன்னொரு பக்கத்தில் பாலுமகேந்திரா இயக்கிய படம் விருது பெற்றிருந்த செய்தியும் வெளியாகியிருந்தது. இதிலிருந்த விநோதமான முரண் அம்சத்தை லிவிங்ஸ்டன் சொன்னவுடன் அதிலிருந்த அடிப்படையான விஷயத்தைப் பற்றிக் கொண்டு உடனே ஒரு ‘இன்ஸ்டன்ட்’ கதையை தயார் செய்து அதை ‘இரண்டு மணி நேரம்’ தயாரிப்பாளர்களிடம் விவரித்தார் குமார். அந்தக் கதை ஒப்புதல் பெறப்பட்டு இவர்கள் ஒரு கணிசமான தொகையைக் கோர இறுதியில் சொற்பமான தொகையே கைக்கு வந்தது. என்றாலும் அப்போதைய பண நெருக்கடி கருதி பெற்றுக் கொண்டார்கள். அதுதான் ‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் அடிப்படையான கதை. ஆனால் அந்தக் கதை இன்னொரு நிறுவனத்திற்கு மாறியதிலும் சுவாரஸ்யமான பின்னணியுள்ளது.
லிவிங்ஸ்டன் ஊரில் இல்லாத சமயத்தில் சத்யா மூவிஸ் தரப்பிலிருந்து கதை சொல்லும் வாய்ப்பு வர, எவ்வித அவகாசமும் தரப்படாமல் குமார் அழைத்துச் செல்லப்பட்டார். வேறு கதை கைவசம் இல்லாத நிலையில் ‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் கதையைச் சொல்லி விட்டார் குமார். அது உடனே ஓகே செய்யப்பட்டு, கதையை மும்பையில் இருந்த கமலிடம் சொல்வதற்காக அன்று மாலையே கதாசிரியரும் இயக்குநர் குழுவும் விமானத்தில் பயணம் செய்ய வைக்கப்பட்டார்கள்.
சத்யா மூவிஸ் ஆர்.எம்.வீரப்பனை அபாரமான கதை ஞானம் உள்ளவர் என்று வியக்கிறார் ஜி.எம்.குமார். இவர் ‘காக்கி சட்டை’ படத்தின் கதையை, ஆர்.எம்.வீரப்பனிடம் சொல்லி ஒப்புதல் பெற்ற அனுபவமே சுவாரஸ்யமானது. ஜி.எம்.குமார் கதையை உற்சாகமாக சொல்ல ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வீரப்பனிடமிருந்து குறட்டை சத்தம் வர ஆரம்பித்திருக்கிறது. ‘தான் சொன்ன கதை பிடிக்கவில்லையோ’ என்று தயங்கி குமார் நிறுத்த ‘சொல்லுப்பா.. ஹீரோ.. அங்க போறான்.. அப்புறம்?” என்று தொடரச் சொல்லியிருக்கிறார் வீரப்பன். இப்படி குறட்டை சத்தத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது ‘காக்கி சட்டை’.
'ஆர்.எம். வீரப்பன் கதையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்' என்பதை உணரவே குமாருக்கு பல நிமிடங்கள் ஆகியிருக்கிறது. குமார் கதை சொல்லி முடித்ததும் அதில் வெற்றிக்கான அம்சங்கள் இருந்ததை உடனே கண்டு கொண்ட வீரப்பன், தயாரிப்பிற்கான ஒப்புதலை வழங்கி உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டார்.
படத்தின் கதையை கமலிடம் குமார் சொல்ல ஆரம்பித்துமே உற்சாகமாகி... “ஓ... ஹீரோ... பைப்ல ஏறணுமா... இப்படி ஏறினா சரியா வருமா...” என்று கதை விவாதத்தின் போதே பைப்பில் ஏறிக் காட்டினாராம் கமல். இப்படி பல விஷயங்களில் உடனடி ஆர்வம் காட்டியிருக்கிறார் கமல். 'ஒரு கதை பிடித்துவிட்டால் அதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதில் கமலைப் போன்று வேறு எவரையும் பார்க்க முடியாது’ என்று பிரமிக்கிறார் குமார். படத்தின் காட்சியிலும் சுவரில் இருக்கும் ஒரு பைப்பில் டூப் ஏதுமின்றி ‘சரசரவென’ கமல் ஏறி விடும் காட்சியைப் பார்க்க முடியும்.
‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் பிரமாண்டமான வெற்றிக்கு அதன் பாடல்கள் இன்றியமையாத அம்சமாக இருந்தது என்றால் அதில் மாற்றுக் கருத்தேயில்லை. இந்தத் திரைப்படம் என்றல்ல, சுமாராக அமைந்த பல திரைப்படங்களின் வெற்றிக்கும் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையுமே காரணமாக அமைந்தது.
செயற்கையான திணிப்பாக இருந்தாலும் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பாடல்கள் அவசியம் என்பது இப்போதும் இருக்கிறது. பாடல்களின் இனிமை ஒரு திரைப்படத்திற்கு விசிட்டிங் கார்டாக அமையும். பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த பார்வையாளர்கள், அரங்கைத் தேடி வருவதற்கு பாடல்களின் வெற்றி ஒரு பிரதான காரணமாக இருந்தது. அவர்கள் மீண்டும் மீண்டும் அரங்கிற்கு வருவதற்கும் பாடல்களின் வெற்றி அவசியம்.
சிவரஞ்சனி ராகத்தில் அமைந்திருந்த ‘கண்மணியே பேசு’.. என்கிற மெலடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கவர்ச்சி அம்சம் தூக்கலாக அமைந்திருந்த ‘பட்டுக் கன்னம்’ என்கிற பாடலின் பின்னணியில் வித்தியாசமாக அமைந்திருந்த செட்களை பார்வையாளர்கள் மிகவும் ரசித்தார்கள். (கலை: தோட்டா ஹேமசந்தர்). ‘பூ போட்ட தாவணி’ என்கிற அட்டகாசமான முறையில் இசையமைக்கப்பட்ட துள்ளலிசைப் பாடலும் முக்கியமானது. இந்த அனைத்துப் பாடல்களும் இன்றும் கூட இளைய தலைமுறை பார்வையாளர்களால் ரசிக்கப்படுகிறது. மேடைகளில் தொடர்ந்து பாடப்படுகிறது. ராஜாவின் மேதைமைக்கு இது உதாரணம்.
பாடல்களைப் போலவே சண்டைக்காட்சிகளின் பரபரப்பான இசைத் துணுக்குகளிலும் ராஜாவின் மேஜிக்கை காண முடியும்.
‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜசேகர். தன் பெயருக்குப் பின்னால் B.Sc.. என்கிற பட்டப்படிப்பை போட்டுக் கொள்வது இவரின் வழக்கம். அறிவியல் படிப்பு படித்திருந்தாலோ என்னமோ... வெகுசன மக்களின் கெமிஸ்ட்ரியைத் துல்லியமாக அறிந்திருந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்தார் ராஜசேகர். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரின் பல திரைப்படங்கள் பிரமாண்டமான வெற்றியை ஈட்டியதற்கு ராஜசேகரின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்த வகையில் ராஜசேகரை, இன்னொரு ‘எஸ்.பி.முத்துராமன்’ என்றே சொல்லலாம். பல தென்னிந்திய மொழிகளிலும் இவரது வெற்றிக் கொடி பறந்தது.
‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக, இதில் அமைந்திருந்த பரபரப்பான சண்டைக் காட்சிகளைச் சொல்ல முடியும். விதம் விதமாக அமைந்திருந்த சேஸிங் காட்சிகளையும் சண்டைகளையும் இளம் பார்வையாளர்கள் மிகவும் ரசித்தார்கள். ‘சூப்பர் சுப்பராயனும்’ சிறப்பு சண்டைப் பயிற்சியை வடிவமைத்த ‘பாப்பு வர்மா’வும் இதன் பின்னணியில் இருந்தார்கள்.
இந்தத் திரைப்படத்தின் டைட்டில் கார்டே சுவாரஸ்யமான முறையில் உருவாக்கப்பட்டிருந்தது. நடிகர்களின் புகைப்படங்கள் வண்ணப் பகுதிகளால் மெல்ல ஒன்றிணைந்து முழுமையாகத் தெரியும் படி, ஒரு மும்பை நிறுவனம் மோஷன் கிராபிக்ஸ் செய்திருந்தது. இதற்கு இளையராஜா வெவ்வேறு விதங்களில் அளித்திருந்த துள்ளலான இசையை நிச்சயம் கேட்க வேண்டும். பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்த அடுத்த கணமே தங்களை உற்சாகமாக உணர்ந்ததற்கு இந்த டைட்டில் கார்டும் இசையும் ஒரு காரணமாக அமைந்திருக்கும்.
இந்தத் திரைப்படம் அடைந்த பிரமாண்டமான வெற்றியையும் படத்தின் சுவாரஸ்யமான அம்சங்களையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு ‘காக்கி சட்டை’யை சற்று கறாரான நோக்கில் ஆராய்ந்தால் இது வெகுசன திரைப்படத்தின் சலித்துப் போன வடிவமே. கிளிஷேவான பல காட்சிகளால் நிறைந்திருந்தது. ஆங்கிலப்படத்திலிருந்து உருவப்பட்ட சாயல்கள் ஆங்காங்கே தெரிந்தன. கர்ப்பணி பெண் கடத்தல் வேலை செய்யும் காமெடி ‘படிக்காதவன்’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது போலவே இதிலும் ‘ரிப்பீட்’ ஆனது. இதே ஆண்டில் வெளியான ‘படிக்காதவன்’ திரைப்படத்தை இயக்கியவரும் ராஜசேகர்தான்.
இப்படி சில விமர்சனங்களை முன்வைக்க முடிந்தாலும் ஒரு வெற்றிப்படத்தின் இலக்கணத்தை அறிந்து கொள்வதும் அதை உருவாக்கி சாதிக்க முடிவதும் அத்தனை எளிதான பணியல்ல. இன்று பார்த்தாலும் ‘காக்கி சட்டை’ அதன் அடிப்படையான சுவாரஸ்யத்தை இழக்காமல்தான் இருக்கிறது.
ஒரு வெகுசன திரைப்படத்தின் மகத்தான வெற்றியை பல காரணிகள் தீர்மானிக்கின்றன. ‘காக்கி சட்டை’ திரைப்படத்தின் வெற்றிக்கும் பல காரணங்களைச் சுட்டிக் காட்ட முடிந்தாலும் பிரதானமாக ஒன்றைச் சொல்ல முடியும்.
அது – ‘தகடு... தகடு...' 

 

Thiyaghu Ktr

Leave a Reply