• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரண்டில் ஒன்று

சினிமா

காவல்துறை அதிகாரியின் கடமை உணர்வை மையப்படுத்தி மகேந்திரன் (இயக்குநர் மகேந்திரன்) என்ற இளைஞர் நாடகம் ஒன்றை எழுதினார். மகனுக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தைக் கருவாகக் கொண்ட அந்த நாடகத்தைப் படித்துப் பார்த்தார் நடிகர் செந்தாமரை. ‘இரண்டில் ஒன்று’ என்ற தலைப்பை அதற்குச் சூட்டி தனது குழுவின் சார்பில் அதை அரங்கேற்றினார்.

அந்த நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 300 காட்சிகளைக் கடந்து சென்னை சபாக்களில் முதல் மரியாதை கிடைத்து வந்ததது. ஒரு படப்பிடிப்பில் செந்தாமரையிடம் சிவாஜி, ‘என்னப்பா... உன்னோட நாடகம் பிச்சுக்கிட்டு போகுதாமே..’ என்று கேட்டார். ‘அண்ணே நீங்க அவசியம் வந்து பார்க்கனும்’ என்று அழைத்தார் செந்தாமரை.

சென்னை அண்ணாமலை மன்ற அரங்கில் நாடகத்தைப் பார்க்க வந்த சிவாஜி, வியந்துபோய் உட்கார்ந்திருந்தார். முதலில் எம்.ஜி.ஆர். நாடக மன்றத்திலும் பின்னர், அங்கிருந்து இடம்பெயர்ந்து சிவாஜி நாடக மன்றத்திலும் புகழ்பெற்ற நடிகராக மேடையில் உயர்ந்து நின்றவர் செந்தாமரை. நல்ல கதை அறிவு கொண்டவர். கதை விவாதங்களுக்கும் அவரை அழைப்பார்கள். இயக்குநர் 'வியட்நாம் வீடு' சுந்தரம் அவரை தனது படங்களில் நடிக்க வைக்கும் அதேநேரம், கதை விவாதங்களுக்கும் மறக்காமல் அழைப்பார். அப்படிப்பட்ட கலைஞன், இப்படியொரு அற்புதமான கதையைத் தேர்ந்தெடுத்து நாடகமாக்கியது சிவாஜியை வியப்பில் ஆழ்த்தவில்லை. ஆனால், அதில் செந்தாமரை கம்பீரமாக நடித்த கடமை தவறாத காவல் அதிகாரியின் வேடம், ‘தான் திரையில் ஏற்று நடிக்க வேண்டிய ஒன்றல்லவா!’ என்று நினைத்தார்.

உடனே, தனது நாடக மன்றத்தின் மூலம் ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தை அரங்கேற்ற விரும்பினார். தனது விருப்பத்தை செந்தாமரையிடம் தெரிவித்த சிவாஜி, கதையின் உரிமத்தை சிவாஜி நாடக மன்றத்துக்குத் தரும்படி கேட்டார். தனக்கு நாடகத்தில் இரண்டாம் கட்ட வாழ்க்கையை அளித்தவர் என்ற காரணத்தினால் சிறிதும் தயங்காமல் கதையின் உரிமையை சிவாஜிக்கு விட்டுக்கொடுத்தார். கதையில் சில மாற்றங்களைச் செய்து, தனக்கு ஏற்றவாறு கதாபாத்திரத்தை உருவாக்கி ‘தங்கப்பதக்கம்’ என்ற பெயரில் சிவாஜி அரங்கேற்றினார். காவல் துறை அதிகாரியாகத் தோன்றிய சிவாஜி, அந்த வேடத்துக்கு காவல் துறை அதிகாரி அருளின் நடை, உடை, பாவனைகளைத் தனது நடிப்பில் கொண்டு வந்து காட்டினார்.

சிவாஜியின் கம்பீரமான நடிப்பில் நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றிட, சென்னையில் பிரபலமாக இருந்த அத்தனை சபாக்களும் தங்கள் அரங்கில் ‘தங்கப்பதக்கம்’ நாடகத்தை அரங்கேற்ற போட்டா போட்டி போட்டன. பிரபலமான அரசியல் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகள், திரையுலகக் கலைஞர்கள் ஆகியோர் சிவாஜி காட்டிய கம்பீரத்தில் மிரண்டுபோனார்கள். சிவாஜியின் நடிப்பில் மைல்கல்லாய் ஆவணம் கண்ட ‘தங்கப்பதக்கம்’ நாடகத்தை தாமே திரைப்படமாகத் தயாரித்து மெகா வெற்றி கொடுத்தார் சிவாஜி.

'தங்கப்பதக்கம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சிவாஜியின் பல படங்களில் செந்தாமரைக்கு ஒரு கதாபாத்திரம் காத்திருக்கும். ‘முறுக்கிய மீசையும் முரட்டுத் தோற்றமுமாக வில்லன், குணச்சித்திரம், பாசமான அப்பா என பல பரிமாணங்களில் நடித்திருந்தாலும் குணத்தில் அவர் குழந்தையைவிட மிருதுமானவர்’ என அவருடன் பழகியவர்கள் கூறக் கேட்கலாம்.

சிறந்த தமிழ் வசன உச்சரிப்புக்காகவும், சக நடிகரின் நடிப்புடன் தனது நடிப்பு இயல்பாகக் கலந்துவிடும்படியும் நடிக்கும் ஜெல்லியைப் போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட நடிகர். படம் முழுவதும் வரும் பெரிய வேடம், சில காட்சிகளே வரும் சின்ன வேடம் என்றாலும் தனது இருப்பைப் படம் முடிந்து வீடு திரும்பிய பிறகும் ரசிகர்களின் மனதில் நிழலாட வைத்துவிடும் அற்புத நடிகர் இவர். சிவாஜி - எம்.ஜி.ஆருக்கு அடுத்து வந்த தலைமுறையில் ரஜினியின் படங்களில் செந்தாமரை காட்டிய வெரைட்டிகள் இன்றைக்கும் வியக்க வைக்கும் கம்பீரம்.

காஞ்சிபுரம் அருகில் உள்ள தியாகமுகச்சேரி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் செந்தாமரை. பின்னர் குடும்பம் காஞ்சிபுரம் நகருக்குக் குடிபெயர்ந்தபோது அறிஞர் அண்ணா எதிர்வீட்டுக்காரராக ஆகிப்போனார் செந்தாமரை. பத்தாம் வகுப்பு வரை படித்த செந்தாமரையிடம் இருந்த நடிப்புத் திறமையைக் கண்ட அண்ணா, கலைஞர் கருணாநிதியிடம் அனுப்பி வைத்தார். கருணாநிதியோ எம்.ஜி.ஆருக்கு சிபாரிசுக் கடிதம் கொடுத்து அனுப்பினார். தனது நாடக மன்றத்தில் இணைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் நாடக மன்றம் நடத்தி வந்த ‘அட்வகேட் அமரன்’, ‘இன்பக் கனவு’, ‘சுமை தாங்கி’ ஆகிய மூன்று நாடகங்களில் தொடந்து செந்தாமரை நடித்துவந்தார். ஒரு முறை நாடக ஒத்திகையின்போது கலைஞரைப் பற்றி வந்த விவாதத்தில் வாயைக் கொடுக்கப்போய், எம்.ஜி.ஆருடன் மனஸ்தாபப்பட்டு அவரது குழுவிலிருந்து வெளியேறினார். இதுபற்றி அறிந்த கலைஞர், செந்தாமரையை அழைத்து ‘என்ன நடந்தது?’ எனக் கேட்க, ‘அதுவொரு சின்னச் சண்டை, செல்லச் சண்டை. அதைப் பற்றி எதையும் என்னிடம் கேட்காதீர்கள். யாரையும் நான் குறை கூறமாட்டேன். மற்ற யார் எதைச் சொன்னாலும் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள்’ என வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

செந்தாமரையின் இந்தக் குணத்தைக் கண்ட கலைஞர் சில மாதங்கள் கோபத்துடன் இருக்க.. அப்போது செந்தாமரை நாடக வேலை எதுவும் இல்லாமல் சிரமப்படுவதாக கலைஞருக்குத் தகவல் வருகிறது.

உடனே சிவாஜி நாடக மன்றத்தில் செந்தாமரை இணைய உதவினார் கலைஞர். அப்போது முதல் கலைஞர் - செந்தாமரை இடையே தனிப் பாசம் மலர்ந்தது. திமுக ஊழியராகவும் செந்தாமரை கட்சிப்பணி ஆற்றியவர். அவரைச் சந்திக்கும்போதெல்லாம் கலைஞர்.. ‘யோய் அன்றைக்கு என்ன நடந்துன்னு சொல்ல மாட்டீல்ல... !’ என்று ஏக்கமாகக் கேட்பார். ‘அது பழங்கதை.. விடுங்கண்ணே’ என்று செந்தாமரையும் சென்றுவிடுவார். கடைசி வரை எம்.ஜி.ஆரிடம் தனக்காக எப்படிச் சண்டைபோட்டார், என்ன நடந்தது என்ற ரகசியத்தை, தனது மனைவி உட்பட யாரிடமும் அவர் கூறவில்லை.

கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அடையாறு அரசு திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பிரிவு தொடங்கியபோது அதற்கு தலைவராக வரும்படி செந்தாமரையை அழைத்தார் கலைஞர். ஆனால், செந்தாமரை ‘அண்ணே ... அந்த அளவுக்கு நான் தகுதியான ஆள் இல்ல’ என்று மறுத்துவிட்டார்.. உண்மையில் செந்தாமரையின் நடிப்புமுறையை An Exclusive acting style என்ற வகைமையில் கொண்டுவந்துவிடலாம். அவரது நடிப்பு, உச்சரிப்பு முறையிலிருந்து வரும் தலைமுறை கற்றுக்கொண்டால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

  - ஆர்.சி.ஜெயந்தன்.

Leave a Reply