• Welcome to TamilsGuide
செய்திகள் 1

20 தளங்கள் - ஈபிள் கோபுரத்தை விட உயரம்: அதிநவீன சொகுசு கப்பல்

நேற்று, புளோரிடா மாநில மியாமி பகுதியில் உள்ள பிஸ்கேன் பே (Biscayne Bay) கடற்கரை பகுதியிலிருந்து உலகின் மிகப் பெரிய சொகுசு கப்பலான "ஐகான் ஆஃப் தெ ஸீஸ்" (Icon of the seas) தனது முதல் பயணத்தை தொடர்ந்தது.

7 நாள் சுற்றுப்பயணத்திற்காக பயணிகளுடன் புறப்பட்ட ராயல் கரிபியன் (Royal Caribbean) எனும் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த சொகுசு கப்பலின் மொத்த நீளம் 1200 அடி ஆகும்.

"இக்கப்பல், உலகின் தலைசிறந்த விடுமுறை கால அனுபவத்தை மக்களுக்கு வழங்க 50 வருடங்களாக நாங்கள் இத்துறையில் பெற்ற அனுபவத்தின் சங்கமம். பல தலைமுறையினருடன் குடும்பங்கள் தங்களின் சுற்றுலா கனவுகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றி கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது" என ராயல் கரிபியன் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜேசன் லிபர்டி தெரிவித்தார்.

இக்கப்பலின் மதிப்பு, சுமார் $2 பில்லியன் ஆகும்.

குவான்டம் வகை கப்பல்கள் எனப்படும் இத்தகைய உல்லாச கப்பல்களில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டாலும் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கும் பொருட்களே இதை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஐகான் ஆஃப் தெ ஸீஸ் கப்பலில் 20 தளங்கள் உள்ளன.

இதில் 6 நீர்சறுக்கு விளையாட்டு அரங்கங்கள், 7 நீச்சல் குளங்கள், பனிச்சறுக்கு விளையாட்டு மைதானம், பெரிய திரையரங்கம், 40 உணவகங்கள், பல மதுபான கூடங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கங்கள், ஓய்வு அறைகள் என அனைத்து விதமான உல்லாச மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக 7,600 பயணிகள் மற்றும் 2350 பணியாளர்கள் தங்க அனைத்து வசதிகளும் உள்ளன.

எல்என்ஜி (LNG) எரிபொருளில் இதன் 6 எஞ்சின்கள் செயல்படுகின்றன.

50க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் மற்றும் நகைச்சுவை கலைக்குழுவினரும், பெரிய ஆர்கெஸ்ட்ரா குழுவும் பயணிகளை மகிழ்விக்க உள்ளனர்.

பின்லாந்து நாட்டின் டுர்கு (Turku) கப்பல் கட்டுமான தளத்தில் 900 நாட்களில் இக்கப்பல் உருவாக்கப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈஃபில் கோபுரத்தின் உயரத்தை விட ஐகான் ஆஃப் தெ ஸீஸ் கப்பலின் உயரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply