• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உச்சத்தில் கண்ணதாசன், வாலி... தத்துவ பாடலுக்காக பழைய கவிஞரை அழைத்த எம்.ஜி.ஆர்

சினிமா

கவிஞர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோர் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில், இந்த படத்தில் அவர்கள் இருவருமே தலா ஒரு பாடல் மட்டுமே எழுதியிருந்தனர்.

தமிழ் சினிமாவில் கண்ணதாசன் வாலி இருவரும் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் தனது படத்தில் பாடல் எழுதுவதற்காக பழைய கவிஞர் ஒருவரை எம்.ஜி.ஆர் அழைத்து வந்துள்ளார். அவர் எழுதிய அந்த பாடல் இன்றுவரை ஒரு சிறந்த தத்துவ பாடலாக போற்றப்படுகிறது.

1975-ம் ஆண்டு பி.நீலகண்டன் இயக்கத்தில் வெளியான படம் நினைத்ததை முடிப்பவன். எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில், லதா நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் எம்.என்.நம்பியார், மஞ்சுளா சாரதா என பலரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கவிஞர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோர் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில், இந்த படத்தில் அவர்கள் இருவருமே தலா ஒரு பாடல் மட்டுமே எழுதியிருந்தனர். புலமை பித்தன் 3 பாடல்களையும் அவினாசி மணி ஒரு பாடலையும் எழுதியிருந்த நிலையில், மீதமுள்ள 2 பாடல்களை மருதகாசி எழுதியிருந்தார். கண்ணதாசன் கவிஞராக வருவதற்கு முன்பே மருதகாசி தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தார்.

அதே சமயம் கண்ணதாசன் உச்சத்திற்கு வந்தபோது, மருதகாசி, பாடல் எழுதுவதை குறைத்துக்கொண்ட நிலையில், 1967-ம் ஆண்டு வெளியான விவசாயி படத்தில் பாடல்கள் எழுதியிருந்தார். அதன்பிறகு 8 வருடங்கள் பாடல் எழுதாத அவர், 1975-ம் ஆண்டு நினைத்ததை முடிப்பவன் படத்தின் மூலம் ரீ-என்டரி ஆனார். இந்த படம் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற, கண்ணை நம்பாதே என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு முக்கிய தத்துவ பாடலாக போற்றப்படுகிறது. இந்த பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார்.

இந்த பாடலில் எம்.ஜி.ஆர் செய்யும் அனைத்து செயல்களும் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும். குறிப்பாக நடனமாடும் மஞ்சுளாவின் பின்னால் தட்டுவது தனது இசைக்கருவியை எடுத்துக்கொண்டு துள்ளிக்குதித்து ஓடுவது என சிறப்பாக நடித்திருப்பார். வாலியும் கண்ணதாசனும் உச்சத்தில் இருந்தபோது, சில ஆண்டுகளாக பாடல் எழுதாமல் இருந்த மருதகாசி இந்த படத்தில் பெரிதாக என்ன செய்துவிட்டார் என்ற கேள்வி எழுந்து விடுமோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல், மருதகாசி எழுதிய இந்த படத்தின் இரு பாடல்களுமே இன்றும் ஒரு முக்கிய பாடலாக தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கிறது.
 

Leave a Reply