• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கையில் இரும்பு கம்பி... வாட்டாள் நாகராஜை நேருக்கு நேர் சந்தித்து விரட்டிய விஜயகாந்த்: பெங்களூரு ஃப்ளாஷ்பேக்

சினிமா

படத்தில் மட்டுமல்ல ரியல் லைஃபிலும் எத்தனைபேர் வந்தாலும் அடித்து விரட்டும் திறமை கொண்டவர் விஜயகாந்த்.

கர்நாடக மாநிலத்தில் படப்பிடிப்பின்போது இடையூறு செய்ய வந்த ரவுடிகளை விஜயகாந்த் ஒற்றை ஆளாக விரட்டி அடித்தது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்று இயக்குனரும் எழுத்தாளருமான ரத்தினகுமார் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். சினிமாவில் அனைத்து கலைஞர்களுக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு வேண்டும் என்று அந்த திட்டத்தை கொண்டு வந்த இவர், பலருக்கும் உதவி செய்துள்ளார். சினிமாவில் தான் பட்ட கஷ்டத்தை இனி யாரும் பட கூடாது என்பதை நினைத்து செயல்பட்டவர் விஜயகாந்த் என்று பலரும் கூறி வருகின்றனர்.

அதேபோல் படத்தில் மட்டுமல்ல ரியல் லைஃபிலும் எத்தனைபேர் வந்தாலும் அடித்து விரட்டும் திறமை கொண்டவர் விஜயகாந்த் என்று பலரும் சொல்ல கேட்டிருக்கிறோம். ஒரு சிலர் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த விஜயகாந்தின் ரியல் மாஸ் ஆக்ஷன்கள் பற்றி பேசியுள்ளனர். அந்த வகையில் தற்போது இயக்குனர் ரத்தினகுமார் விஜயகாந்த் குறித்து ஒரு ரியல் சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் தமிழ் செல்வன். பாராதிராஜா இயக்கிய இந்த படத்தில் விஜயகாந்த் ரோஜா மணிவண்ணன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரத்தினகுமார் கதை எழுதியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கார்நாடகாவில் நடைபெற்று வந்தது. முதலில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு அடுத்த நாள் படப்பிடிப்புக்காக அங்கே ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்தோம்.

அப்போது காவிரி பிரச்னை தொடர்பாக விஜயகாந்த் பேசிய கருத்து கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் விஜயகாந்த் படப்பிடிப்பு இங்கு நடைபெறுகிறது என்று தெரிந்தவுடன் வட்டாள் நாகராஜ் உள்ளிட்ட பலர் சுமார் 50 பேருடன் கெஸ்ட் ஹவுஸில் வந்து இறங்கி கோஷம் போட தொடங்கிவிட்டனர். தமிழ் செல்வன் என்ற படத்தின் பெயரில் இங்கு படப்பிடிப்பு நடத்த கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.

இதை பார்த்து இயக்குனர் இதுக்கெல்லாம் ரெஸ்பாஸ் பண்ண வேண்டாம் என்று சொல்லி ரூமுக்கு சென்றுவிட்டார். ஆனால் விஜயகாந்த் அப்படி செய்யவில்லை. அவர் எழுந்து வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு தனது டிரைவரை அழைத்து கார் பின்னாடி திறக்க சொன்னார். அதில் பல இரும்பு ராடுகள் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு விஜயகாந்த் கெஸ்ட் ஹவுஸ் கேட்டை நோக்கி நடந்து சென்றார்.

இவர் வருவதை பார்த்த வட்டாள் நாகராஜ் கோஷ்டி அவர் கேட்டுக்கு பக்கத்தில் வருவதற்குள் அங்கிருந்து ஓடி விட்டார்கள்.  ஆனாலும் விஜயகாந்த் கேட் வரைக்கும் சென்று மதுரை மொழியில் சத்தம் போட்டு விட்டு வந்தார். அப்போதுதான் அவரின் ரியல் ஆக்ஷனை பார்த்தேன். அடுத்த நாள் படப்பிடிப்பில் இயக்குனர் தமிழ் செல்வன் என்ற பெயரில் கிளாப் போர்டு அடிக்க மாட்டேன் படத்தின் பெயரை மாற்றுங்கள் என்று சொல்லிவிட்டார்.

ஆனால் விஜயகாந்த் படத்தின் பெயரை மாற்ற வேண்டாம். இதே பெயர் தான் நீங்கள் கிளாப்போர்டு அடியுங்கள். படத்தின் பெயரை மாற்றினாலோ, அல்லது நீங்கள் கிளாப்போர்டு அடிக்கவில்லை என்றாலோ நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு இருவருக்கும் இடையே சமாதானம் பேசி பிறகு படப்பிடிப்பு நடந்தது என்று இயக்குனர் ரத்தினகுமார் கூறியுள்ளார்.

சிவ ஜெயா

Leave a Reply