• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெயலலிதாவுக்கு என்மேல் கோபம்... எம்.ஜி.ஆர் தான் காரணம் - மனம் திறந்த பாக்யராஜ்

சினிமா

தன்னை கலையுலக வாரிசு என்று அறிவித்ததால் ஜெயலலிதாவுக்கு என்மேல் கோபம் என்று தற்போது பாக்யராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.

எம்.ஜி.ஆர்-ன் அரசியல் வாரிசு ஜெயலலிதா என்று பேச்சு வந்துகொண்டிருந்த சமயத்தில் பாக்யராஜ் தான் என்னுடைய கலையுலக வாரிசு என்று எம்.ஜி.ஆர் கூறியது ஜெயலலிதாவிற்கு கோபம் வந்தது என்று இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் இயக்குனர் கே.பாக்யராஜ். பாரதிராஜா, பாலகுரு ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்து சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாக்யாராஜ் தனது இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அதேபோல் பல வெற்றிப்படங்களிலும் நாயகனாக தன்னை நிரூபித்துள்ளார்.

இவரது இயக்கத்தில் வெளியான பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக வந்த முந்தானை முடிச்சு படத்தை முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆர் வெகுவாக பாராட்டியிருந்தார். மேலும் பாக்யராஜூவின் படங்களால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர் தனது கலையுலக வாரிசு பாக்யராஜூ தான் என்று கூறியிருந்தார். அவரின் இந்த அறிவிப்பு திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே தன்னை கலையுலக வாரிசு என்று அறிவித்ததால் ஜெயலலிதாவுக்கு என்மேல் கோபம் என்று தற்போது பாக்யராஜ் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பான சமீபத்தில் பேட்டி அளித்த அவர், எம்.ஜி.ஆர் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஒருமுறை தேர்தலின் போது எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது அவர் வருவதற்கு முன்பாக பல பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்தேன்.

இந்த பிரச்சாரத்தில் எம்.ஜிஆர் உயிருடன் தான் இருக்கிறார். இன்னும் நில நாட்களில் வந்துவிடுவார் என் குழந்தை மீது சத்தியம் என்று சொன்னேன். இதை சொல்லிவிட்டு பிரச்சார வண்டியை விட்டு கீழே இறங்கும்போது ஒருவர் என் கையை பிடித்துக்கொண்டு சார் நீங்கள் சத்தியம் செய்ததை உண்மையிலேயே எம்.ஜி.ஆர் உயிருடன் இருப்பதாக நம்பி விட்டார்கள் என்று சொன்னார். இதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அரசியலுக்காக நான் பொய்யாக சத்தியம் செய்தேன் என்று அவர் நினைத்து விட்டார்.

அதேபோல் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என்று ஜெயலலிதா வந்து கொண்டிருந்த போது அவர் திடீரென என்னை கலையுலக வாரிசு என்று அறிவித்ததால் அவருக்கு கோபம் வந்தது. எங்கே நான் அவருக்கு போட்டியாக வந்து விடுவேனோ என்று நினைத்து விட்டார். அந்த சமயத்தில் அவரை பிடிக்காத சிலர் எம்.ஜிஆர் ஹாஸ்பிட்டலில் இருந்த போது ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை.

ஆனால் நான் தினமும் அவரை சந்தித்து 2-3 மணி நேரம் பேசிவிட்டு வருவேன். அவர் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பு கூட ஜெயலலிதாவை யாரும் பார்க்க விடவில்லை. நான் அவரை சென்று பார்த்துவிட்டு மக்களிடம் வந்து அவர் நலமாக இருப்பதாக சொல்வேன். அதேபோல் எம்.ஜி.ஆருடன் அமெரிக்கா செல்வதற்கு அவர் முயற்சித்தும் அவரை யாரும் அனுமதிக்கவில்லை. ஆனால் நான் யாரிடமும் கேட்கவில்லை. நான் கிளம்பி அமெரிக்கா சென்றுவிட்டேன்.

இந்த மாதிரியான சம்பவங்கள் எனக்கும் அவருக்குமான இடைவெளியை அதிகமாக்கியது. என்னை அவருக்கு பிடிக்காது அவரையும் எனக்கு பிடிக்காது என்று நினைத்துக்கொண்டார்கள். ஆனால் அவரை எனக்கு பிடிக்காது என்று இல்லை. இந்த மாதிரியான காரணங்களால் நான் விலகி விட்டேன். ஆனாலும் எம்.ஜி.ஆர் பெயர் இருட்டடிக்கப்படுவதை நினைத்து மீண்டும் அரசியல் களத்தில் வேறு கட்சிக்காக பிரச்சாரம் செய்தேன்.

அப்போது சிலர் என்னிடம் வந்து கை கொடுப்பார்கள் நானும் கைகொடுப்பேன். அப்போது உங்களை எனக்கு பிடிக்கும் ஆனால் நான் இரட்டை இலை கட்சிக்காரன் என்று சொல்லிவிட்டு செல்வார்கள். அதன்பிறகு பலபேர் என்னிடம் வந்து நீங்கள் இப்படி பண்ணலாமா என்று கேட்டனர். எம்.ஜி.ஆர் என்னை கலை வாரிசு என்று சொன்னபோதும் நான் வேறு கட்சிக்கு பிரச்சாரம் செய்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நீங்கள் மற்றவருக்காக ஓட்டு கேட்கவில்லை. எம்.ஜி.ஆரின் இரட்டை இலைக்கு எதிராக ஓட்டு கேட்கிறீர்கள் என்று சொன்னார்கள். இதனால் நான் அரசியலில் இருந்து விலகி விட்டேன். அதன்பிறகு எனது மகன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க அனுமதி கேட்டபோது போயஸ் கார்டனுக்கு வர சொன்னார் ஜெயலலிதா. நான் சென்றபோது அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் தலைமை செயலாலளரிடம் பத்திரிக்கை வாங்கிக்கொள்ளும்படி கூறினார். அவரை பார்க்கவில்லை. பத்திரிக்கை வைக்க அனுமதி கொடுத்ததால் அவருக்கு என்மேல் கோபம் இல்லை என்று தெரிந்தது.

திருமணத்திற்கு வராத அவர் குத்துவிளக்கு பார்சல் அனுப்பி வைத்து உடல்நிலை சரியில்லாததால் என்னால் வர முடியவில்லை மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார். அவர் ஹாஸ்பிடலில் இருந்தபோது கூட பார்ப்பதற்காக நான் போனேன். ஆனால் யாரையும் அனுமதிக்கவில்லை என்று அவரது பி.ஏ. சொன்னார். அதன்பிறகு அவர் கண் விழித்தால் நான் வந்தேன் என்று சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன் என்று கூறியுள்ளார்.
 

Leave a Reply