• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஷூட்டிங்கில் திடீரென வெளியேறிய எம்.ஜி.ஆர் -அவசரமாக அழைத்து வரப்பட்ட கவிஞர் வாலி- என்ன நடந்தது?

சினிமா

எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்த அன்பே வா படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி ஆளுமையை செலுத்தியவர் எம்.ஜி.ஆர். தனது படங்களில் மக்களுக்கு தேவையாக கருத்துக்களையும், அரசியலில் மக்களுக்கு தேவையாக பல திட்டங்களையும் கொண்டு வந்தவர். தொடர்ந்து 3 முறை தமிழகத்தில் முதல்வராக வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் குறித்து இப்போது பலரும் அரிய பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக ஏவிஎம் நிறுவனத்தின் ஏவிஎம் குமரன் எம்.ஜி.ஆர் குறித்து புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த 1966-ம் ஆண்டு எம்.ஜி.ஆர், சரோஜா தேவி நடிப்பில் வெளியான படம் அன்பே வா. ரொமான்ஸ் காமெடி படமாக வெளியான இந்த படம் அன்றைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இந்த படத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் எம்.ஜி.ஆர் பாடுவது போன்று நாடோடி நாடோடி என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த பாடல் பதிவின் போது நடைபெற்ற ரிகர்சலில் எம்.ஜி.ஆர் திடீரென நடந்துகொண்ட விதம், அதன்பிறகு நடந்ததை சுவாரஸ்யம் குறித்து ஏவிஎம் குமரன் கூறியுள்ளார்.

ஏவிஎம் ஸ்டூடியோவில் நாடோடி நாடோடி பாடல் ரிகர்சல் நடைபெற்று வந்தது. இதில் கலந்துகொண்ட சின்னவர் (எம்.ஜி.ஆர்) ரிகர்சலை பார்த்துக்கொண்டே இருந்து திடீரென எழுந்து சென்றுவிட்டார். அவருடன் இருந்த நண்பர்களும் சில டிஸ்டிபியூட்டர்களும் எம்.ஜி.ஆர் பின்னாடியே சென்றுவிட்டனர். இதனால் உடனடியாக ஷுட்டிங் நின்று போனது. இயக்குனர் திரிலோகசந்தர் உட்பட எங்கள் அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

அவரது மேனேஜரும் கூடவே சென்று விட்டார். மேக்கப் ரூமுக்கு சென்ற சின்னவர் மேனேஜரை மட்டும் கூப்பிட்டு, அவர் என்ன சொன்னாரே தெரியவில்லை. வெளியில் வந்த மேனேஜர் காரில் ஏறி கிளம்பிவிட்டார். சிறிது நேரம் கழித்து, புரடக்ஷன் மேனேஜர், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வாலி, ஆரூர் தாஸ் ஆகிய மூவரையும் அழைத்து வந்து அனைவரும் எம்.ஜி.ஆர் ரூமுக்கு சென்றுவிட்டனர்.

உள்ளே என்ன டிஸ்கஷன் நடந்ததோ தெரியவில்லை. கால்மணி நேரம் கழித்து எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே வெளியில் வந்தார். அதன்பிறகு ரிகர்சல் நடந்தது. ஆனால் உள்ளே என்ன நடந்தது என்பது எங்கள் யாருக்கும் தெரியவில்லை. அதன்பிறகு ஆரூர் தாஸ் தனியாக வந்து சொன்னார். இந்த பாடலில் என்ன நாடோடி ஓடோடி என்று வருகிறது எனக்கு சரியாக படவில்லை என்று எம்.ஜி.ஆர் சொன்னார்.

அதற்கு அப்படித்தான் சார் வரும் இதற்கு நீங்கள் பாட்டிலேயே பதிலடி கொடுப்பீர்கள் முதலில் இப்படி வந்தால் தான் நீங்கள் பதிலடி கொடுக்க சரியாக இருக்கும். அப்படித்தான் எழுதியிருக்கிறோம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றிவிடுகிறேன் என்று வாலி சொன்னார். இல்லை மாற்ற வேண்டாம் எனக்கு சந்தேகம் இருந்தது அதை கேட்டுக்கொண்டேன். இதை மேற்கொண்டு பெரிது படுத்த வேண்டாம் என்று சொன்னதாக ஆரூர் தாஸ் சொன்னார் என ஏவிஎம் குமரன் கூறியுள்ளார்.
 

Leave a Reply