• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கெத்தாக சினிமா உலகை கட்டி ஆண்ட பானுமதி - ஒரு பாடலுக்காக இசை அமைப்பாளருடன் நடந்த மோதல்

சினிமா

கடைசியாக தமிழில் பிரஷாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி படத்தில் அவரின் பாட்டியாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் முக்கியமானவர் பானுமதி. 1939-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான வர விக்ராயம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பானுமதி, அதே ஆண்டு வெளியான சந்தன தேவன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தர்மபத்தினி, ராஜமுக்தி, லைலா மஜ்னு, சந்திராணி, மணிமேகலை, அன்னை, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக தமிழில் பிரஷாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி படத்தில் அவரின் பாட்டியாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள நடிகை பானுமதி திரைத்துறையில் தனக்கென தனி ஆளுமையை வைத்திருந்தவர். இதில் 1962-ம் ஆண்டு வெளியான அன்னை படத்தின் ஒரு பாடலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இசையமைப்பாளர் சுதர்சனுடன் மோதலில் ஈடுபட்டதாக ஏவிஎம் குமரன் கூறியுள்ளார்.

பானுமதி சவுக்கார் ஜானகி நடிப்பில் கடந்த 1962-ம் ஆண்டு வெளியான படம் அன்னை. இதில் பானுமதிக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்ததால், ஏழையாக இருக்கும் அவரது தங்கையான சவுக்கார் ஜானகிக்கு பிறக்கும் குழந்தை தத்தெடுத்து வளர்க்கிறார். மேலும் இனிமேல் இந்த குழந்தைக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லை. இவனை இனிமேல் நீ பார்க்கவே கூடாது என்று சவுக்கார் ஜானகியிடம் சொல்லிவிடுகிறார்.

ஒரு கட்டத்தில் சவுக்கார் ஜானகியின் கணவர் இறந்து விடுவதால், அவருக்கு திதி கொடுப்பதற்காக பானுமதி அவரின் மகனை அழைத்துக்கொண்டு ராமேஸ்வரம் செல்கிறார். அப்போது அந்த பையன் எங்கு போகிறோம் என்று கேட்க, நான் சொல்வதை மட்டும் செய் என்று பானுமதி அவனை அழைத்து செல்கிறார். அப்போது ரயிலில் சென்று கொண்டிருக்கும்பொது அந்த பையன் தூங்கிவிட பானுமதியின் மனசாட்சி பாடுவது போல் ஒரு பாடல் வருகிறது.

அன்னை என்பவள் நீதானா என்று தொடங்கும் அந்த பாடலை கண்ணதாசன் எழுத பானுமதியே பாடியிருந்தார். இந்த பாடல் காட்சி படமாக்கும் போது ரயில் செட் போட்டு படமாக்கினோம். அப்போது பாடலை பாதியில் நிறுத்திய பானுமதி நான் பாடிய பாடலை மாற்றி விட்டீர்கள் என்று கூறி இசையமைப்பாளருடன் மோதலில் ஈடுபட்டார். அப்போது அவர் இது நீங்கள் பாடிய பாடல் தான் ஒரு சில இடங்களில் உச்சரிப்பு சரியாக வரவில்லை என்பதால் நீங்கள் பாடிய மற்றொரு டேக்கில் இருந்து எடுத்து சேர்த்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் சுதர்சன் சொன்னார். ஆனால் அதையும் நம்பாத பானுமதி இரண்டு பாடல்களையும் போட்டு காட்ட சொன்னார்.

அதன்பிறகு இசையமைப்பாளர் சுதர்சன் ஸ்டூடியோவுக்கு சென்று இரு பாடல்களையும் பானுமதி கேட்டார். அப்போது அவருக்கு புரிந்தது. அதன்பிறகு சுதர்சன் சார் என்னை மன்னித்து விடுங்கள் என் உச்சரிப்பை சரியாக செய்திருக்கிறீர்கள் நான் தான் தவறாக புரிந்துகொண்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் ஷூட்டிங்கிற்கு சென்றார் என்று ஏவிஎம் குமரன் கூறியுள்ளார்.
 

Leave a Reply