• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மண் மறவா மாமனிதர் சட்டத்தரணி எஸ்.கே.மகேந்திரன்

இலங்கை

மிகச் சிறந்த அறிஞர், மிகச் சிறந்த பேச்சாளர், மிகச் சிறந்த எழுத்தாளர், தமிழரசுக் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர், ஒழுக்கமும் நேர்மையும் தலைமைப் பண்பும் ஆளுமையும் நிறைந்த தலைவர்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட ஊரதீவு கிராம முன்னேற்றச் சங்கம், ஊரதீவு சனசமூக நிலையம் ஆகியன சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில், மாணவப் பருவத்திலேயே சக மாணவர்களோடு இணைந்து புங்குடுதீவு இளந்தமிழர் மன்றத்தை நிறுவி, அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று, தமெக்கென தனியாக ஒரு அலுவலகம் தேவையென்று அறிவகத்தைக் கட்டி, அதை புங்குடுதீவின் மிகச் சிறந்த நூலகமாக உருவாக்கி, என் போன்ற சிறுவர்களையும் வாசிக்கத் தூண்டியவர். பின்பு ஊரதீவு கிராம முன்னேற்றச் சங்கம், ஊரதீவு சனசமூக நிலையம், புங்குடுதீவு பாணாவிடைச் சிவன்கோவில் தர்மகர்த்தா சபை ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று அளப்பரிய சமூக, ஆன்மீக சேவைகள் செய்தவர். 

நான் எனது எட்டாவது வயதில் முதன் முதலில் மேடையேறிப் பேசிய பிரமாண்டமான விழாவின் தலைவரும் அவர்தான். என்னை  முதன் முதலில் பாராட்டிப் பேசியதும் அவர்தான். அதன்பின்பு ஊரில் கலை, அரசியல், ஆன்மீகம் என எந்த விழா நடந்தாலும் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவரிடமிருந்து எனக்குக் கடிதம் வருவதும், அவர் எழுதியனுப்பிய வைரவரிகளை மனனம் செய்து அந்த மேடைகளில் பேசிப் பாராட்டைப் பெறுவதும் எனது வழக்கமாக இருந்தது. நான் பாடசாலைகளுக்கிடையில்  நடைபெற்ற பல பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற அவரும் ஒரு காரணம். நான் முதன் முதலில் கலந்து கொண்ட கவியரங்கின் தலைவரும் அவர்தான். நான் முதன் முதலில் கலந்து கொண்ட பட்டிமன்றத்தின்  நடுவரும் அவர்தான்.
புங்குடுதீவு இளந்தமிழர் மன்றத்தின் நிரந்தரத் தலைவராக இருந்தவர், யாழ் நகரில் குடியேறிய பின்பு எனக்குப்பின் ஆளுமை மிக்க தலைவர் நீதான் என்று கூறி, என்னைத் தலைவராக நியமித்தவர். தாயகத்திலும் டென்மார்க்கிலும் சுவிட்சர்லாந்திலும் சுமார் 400 மேடைகள் கண்ட எனது நீண்ட கலை இலக்கியப் பயணத்தை ஆரம்பித்து வைத்தவர் அவர்தான்.
அவரது 25வது ஆண்டு நினைவு நாளில் நன்றியுணர்வோடு அவரை நினைவு கூருகிறேன். அவரது பூவுடல் மறைந்தாலும் அவரது புகழ் என்றும் மறையாது. அவரைப் பார்த்து வளர்ந்த அவரது தம்பிகளின் இலக்கிய, சமூகப்  பணிகளில் என்றும் வாழ்வார்.
(எனது நினைவுப் பகிர்வு)
Sritharan Thirunavukkarasu
 

 

Leave a Reply