• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடுப்பை அணைக்காமல் விட்ட பாட்டி - பாட்டிக்காக பேரன் செய்துள்ள செயல் 

இந்தியா

ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் விடுமுறைக்காக குண்டூர் என்னுமிடத்திலுள்ள தனது பாட்டி வீட்டுக்குச் செல்வது வழக்கம். பாட்டியும் பேரனும் சேர்ந்து நிறைய நல்ல நல்ல படங்கள் பார்ப்பார்கள், பாட்டி வகை வகையாக சமைத்துப்போடுவார்.

அன்றும் அப்படித்தான் பாட்டியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தான் ஹிமேஷ் (Hemesh Chadalavada) என்னும் அந்த 12 வவதுச் சிறுவன். பாட்டி தேநீர் போட்டுக்கொடுத்தார். இருவரும் தேநீர் அருந்திக்கொண்டே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

இருவரும் படுக்கைக்குச் சென்றபிறகு, ஹிமேஷ் தற்செயலாக சமையலறைக்குச் செல்ல, ஹிமேஷ் கண்ட காட்சி அவனை திடுக்கிடச் செய்தது. பாட்டி, சமையல் எரிவாயு மூலம் இயங்கும் அடுப்பை அணைக்க மறந்துபோயிருந்தார்.

அப்போது ஹிமேஷின் பாட்டியான ஜெயஸ்ரீக்கு வயது 63. தன் பாட்டிக்கு மறதி வந்துவிட்டதை உணர்ந்துகொண்ட ஹிமேஷ் கவலை அடைந்தான், தான் ஊருக்குச் சென்ற பிறகும் பாட்டி இதேபோல அடுப்பை அணைக்க மறந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அவனை வாட்டி வதைக்க ஆரம்பித்தது.

ஒரு கல்வியாளரான ஜெயஸ்ரீ, நாடாளுமன்ற ஊழியர்களுடன் இடைபடும் அரசுப் பணியிலிருந்தவர். சமீபத்தில் அவருக்கு டிமென்ஷியா என்னும் மறதிப் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. அதிகாலை 3 அல்லது 4 மணிக்கும் விழிக்கும் ஜெயஸ்ரீ, வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுவாராம். தான் ரயிலில் பயணித்துக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொள்வாராம்.

ஆகவே, தன் பாட்டிக்காக கருவி ஒன்றைக் கண்டுபிடிப்பது என முடிவு செய்துள்ளான் ஹிமேஷ். இப்போது அவனுக்கு 17 வயது ஆகிறது. அவன் சொன்னதுபோலவே, தன் பாட்டி மட்டுமல்ல, அவரைப்போன்று மறதிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக கருவி ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டான் அவன்.

ஏற்கனவே பயன்பாட்டிலிருக்கும் கருவிகள், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் வேலை செய்யாது. ஆனால், ஹிமேஷ் கண்டுபிடித்துள்ள கருவியோ, அதை அணிந்துகொண்டிருப்பவர், கிராமங்களில் என்றால் மூன்று கிலோமீற்றர், நகரங்களில் என்றால், ஐந்து கிலோமீற்றர் தொலைவுக்குச் சென்றுவிட்டாலும், அவர்களைக் கண்டுபிடிக்க உதவும்.  

அதுமட்டுமின்றி, அவர்கள் கீழே விழுந்துவிட்டாலோ, எங்காவது வழிதெரியாமல் சென்றுவிட்டாலோ, அவர்களை கவனித்துக்கொள்பவர்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பி தெரியப்படுத்தும்.

மேலும், அவர்களுடைய இதயத் துடிப்பு, உடல் வெப்பநிலை ஆகியவற்றைக் காட்டுவதுடன், அவர்கள் எப்போது மருந்து, மாத்திரைகள் சாப்பிடவேண்டும் என்பதையும் ஞாபகப்படுத்தும் வகையில் அந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ஹிமேஷ், தேர்வு முடிந்ததும், அந்தக் கருவியில் செய்யவேண்டிய இறுதி வேலைகளைச் செய்து, அதை செப்டம்பரில் விற்பனைக்கு தயாராக்க திட்டமிட்டுள்ளான். இன்னொரு முக்கிய விடயம், அதை குறைந்த விலைக்கு விற்பனை செய்யவேண்டும் என்பது அவனது ஆசை! 
 

Leave a Reply