• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோபத்தால் பிரிந்த நட்பு... சிவாஜியை தனது பாடலால் அழ வைத்த கண்ணதாசன்

சினிமா

நடிப்பில் சிவாஜி முத்திரை பதித்தது போல் பாடல்களில் முத்திரை பதித்த கவியரசர் கண்ணதாசன். வாழ்க்கையின் தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் ஒலிக்க செய்தவர்.

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பட்டத்துடன் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளவர் சிவாஜி. இவர் ஒரு நடிப்பு பல்கலைகழகம் என்று சினிமா துறையில் உள்ள பலரும் கூறி வரும் நிலையில், இவர் தனது படங்களில் பயன்படுத்திய ஸ்டைல் தான் தற்போது பல நடிகர்கள் தங்களது படங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே பல்வேறு மேடை நாடகங்களில் நடித்திருந்த சிவாஜி 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அவரின் நடிப்பு முதல் படம் போல் இல்லாமல் ஒரு அனுபவம் வாய்ந்த ஒருவர் நடித்தது போல் தான் இருக்கும். அந்த அளவிற்கு தனது மேடை நாடக அனுபவத்தை பயன்படுத்தியவர்.

நடிப்பில் சிவாஜி முத்திரை பதித்தது போல் பாடல்களில் முத்திரை பதித்தவர் கவியரசர் கண்ணதாசன். வாழ்க்கையின் தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன், அந்த கால சினிமாவில் மிகவும் பிஸியாக பாடலாசிரியராக வலம் வந்தார். அதேபோல் சிவாஜியும் கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இருவருக்குள்ளும் ஆழமான நட்பு இருந்துள்ளது.

அதேபோல் சிவாஜி நடிப்பில் பல படங்களை கண்ணதாசன் தயாரித்துள்ளார். சிவாஜியின் இல்லற ஜோதி என்ற படத்திற்கு கதை ஆசிரியராகவும் இருந்துள்ளார். இருவரும் ஒரே நேரத்தில் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் சேர்ந்த நிலையில், கட்சி ரீதியாக இருவரும் மனக்கசப்பில் இருந்துள்ளனர். இதனால் சில காலம் இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்துள்ளனர்.

சில ஆண்டுகள் கழித்து சிவாஜியின் பாகபிரிவினை படத்திற்காக ஒரு தாலாட்டு பாடல் தேவைப்பட்டது. அப்போது அந்த படத்திற்கு பாடல் எழுதிய கவிஞர் தாலாட்டு பாடல் கிடைக்க தாமதமாகும் என்று கூறியுள்ளார். இதனால் படக்குழுவினர் கண்ணதாசனை எழுத சொல்லலாமா என்று சிவாஜியிடம் கேட்டபோது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை அவர் சரி என்றால் எழுதட்டும் என்று கூறியுள்ளார்.

அப்போது தயாரான பாடல் தான் ஏன் பிறந்தாய் மகனே பாடல். இந்த பாடல் பெரிய ஹிட் அடித்தாலும், கண்ணதாசன் – சிவாஜி இடையேயான நட்பை புதுப்பிக்க உதவவில்லை. அதற்கு அடுத்து பாசமலர் படத்தில் கண்ணதாசன் எழுதிய மலர்ந்து மலராத பாதி மலர் போல பாடலை கேட்ட சிவாஜி, அழுத்து புலம்பிய நிலையில், அப்போதே கண்ணதாசனை வரவழைத்து கட்டி தழுவிக்கொண்டுள்ளார். பிரிந்த நட்பு ஒரு பாடல் மூலம் இணைந்துள்ளது.

Rj Nila

Leave a Reply