• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிபர் தேர்வுக்கு மக்களை பாராட்டிய அமெரிக்கா - கண்டிக்கும் சீனா

கிழக்கு ஆசியாவில், வடமேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு, தைவான் (Taiwan). இதன் தலைநகரம் தைபே (Taipei).

தன்னை முழு சுதந்திர நாடாக தைவான் பிரகடனப்படுத்தி கொண்டாலும், சீனா அதனை ஏற்க மறுத்து, தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடாகவே கருதி அந்நாட்டை ஆக்கிரமிக்க வான்வழியாகவும், கடல் வழியாகவும் பல ராணுவ அத்துமீறல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தைவானின் தன்னாட்சி உரிமைக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. ஆனால், அமெரிக்காவின் தைவான் ஆதரவு நிலைப்பாட்டை சீனா விரும்பவில்லை.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே சச்சரவு நிலவி வருகிறது.

இது குறித்து அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன் அமெரிக்க-சீன ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையின் போது, "தைவான் விஷயத்தில் சமரசமே இல்லை" என சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில், 2024 ஜனவரி 13 அன்று அந்நாட்டிற்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் முடிவுகளில், ஜனநாயக வளர்ச்சி கட்சியை (PDP) சேர்ந்த லாய் சிங்-டெ (Lai Ching-te), குவோமின்டாங் (Kuomintang) கட்சியை சேர்ந்த ஹவ் யூ-ஹி (Hou Yu-ih) பெற்ற வாக்குகளை விட 9,00,000 வாக்குகள் அதிகம் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

லாய் வெற்றி பெற்றதற்கு தைவான் மக்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா நேற்று அறிக்கை வெளியிட்டது.

இதில், "தங்கள் நாட்டின் வலிமையான ஜனநாயகத்தின் மீதும், தேர்தல் வழிமுறைகளின் மீதும் தைவான் நாட்டு மக்கள் வைத்திருந்த அபாரமான நம்பிக்கையை மீண்டும் அவர்கள் வெளிப்படுத்தி உள்ளது மகிழ்ச்சியை தருகிறது" என தெரிவித்தது.

ஆனால், இதனை விரும்பாத சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து சீன செய்தி தொடர்பாளர், "தைவானின் சுதந்திரம் எனும் பெயரில் அங்கு போராடும் பிரிவினை அமைப்புகளுக்கு அமெரிக்காவின் பாராட்டு, தவறான செய்தியை அளிக்கும். சீனா இதனை வன்மையாக கண்டிப்பதுடன், எதிர்க்கவும் செய்கிறது. அமெரிக்க தரப்பிற்கு எங்கள் எதிர்ப்பு குறித்து தெரிவித்து விட்டோம். வாஷிங்டனின் இந்த அறிக்கை, ஒரே சீனா எனும் எங்களின் கோட்பாட்டிற்கு எதிரானது. அதிகாரபூர்வமாக தைவானுடன் அமெரிக்கா உறவு கொண்டாடுவதை நிறுத்துமாறு சீனா வலியுறுத்துகிறது" என கூறினார்.
 

Leave a Reply