• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே கதாநாயகனுடன் 130 படங்கள் ஜோடியாக நடித்த ஹீரோயின்.. கின்னஸ் சாதனைக்குச் சொந்தமான ஷீலா

சினிமா

ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்தாலே இன்று மாறி மாறிசேனல்களில் பேட்டி, விளம்பரம் என்று புகழ் தேடும் நடிகைகளுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் 500 படங்களுக்கு மேல் நடித்து இன்றும் பிஸியாக இருப்பவர் நடிகை ஷீலா. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் தான் நடித்த படங்களில் ஒரே ஹீரோவுடன் கிட்டத்தட்ட 130 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் என்பது தான்.

ஒரு நடிகை ஒரு ஹீரோவுடன் ஜோடியாக அதிகபட்சமாக இருபது, முப்பது படங்கள் வரை நடித்திருக்கலாம். ஆனால் மலையாள நடிகர் பிரேம் நசீருடன் 130 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார் ஷீலா. தமிழ் சினிமாவில் நடிகையர் திலகம் சாவித்ரி போலவே மலையாள சினிமா உலகில் நடிகையர் திலகமாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் ஷீலா திகழ்ந்தார்.

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களால் தமிழில் நாடகத்தில் தனது 13 வயதிலேயே நடிக்க வந்தவர் பின்னாளில் எம்.ஜி.ஆரின் பாசம் படத்தில் முதன்மை கதாபாத்திரமாகத் தோன்றினார். அதன்பின் பாக்யஜாதகம் என்ற மலையாளப் படத்தில் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பினால் அதை இறுகப் பற்றி படிப்படியாக முன்னேறினார். தொடர்ந்து மலையாள சினிமா உலகை தனது அபார நடிப்பாற்றலால் ஆண்டவர் தமிழ், தெலுங்கு, இந்தி, உருது, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துப் புகழ் பெற்றார்.

சந்திரமுகி படத்தில் அகிலாண்டேஸ்வரியாக நடித்து அனைவரையும் மிரட்டியிருப்பது நினைவிருக்கலாம். மலையாளத்தில் இவர் நடித்த செம்மீன், கல்லிச்செல்லம்மா, வெளுத்த கத்ரீனா ஆகலே, ஒரு பெண்ணின் கதை, சர்சையா, யக்ஷகானம் , குட்டி குப்பாயம், ஸ்தானத்தி சாரம்மா , கடத்துநாட்டு மகன், கண்ணப்பன் உன்னி , ஜ்வாலா, வாழ்வே மாயம் போன்ற படங்கள் வசூலில் சாதனை புரிந்தவை.

சிறிது காலம் சினிமாத் துறைக்கு இடைவெளி கொடுத்தவர் மீண்டும் 2003-ம் ஆண்டில் நடிக்கத் தொடங்கினர். 2005 ஆம் ஆண்டில்,  இவர் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படமான அகலே படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதையும், சிறந்த துணை நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் வென்றார் .

நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர், ஓவியர், கதாசிரியர் எனப் பன்முகம் கொண்ட வித்தகியாக ஷீலா இன்றும் துறுதுறுவென ஓடிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகன்தான் காதல் ரோஜாவே படத்தில் நடித்த பிரபல நடிகர் ஜார்ஜ் விஷ்ணு என்பது பலருக்கும் தெரியாத தகவல்.
 

Leave a Reply