• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கஷ்ட காலத்தில் எம்.ஜி.ஆர் செய்த உதவி... ஏற்க மறுத்த பிரபல நடிகர் - என்ன ஒரு தன்மானம்!

சினிமா

எம்.ஜி.ஆர் திரைத்துறையில் மட்டுமல்லாமல் பலருக்கும் உதவி செய்துள்ள நிலையில், அவர் செய்த உதவியை பிரபல நடிகர் ஒருவர் ஏற்க மறுத்துள்ளார்.

பழம் பெரும் நடிகர்களில் முக்கியமானவர் வி.எஸ்.ராகவன். 1954-ம் ஆண்டு வெளியான வைரமாலை என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். பத்திரிக்கையாளராக இருந்து பின்னர் நாடக நடிகமாக மாறிய வி.எஸ்.ராகவன், அதன்பிறகு திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை பெற்றிருந்தார்.

வைரமாலை படத்தை தொடர்ந்து காலம் மாறிப்போச்சு, கல்யாணம் செய்துகோ உள்ளிட்ட படங்களில் நடித்த வி.எஸ்.ராகவன், 1957-ம் ஆண்டு வெளியான சமய சஞ்சீவி என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். தொடர்ந்து காதலிக்க நேரமில்லை, கர்ணன், சிவகாமியின் செல்வன், உரிமைக்குரல், இரு துருவம் நீலகிரி எக்ஸ்பிரஸ், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  

க்ளாசிக் சினிமா மட்டுமல்லாமல் இன்றைய டிஜிட்டல் சினிமாவிலும் நடித்துள்ள வி.எஸ்.ராகவன், கலகலப்பு, சகுனி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஒளிவிளக்கு என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்திருந்த வி.எஸ்.ராகவன், தொடர்ந்து அவருடன் பல படங்களில் இணை்ந்து நடித்திருந்தார். இதனால் அவர்களுக்கு இடையே ஆழமான நட்பு இருந்துள்ளது.

இந்த நட்பின் அடையாளமாக எம்.ஜி.ஆர் முதல்ரான பின் இயல் இசை நாடக மன்ற கௌரவ தலைவராக வி.எஸ்.ராகவனை நியமித்திருந்தார். எவ்வளவு தான் எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்பை வளர்த்து வந்தாலும் எம்.ஜி.ஆர் செய்த உதவியை வி.எஸ்.ராகவன் ஏற்க மறுத்த நிகழ்வும் நடந்துள்ளது. ஒருமுறை வி.எஸ்.ராகவனின் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.

இதை அறிந்து வருத்தப்பட்ட எம்.ஜி.ஆர் தனது உதவியாளரிடம் சொல்லி வி.எஸ்.ராகவனுக்கு பணம் கொடுக்குமாறு கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் உதவியாளரும் பணத்தை கொண்டுபோய் கொடுத்தபோது வி.எஸ்.ராகவன் அந்த பணத்தை வாங்க மறுத்துள்ளார். இவ்வளவு நெருங்கிய நட்பு இருந்தும் நமது உதவியை வாங்க மறுத்துவிட்டாரே என்று எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டுள்ளார். இது குறித்து ராகவனிடம் கேட்டபோது எனக்கு ஏற்கனவே தேவையான பணம் கிடைத்துவிட்டது. அதனால் இந்த பணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த பணம் இப்போது உதவி தேவைப்படுபவர்களுக்கு பயன்படும். எனக்கு கஷ்டம் என்றால் நான் உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பேன் என்று சொல்ல, எம்.ஜி.ஆரும் அதனை புரிந்துகொண்டு அவரின் நேர்மையை பாராட்டியுள்ளார். இந்த நட்பு நீண்டகாலம் நீடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply