• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே படம்... மொத்த பணத்தையும் இழந்த எம்.ஜி.ஆர் - தக்க சமயத்தில் கைகொடுத்த பிரபலம்

சினிமா

எம்.ஜி.ஆர் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முறை திறமையுடன் வலம் வந்தவர். இவர் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான படம் நாடோடி மன்னன்.

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி ஆளுமையை வகுத்து ஆட்சி செய்தவர் எம்.ஜி.ஆர். சிறுவயது முதல் நாடக நடிகராக இருந்து பின்னாளில் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பல அவமானங்கள், தடை என அனைத்தையும் கடந்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் தான் எம்.ஜி.ஆர். அவரது திரை பயணமும் அரசியல் பயணமும் இன்றைய நடிகர்களுக்கு முக்கிய ஊன்றுகோலாக உள்ளது.

எம்.ஜி.ஆர் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முறை திறமையுடன் வலம் வந்தவர். இவர் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான படம் நாடோடி மன்னன். இந்த படத்தில் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் நம்பிக்கை இல்லாத நடிகை பானுமதி படத்தில் இருந்து பாதியில் விலகி கொண்டதும் அவருக்கு பதிலாக சரோஜா தேவி நடித்ததும் சுவாரஸ்யமான தகவல்.

அந்த படம் எம்.ஜி.ஆருக்கு இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என மூன்று துறைகளிலும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து சில வருட இடைவெளிக்கு பிறகு எம்.ஜி.ஆர் மீண்டும் இயக்கி தயாரித்து நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். 1970-ல் தொடங்கப்பட்ட இந்த படத்தில், எம்.ஜி.ஆர், சந்திரகாலா, மஞ்சுளா, லதா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம், முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட முதல் படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் நடிகைகள் என பலரையும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் பொறுப்பை எம்.ஜி.ஆரே ஏற்றிருந்தார். படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் படம் வெளியாகவில்லை.

இந்த படத்தில் ஏற்கனவே அதிகமான பாடல்கள் இருந்தபோதும், எம்.ஜி.ஆர் மேலும் ஒரு பாடலை சேர்க்க திட்டமிட்டு, அந்த பாடலை டார்ஜிலிங்கில் படமாக்க திட்டமிட்டிருந்துள்ளார். இந்த பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர் பனிச்சறுக்கு விளையாட்டு கற்றுக்கொண்டிருந்த நிலையில், அந்த காலக்கட்டத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்திருந்தது. இதனால் இடைத்தேர்தலுக்கு முன்பாக படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று எம்.ஜி.ஆரின் ஆலோசகர் ஆர்.எம்.வீரப்பன் யோசித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் இந்த படத்திற்காக செலவு செய்துவிட்டார். இதனால் இடைத்தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லை என்பதால் படத்தை வெளியிட்டால் தான் தேர்தல் செலவுக்கு பணம் கிடைக்கும் என்று யோசித்த ஆர்.எம்.வீரப்பன், இது பற்றி எம்.ஜி.ஆரிடம் சொல்ல போக, அவரோ இப்போது படத்தை வெளியிட்டு தோல்வியடைந்தால், இது தேர்தலை பாதிக்கும், அதனால் தேர்தல் முடிந்து வெளியிடலாம் என்று யோசித்துள்ளார்.

இதனிடையே எம்.ஜி.ஆரை சந்தித்து பேசிய ஆர்.எம்.வீரப்பன், நம்மிடம் இருந்த பணத்தை எல்லாம் இந்த படத்தில் போட்டாச்சு, இப்போது தேர்தல் செலவுக்கு பணம் இல்லை. அதனால் எடுத்தவரைக்கு போதும் படத்தை வெளியிடலாம் என்று கூறியுள்ளார். வீரப்பனின் யோசனையை சரி என்று நினைத்த எம்.ஜி.ஆர் தனது கடைசி பாடல் இல்லாமலே படத்தை வெளியிட்டுள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை பெற்றது.

படத்தின் வெற்றியை தொடர்ந்து தேர்தலிலும், எம்.ஜி.ஆருக்கு பெரிய வெற்றி கிடைத்தது. உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக தனது மொத்த பணத்தையும் செலவு செய்த எம்.ஜி.ஆருக்கு தக்க சமயத்தில் ஆலோசனை கொடுத்து அவரின் பணத்திற்கு பாதுகாப்பாக நின்றவர் ஆர்.எம்.வீரப்பன். அதேபோல் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக எம்.ஜி.ஆர் போஸ்டரே அடிக்காமல் படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply