• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹவுதிகள் தொடர்பில் முன்னாள் பிரித்தானிய கடற்படைத் தலைவர் எச்சரிக்கை

ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பிரித்தானியாவும் அமெரிக்காவும் கூட்டு நடவடிக்கை முன்னெடுத்துள்ள நிலையில், அவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று முன்னாள் கடற்படைத் தலைவர் எச்சரித்துள்ளார். சமீபத்திய நாட்களில் செங்கடலில் நடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக யேமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய கிட்டத்தட்ட 30 முகாம்களை பிரித்தானியா மற்றும் அமெரிக்கா வான்படை குண்டுவீசி தாக்கியதையடுத்து, ஹவுதி அமைப்பு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
  
காசா பகுதியில் ஹமாஸ் படைகளுக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் போரை நிறுத்தும் பொருட்டே நவம்பர் பிற்பகுதியில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வணிக கப்பல்கள் மீது டசின் கணக்கான தாக்குதல்களை நடத்தியது.

ஆனால் தாக்குதல்களுக்கு இலக்கான பெரும்பாலான கப்பல்கள் இஸ்ரேலுக்கு தொடர்புடையது இல்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த தாக்குதல் நடவடிக்கை பதிலளிக்கப்படாமல் போவதில்லை என்று ஹவுதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனிடையே, ஏமனில் ஹவுதிகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு அமெரிக்காவுக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர். மேலும், ஹவுதி தலைவர் முகமது அலி அல்-ஹவுதி தெரிவிக்கையில்,

நாங்கள் அமெரிக்காவின் கடற்கரையைத் தாக்கவில்லை, அமெரிக்கத் தீவுகளில் நாங்கள் செல்லவில்லை, அங்குள்ள மக்களைத் தாக்கவில்லை. எங்கள் நாட்டின் மீதான உங்கள் தாக்குதல் என்பது உண்மையில் பயங்கரவாதம் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கைக்கு கனடா பிரதமர் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், முன்னாள் பிரித்தானிய கடற்படைத் தலைவர் Admiral Lord West தெரிவிக்கையில்,

அமெரிக்காவும் பிரித்தானியாவும் முன்னெடுத்த நடவடிக்கையானது தற்போதைய சூழலில் பொருத்தமானது. ஹவுதிகளின் பிரச்சனையை நாம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என்பதை இது காட்டுகிறது என்றார்.

இருப்பினும், ஹவுதிகள் அடிபணிவார்கள் என்ற நம்பிக்கை தமக்கில்லை என்றும், அவர்கள் கண்டிப்பாக கப்பல்கள் மீதான தாக்குதலை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் இருந்துகொண்டே அந்த நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தவர்கள் என்றும் சவுதி அரேபியா தொடுத்த கடுமையான போரையும் ஹவுதிகள் எதிர்கொண்டவர்கள் என்றும் Admiral Lord West குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஹவுதிகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிட தாம் தயாராக இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply