• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கதை சொன்னபோது விளையாடிய கண்ணதாசன் : பாடல் வரிகளால் காலில் விழுந்த விசு

சினிமா

இயக்குனர் விசு கதை சொன்னதை கண்டுகொள்ளாத கவியரசர் கண்ணதாசன் கதை சொல்லி முடித்தவுடன் அதற்கு ஏற்றவாறு சரியான ஒரு பாடலை கொடுத்து விசுவை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் விசு. குடும்ப உறவுகள், அவர்களுக்குள் ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைத்து அதை வெற்றிப்படமாக மாற்றும் விசு, இயக்குனர் கே.பாலச்சந்திரிடம் உதவியாளராக இருந்தவர். ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடக குழுவில் இருந்த விசு, 1977-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய பட்டின பிரவேசம் என்ற படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார்.

அதன்பிறகு தில்லு முள்ளு, நெற்றிக்கண், மழலை பட்டாளம் உள்ளிட்ட சில படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய விசு, 1981-ம் ஆண்டு வெளியான குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியிருந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் ஒரே வீட்டில் இருக்கும் 4 வெவ்வேறு குடும்பங்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை மையப்படுத்தி திரைக்கதை எழுதியிருப்பார். இந்த படம் தமிழ் சினிமாவில் குடும்ப படங்கள் அதிகம் வருவதற்கு ஒரு தொடக்கமாக அமைந்தது.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்திற்கு வாலி மற்றும் கண்ணதாசன் ஆகிய இருவரும் பாடல்கள் எழுதியிருந்தனர். இதில் குடும்பம் ஒரு கதம்பம் என்று தொடங்கும் அந்த பாடலை கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த பாடல் வரும் சுட்சிவேஷனை விளக்கி சொல்வதற்காக இயக்குனர் விசு எம்.எஸ்.வி இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது கண்ணதாசன் சில நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார். அவருக்கு விசு கதையை சொல்கிறார்.

ஒரு கட்டத்தில் விசு நீண்ட நேரம் கதை சொல்லிக்கொண்டிருக்க, கதையில் இருந்து விலகிய கண்ணதாசன், எம்.எஸ்.வியிடம் விளையாட்டை தொடங்கியுள்ளார். இதனால் கோபமான விசு, கண்ணதாசனையே பார்த்துக்கொண்டிருக்க, அவரோ கதையை சொல் என்பது போல் சைகை காட்டியுள்ளார். ஆனாலும் அவர் கேட்கிறாரா அல்லது விளையாடுகிறாரா என்பது புரியாமல் விசு கதையை சொல்லி முடிக்க, கண்ணதாசன் பாடலுக்கான வரிகளை சொல்கிறார்.

அந்த பாடல் தான் ‘’குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம்’’ ‘’தினமும் மதி மயங்கும் பல எண்ணம் பல எண்ணம்’’ ‘’ தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை குழந்தை ஒரு பாதை காலம் செய்யும் பெரும் லீலை’’ என்று வரிகளை கொடுத்துள்ளார். இதை கேட்ட விசு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் 3-வது வரியில் குழந்தைகள் ஒரு பாதை என்பதை மாற்ற கூறியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன், அப்பா அம்மா வேலை செய்வதால் குழந்தை ஹாஸ்டலுக்கு போகிறது இது அவரின் பாதை தானே என்று விளக்கியுள்ளார்.

இந்த விளக்கத்தை கேட்ட விசு என் கதையில் எனக்கே தெரியாத ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள். இந்த பாடல் அப்படியே இருக்கட்டும் என்று அவரின் காலில் விழுந்து வணங்கியுள்ளார்.
 

Leave a Reply