• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை ஜனாதிபதி ரணில் நிறுத்த வேண்டும்

இலங்கை

”மக்களின் தலையில் மிளகாய் அரைப்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டுமென ” அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இவ் அரசாங்கமானது புதிய ஆண்டிலிருந்து நினைத்துப் பார்க்க முடியாத வரிச் சுமைகளை மக்கள் மீது திணித்து வருகின்றது.

இதனை மக்கள் மீதான வரி அடக்குமுறை என்றே எமது அமைப்பு கருதுகின்றது. அதுமட்டுமல்லாது இந்த அரசாங்கம் மக்களிடம் வரியை பெற்றுக் கொண்டு மக்களுக்கு பல்வேறான நிவாரணங்களை வழங்குகின்றோம் என்று கூறிக் கொண்டாலும் உண்மையிலேயே சாதாரண மக்களுக்கு எந்தவிதமான நிவாரணங்களையும் வழங்கவில்லை.

மாறாக இந்த நாட்டில் உயர் தொழில் புரிகின்ற வைத்தியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் போன்ற துறை சார்ந்த தரப்பினர்களுக்கே  அரசாங்கம் நிவாரணங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகின்றது.

ஜனாதிபதி ரணில் தேர்தலில் வெல்வதை நோக்கமாகக் கொண்டே நாட்டில் உயர் தொழில் புரிகின்ற வர்க்கத்தினருக்கு சலுகைகளை வழங்கியுள்ளார். ஆனால் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய்  சம்பள அதிகரிப்பு இன்றும் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படாமல் வெறும் கனவாகவே காணப்படுகின்றது.

இதனை மலையக அரசியல் தலைமைகளும் உணர்ந்து கொண்டு தங்களுடைய மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்” இவ்வாறு தம்பிராசா தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply