• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுகர்வோர் தேவை குறைவால் வீழ்ச்சி அடையும் சாம்சங் லாபம்

தென் கொரியாவை சேர்ந்த முன்னணி பன்னாட்டு மின்னணு நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், சாம்சங் (Samsung). இதன் தலைமை அலுவலகம் தென்கொரிய சுவோன் (Suwon) நகரில் உள்ளது.

கணினிகளில் உபயோகப்படுத்தப்படும் "சிப்" (chip), நவீன தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல உயர் தொழில்நுட்ப மின்னணு பொருட்களை இந்தியா உட்பட உலகெங்கும் தயாரித்து விற்பதில் சாம்சங் முன்னணியில் உள்ளது.

சாம்சங் வெளியிட்டுள்ள அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரையிலான காலாண்டு கணக்கில், அதன் லாபம் $2.13 பில்லியன் எனும் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், 2022ல் இதே காலாண்டு லாபத்துடன் ஒப்பிடும் போது இது 35 சதவீதம் குறைவு என்றும் தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி, வரவிருக்கும் மாதங்களிலும் லாபம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும் என அறிவித்துள்ளது.

2020 கோவிட் பெருந்தொற்று காலத்தில் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தால் பலர் புது மின்னணு உபகரணங்களை வாங்கியதால் அப்போது தொடங்கி சாம்சங் விற்பனை அதிகரித்து வந்தது.

ஆனால், நுகர்வோர் தேவை 2021லிருந்து குறைய தொடங்கியதால், சிப்களின் விலையும் குறைய தொடங்கியது.

ஆண்டுதோறும் அமெரிக்கவின் லாஸ் வேகாஸ் நகரில் சிஈஎஸ் (CES) எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சி நடைபெறும். இதில் உலகின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் மின்னணு உபகரண உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கும். சுமார் 4000 விற்பனையாளர்கள் காட்சி கூடம் அமைப்பதால், அதை காண சுமார் 1,30,000 பார்வையாளர்கள் வருவார்கள்.

இவ்வருடம் ஜனவரி 9 அன்று தொடங்கி 12 வரை இக்கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், சாம்சங் இத்தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply