• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வியக்க வைத்த தருமிக்கு 100-வது நாள் விழாவில் அழைப்பு இல்லையா? திருவிளையாடல் ப்ளாஷ்பேக்

சினிமா

திருவிளையாடல் படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நடிகர் நாகேஷ்க்கு அந்த படத்தில் 100-வது நாள் விழாவில் அழைப்பு கொடுக்கப்படவில்லை.

தமிழ் சினிமாவில் தனது காமெடி மற்றும் உடல்மொழியின் மூலம் மக்களை சிரிக்க வைத்த கலைஞர்களில் முக்கியமானவர் நாகேஷ். பல கட்ட போராட்டத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற நாகேஷ், எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமல்லாமல், ஜெய் சங்கர், முத்துராமன், ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

அந்த வகையில் கடந்த 1965-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் திருவிளையாடல். சிவாஜி சாவித்ரி இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் தருமி வேடத்தில் நாகேஷ் சிறப்பாக நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த காலக்கட்டத்தில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வந்த நாகேஷ் இந்த படத்திற்காக ஒன்றரை நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

அப்படி அவர் படப்பிடிப்புக்கு வந்தபோது மதியம் வேறொரு படத்தின் படப்பிடிப்புக்காக செல்ல வேண்டி இருந்துள்ளார். இதனால் சிவாஜி மேக்கப் போட்டு வர லேட் ஆகும் என்பதால் இவர் தொடர்பான காட்சிகளை மட்டும் படமாக்கிக் கொள்ள இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அனுமதி கொடுத்துள்ளார். அதன்படி நாகேஷ் தனியாக வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டது. அப்போது நாகேஷ் நீ எப்படி வேண்டுமானாலும் நடி ஆனால் எனது வசனத்தை மட்டும் மாற்றி விடாதே என்று இயக்குனர் கூறியுள்ளார்.

தனியாக வரும் காட்சிகளில் பிரமாதமாக நடித்திருந்த நாகேஷ் சிவாஜியுடனான காட்சியில் அவர் கம்பீரமாக இருந்தாலும், அவர் பின்னாடியே சேட்டை செய்வது போல் நடித்திருந்த நாகேஷின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. சிவாஜியே இவரின் நடிப்புக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து படத்தின் 100-வது நாள் வெற்றி விழா அறிவிக்கப்பட்டது. இதில் சிவாஜிக்கு வைரவாள், சாவித்ரிக்கு வைர மோதிரம் பரிசாக அளிக்கப்படும் என்று செய்திகள் வெளியானது.

இந்த விழா குறித்து பேச தன் வீட்டுக்கு வந்த உதவி இயக்குனரிடம் பேசிய நாகேஷ், விழாவில் சிவாஜிக்கு வைர வாள், சாவித்ரிக்கு வைர மோதிரம் கொடுப்பது போல் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பை கொடுங்கள். அதில் காசுதான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை நீங்கள் கல்லை மட்டும் போட்டு கொடுங்கள் விழாவிற்கு வருபவர்களுக்கு கௌரவமாக இருக்கும் என்று சொல்ல, நல்ல யோசனை நான் இயக்குனரிடம் சொல்கிறேன் என்று அந்த உதவி இயக்குனர் கூறி சென்றுள்ளார். ஆனால் அடுத்த நாள் விழா அழைப்பிதழை பார்த்த நாகேஷ்க்கு அதிர்ச்சி காத்திருந்தது.

திருவிளையாடல் 100-வது நாள் விழாவுக்கு நாகேஷ்க்கு அழைப்பு இல்லை. இதனால் நொந்துபோன நாகேஷ் ஏன் நம்மை அழைக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்துள்ளார். சில நாட்கள் கழித்து இதற்கான உண்மை அவருக்கு தெரியவந்துள்ளது. பொற்காசுகள் பையில் கல்லை போட்டு கொடுங்கள் என்று நாகேஷ் சொன்னதை அந்த உதவி இயக்குனர் நாகேஷ் ஆயிரம் பொற்காசுகள் கேட்கிறார் என்று இயக்குனரிடம் கூறியதால் அவருக்கு அழைப்பு இல்லை என்று தெரிந்து கொண்டுள்ளார். 

தமிழச்சி கயல்விழி
 

Leave a Reply