• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆர். ரகுமானுக்கு பாடியதால் மின்மினிக்கு வாய்ப்பளிக்க மறுத்தாரா இளையராஜா? உண்மையில் என்ன நடந்தது?

சினிமா

ஏ.ஆர். ரகுமானுக்கு பாடியதால் மின்மினிக்கு இளையராஜா வாய்ப்பு அளிக்க மறுத்தாரா? உண்மையில் என்ன நடந்தது? மின்மினி ஏ.ஆர். ரகுமான் இசையில் ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் பாடிய பிறகு, இளையராஜா இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழ் திரையிசை உலகில் 1970-களில் தொடங்கி 1992-வரை 2 தசாப்தங்கள் தனி இளையராஜா தனி ராஜாங்கம் நடத்தி வந்த நிலையில், 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் சின்ன சின்ன ஆசை பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி வைத்துக் கொண்டார் ஏ.ஆர். ரகுமான். அவருடைய என்றைக்கும் புகழ்பெற்ற பாடலான சின்ன சின்ன ஆசை பாடல் பாடிய குரலுக்கு சொந்தக் காரரான பாடகி மின்மினி திரையிசையில் ஒரு மின்மினி போலவே காணாமல் போய்விட்டார்.

பாடகி நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு மலையாள டிவிக்கு அளித்த நேர்காணலில், இசையமைப்பாளர் இளையராஜா மின்மினி ஏ.ஆர். ரகுமானுக்கு பாடியதால் தன்னை கடிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். மின்மினியின் இந்த நேர்காணல், ஏற்கெனவே, பாடகி மின்மினி ஏ.ஆர். ரகுமானுக்கு பாடியதால் இளையராஜா அவருக்கு வாய்ப்பு அளிக்க மறுத்ததாக ஒரு வதந்தி புகைந்து கொண்டிருந்ததற்கு தூபம் போட்டு பற்றி எரியச் செய்திருக்கிறது. இதனால், ஏ.ஆர். ரகுமானுக்கு பாடியதால் மின்மினிக்கு இளையராஜா வாய்ப்பு அளிக்க மறுத்தாரா? உண்மையில் என்ன நடந்தது என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார்.

கேரளாவில் பிறந்த மின்மினியின் இயற்பெயர் ரோஸலின், சிறுவயதிலேயே நிறைய மேடை கச்சேரிகளில் பாடி பெயர் பெற்றவர். இவருடைய பாடும் திறமையைப் பார்த்து வியந்த பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன், ரோஸலினை அழைத்து வந்து இளையராஜாவின் இசையில் பாட வைக்கிறார். இளையராஜாதான் சினிமாவுக்காக ரோஸலினுக்கு மின்மினி என்று பெயர் வைக்கிறார்.  பாடகி மின்மினி இப்போதும் இளையராஜா வைத்த பெயரால்தான் அறியப்படுகிறார்.

இளையராஜா இசையமைத்த மீரா திரைப்படத்தில்  ‘லவ்வுன்னா லவ்வு... மண்ணெண்ணெய் ஸ்டவ்வு’ என்ற தனது முதல் பாடலைப் பாடினார் மின்மினி. அதற்குப் பிறகு, இளையராஜாவின் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

இளையராஜா தமிழ் சினிமாவில் ஒரு தனி ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்தபோது, 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தில் இசையமைத்த ஏ.ஆர். ரகுமான் சினிமா உலகையே புரட்டிப் போடுகிறார். ரோஜா படத்தில் அவருடைய இசையில் அமைந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. அதிலும், ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் கேட்பவர்கள் அனைவரையும் கிரங்கடிக்கச் செய்தது. இந்த பாடலுக்குப் பிறகு, ஏ.ஆர். ரகுமான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பிஸியாகிப்போனார். இந்த பாடலைப் பாடிய மின்மினியும் பிஸியாகத்தான் இருந்தார். ஆனால், 1994-ம் ஆண்டு வாக்கில் ஒரு பாடல் கூட பாடாமல் தமிழ் சினிமா  இசையில் இருந்து காணாமல் போனார்.

இதற்கு காரணம், வெளிநாட்டில் ஒரு இசை கச்சேரியில் பாடிக் கொண்டிருந்தபோது, அவரால் பாட முடியாமல் போகிறது. இதற்கு காரணம், சிறுவயதில் இருந்து மேடைக் கச்சேரிகளில் தொடர்ச்சியாக பாடியதால் அவருடைய குரல்வலையில் பிரச்னை ஏற்பட்டு முழுவதுமாக அவருடைய குரல் போய்விட்டது. பல ஆண்டுகள் சிகிச்சை பெற்ற பிறகே அவருடைய குரல் திரும்ப வந்தது. ஆனால், அதற்கு பல ஆண்டுகள் கடந்துவிட்டது. காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது என்ற பழமொழி சினிமாவுக்கும் பொருந்தும். மின்மினி மீண்டும் சினிமாவில் பாடவில்லை. ஆனால், ஏ.ஆர். ரகுமானுக்கு பாடியதால் மின்மினிக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாய்ப்பு அளிக்கவில்லை என்ற வதந்தி பரவியது.

இந்த சூழலில்தான், மலையாள சேனல் ஒன்றுக்கு மின்மினி அளித்த நேர்காணலில், இங்கே பாடிவிட்டு அங்கே போய் ஏன் பாடினாய் என்று ஏ.ஆர். ரகுமானிடம் பாடியதற்காக இளையராஜா கடிந்துகொண்டதாகக் கூறியுள்ளார். மின்மினியின் இந்த நேர்காணல், ரகுமானிடம் பாடியதால் மின்மினிக்கு பாட வாய்ப்பு அளிக்க மறுத்தார் இளையராஜா என்ற வதந்தி மீண்டும் உலா வரத் தொடங்கியது.

மின்மினி ஏ.ஆர். ரகுமான் இசையில்  ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் பாடிய பிறகு, இளையராஜா இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அதனால், மின்மினிக்கு வாய்ப்பு அளிக்க மறுத்தார் இளையராஜா என்ற குற்றச்சாட்டு அடிபட்டுப் போகிறது. அதே நேரத்தில், இளையராஜா வாய்ப்பு அளிக்கவில்லை என்றால், ஏ.ஆர். ரகுமான் வாய்ப்பளித்திருக்க வேண்டும் இல்லையா? ஆனால், ரகுமான் இசையிலும் அவர் பாடவில்லை. தேவா, எஸ்.ஏ. ராஜ்குமார், சிற்பி போன்ற மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலாவது மின்மினி பாடி இருக்க வேண்டும். ஆனால், அப்படியும் மின்மினி பாடவில்லை. இதற்கு அவருடைய குரலில் ஏற்பட்ட பிரச்னைதான் முக்கியக் காரணம்.

அதே போல, எஸ்.பி. பாலசுப்ரமணியம், சித்ரா, மனோ, போன்ற பாடகர்கள், ஒரே நேரத்தில் இளையராஜா இசையிலும் ஏ.ஆர். ரகுமான் இசையிலும் பாடிக்கொண்டுதான் இருந்தார்கள். அவர்களை இளையராஜா கடிந்துகொண்டது இல்லை. அதனால், மின்மினியை கடிந்துகொண்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. மின்மினி நேர்காணலில் கூறியிருப்பதால் இளையராஜ கடிந்துகொண்டிருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், இது குறித்து இளையராஜா மவுனம் களைக்காமல் ஒரு தரப்பு  கருத்தை மட்டும் வைத்து முடிவெடுக்க முடியாது என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி கூறுகிறார்.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply