• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்- முன்னாள் துணை சபாநாயகர்

பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சத்தீவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். ஆழ்கடலில் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டார். இதையடுத்து தனது பயண அனுபவம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்கள் தெரிவித்து இருந்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து இருந்தார்.

இதனை விமர்சிக்கும் வகையில் மாலத்தீவு மந்திரிகள் மரியம் ஷியூனா, மல்சா ஷரீப், அப்துல்லா மஹ்சூம் மஜீத் ஆகிய 3 பேரும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். சுற்றுலாவை பொறுத்தவரை மாலத்தீவுடன் இந்தியா போட்டியிட முடியாது என்பது போன்ற கருத்துகளை தெரிவித்தனர். இது இரு நாட்டு உறவுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி இருக்கிறது.

மந்திரிகளின் இந்த கருத்துக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத், மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு இந்தியா தரப்பில் விளக்கமும் கேட்கப்பட்டது. இது மாலத்தீவு அதிபர் முகமது முய்சுக்கு நெருக்கடியை கொடுத்தது.

மந்திரிகளின் கருத்து அரசின் கருத்து இல்லை என்றும் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என அந்நாட்டு அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை தெரிவித்த 3 மந்திரிகளையும் சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் மாலத்தீவின் முன்னாள் துணை சபாநாயகரும் தற்போதைய எம்.பி.யுமான ஈவா அப்துல்லா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

கருத்துக்கள் மீதான சீற்றம் புரிகிறது. இந்தியர்கள் நியாயமான கோபத்தில் உள்ளனர். இந்த கருத்துக்கள் மூர்க்கத்தனமானது. வெட்கக் கேடானது. இந்திய மக்களிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்கு திரும்பி வாருங்கள் என இந்திய மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply