• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தண்ணீரில் கொதிக்கும் தவளை நிலையில் நாட்டின் கடன் சுமை - ஜேபி மோர்கன்

நியூயார்க் நகரை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு நிதி நிறுவனம், ஜேபி மோர்கன் (JP Morgan).

மிகப்பெரும் நிதி முதலீட்டு ஆலோசனை மற்றும் நிதி சேவைகள் ஆகியவற்றில் நீண்ட அனுபவம் மிக்க இந்நிறுவனம், உலக நாடுகளின் நிதி நிலவரம் குறித்து அவ்வப்போது கருத்துக்கள் வெளியிடுவது வழக்கம்.

அமெரிக்க கடன் சுமை தற்போது $34 ட்ரில்லியன் ($34 trillion) தொகையை தாண்டி விட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,82,68,62,00,00,00,000.00 ஆகும்.

"2030-ஆம் ஆண்டிற்குள் கடனுக்கான வட்டி தொகையை மட்டுமே கணக்கிட்டால் அது அமெரிக்காவின் மொத்த வருமானத்தை விட பல மடங்கு அதிகமாக பெருகி விடும்" என அமெரிக்க பட்ஜெட் அலுவலகம் சமீபத்தில் தெரிவித்தது.

2024-ஆம் ஆண்டிற்கான அமெரிக்காவின் எதிர்கால நிதி நிலை குறித்து ஜேபி மோர்கன் கருத்து வெளியிட்டுள்ளது.

அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மலை போல் குவிந்திருக்கும் அமெரிக்க கடன் சுமை "தண்ணீரில் கொதிக்கும் தவளை" நிலையை போன்று உள்ளது.

பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கடன் சுமையை சமாளிக்க மேலும் பெரும் நிதி தேவைப்படுகிறது. ஆனால், அரசு தொடர்ந்து கடன் வாங்குவதை நிறுத்தவில்லை.

அரசு எடுக்கும் ஒவ்வொரு நிதி ஊக்க நடவடிக்கைகளும், கடன் சுமையை தாங்க முடியாமல் வெடிக்கும் நிலையை நோக்கி நாட்டை கொண்டு செல்கிறது. அந்த நிலைமையும் ஒரு நாள் வெடித்து விடும்.

இவ்வாறு ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது.

கொதிக்கும் தண்ணீரில் போடப்பட்ட தவளை அதை உடனே உணர்ந்து கொண்டால் வெளியே குதித்து தப்பி விடலாம். ஆனால், அது உணர தாமதித்தால், சிறுக சிறுக வெந்து, தப்பிக்க முடியாமல் உயிரிழக்கும்.

அதே போன்று ஒரு நெருக்கடியான நிலையில் தவறை உணர்ந்து உடனடியாக செயலாற்ற வேண்டியவர்கள் செயலாற்ற தவறினால் அந்த நெருக்கடி வளர்ந்து, மீண்டும் மீளவே முடியாத அளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

இந்நிலை நிர்வாக மேலாண்மையில், "தண்ணீரில் கொதிக்கும் தவளை நிலை" என குறிப்பிடப்படும்.
 

Leave a Reply