• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜி பாணியில் எம்.ஜி.ஆர் படம்: பாலச்சந்தர் வசனங்களை திருத்திய ஆர்.எம்.வீ

சினிமா

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் நடிப்பில் தயாரித்த முதல் படம் தெய்வத்தாய். இந்த படத்திற்கு கே.பாலச்சந்தர் வசனம் எழுதியிருந்தார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் இயக்குனர் கே.பாலச்சந்தர் எம்.ஜி.ஆர் சிவாஜி என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கவில்லை என்றாலும் முக்கிய இயக்குனர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சிவாஜி நடிப்பில் எதிரொலி என்ற ஒரு படத்தை மட்டும் இயக்கிய கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் நடிப்பில் படங்களை இயக்கவில்லை என்றாலும் தெய்வத்தாய் என்ற படத்திற்கு வசனம் எழுதியிருந்தார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் நடிப்பில் தயாரித்த முதல் படம் தெய்வத்தாய். தனது சத்யா மூவிஸ் நிறுவனத்தின் மூலம் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த முதல் படமான இந்த படத்தை வித்தியாசமான முறையில் எடுக்க விருப்பப்பட்ட அவர், எம்.ஜி.ஆர் அந்த படத்திற்கு முன்பு நடித்த புராண கதைகளை விடுத்து புதிய கதைக்களத்துடன் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.

அதன்படி இந்தியில் வெளியான ஒரு படத்தின் உரிமையை வாங்கி எம்.ஜி.ஆர் நடிப்பில் அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தார். அதேபோல் இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் படங்களை இயக்கிய இயக்குனர்கள் இல்லாமல் சிவாஜி நடிப்பில் படங்களை இயக்கிய இயக்குனர் பி.மாதவன் இந்த படத்தை இயக்க ஒப்பந்தமானார். அப்போது கே.பாலச்சந்தர் தனது மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தை நடத்தினார்.

இந்த நாடகத்தை பார்த்த ஆர்.எம்.வீரப்பன் தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுத கே.பாலச்சந்தரை தேர்வு செய்துள்ளார். மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தை பார்த்த எம்.ஜி.ஆரும் கே.பாலச்சந்தர் வசனம் எழுத சம்மதித்துள்ளார். அதன்பிறகு படத்தின் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், கே.பாலச்சந்தர் வசனத்தை எழுத தொடங்கினார்.

பொதுவாக எம்.ஜி.ஆர் படத்தின் வசனங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றும் என்பதால், இந்த படத்தின் வசனத்தில் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனின் தலையீடு இருந்துள்ளது. இந்த தலையீடுகளில் அவர் சொன்ன அத்தனை திருத்தங்களையும் கே.பாலச்சந்தர் ஏற்றுக்கொண்டாலும் அவருடன் இருந்தவர்கள் உங்கள் சுதந்திரம் பறிபோகிறது. அவரே இந்த படத்தின் வசனக்கர்த்தா போல் இருப்பதாக கூறியுள்ளனர்.

ஆனாலும் படித்த பட்டதாரியான கே.பாலச்சந்தர், ஆர்.எம்.வீரப்பனின் திருத்தங்களை ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் அவர் என் வசனங்களை திருத்தவில்லை. என்னை திருத்தினார். அவர் என்னை மேலும் மெருகேற்றினார். எனக்கு பிடித்ததை மக்கள் மத்தியில் சொல்ல நினைத்தேன். ஆனால் மக்களுக்கு பிடித்ததை அவர் என் மூலம் சொல்ல வைத்தார் என்று கே.பாலச்சந்தர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். 
 

Leave a Reply