• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவிப்பேரரசின் மகாகவிதை! வெளியீடு 

சினிமா

-01.01.2024 அன்று சென்னையில் வெளியிடப்படுகிறது

நாற்பதாண்டு இலக்கிய நாயகன்  கவிப்பேரரசு வைரமுத்து!!
மகாகவி எழுதும் மகாகவிதை தமிழ் தரும் உலகக்கொடை!!!
தமிழ்த் திரை உலகில் தான் அறிமுகமான காலம் முதல் இன்று வரை 40 ஆண்டுகள்  தாண்டி அரை நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது தனித்துவமான படைப்பாற்றல் மூலம் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆழ்ந்த அறிவும் முதிர்ந்த ஞானமும் கொட்டிப் படைத்துள்ள மகாகவிதை நூலைத் தமிழ் உலகம் வரவேற்கக் காத்து நிற்கிறது.
தமிழில் அதிக விற்பனையாகும் நூல்களின் படைப்பாளர் எனும் பெயரைத் தக்கவைத்துள்ள கவிப்பேரரசின் மகாகவிதை உலகில் உள்ள தமிழர் இல்லங்களையெல்லாம் நிறைக்கும் தமிழின் உயிராகலாம்.
தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் வடுகபட்டியில் 1953 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி
ராமசாமி -அங்கம்மாள் எனும் பெற்றோருக்குப் பிறந்து உலகம் போற்றும் கவிப்பேரரசராக உயர்ந்து நிற்கிறார் கவிப்பேரரசு.
கண்ணதாசன் பாடல்களுக்குப் பிறகு திரைப்பாடல் உலகத்தில் ஓர் இடைவெளி விழுந்தது.
திரைப்பாடல்களில் மெட்டுக்கிடையே விழும் பள்ளங்களை இட்டு நிரப்பும் ஜல்லிக் கற்களாய்  சொற்கள் ஆதிக்கம் செலுத்திய அக் காலத்தில் , தனது தனித்துவ மொழியில் செறிவான வீரியமிக்க வரிகளில் கவித்துவமிக்க கருத்துகளில், கவின்மிகு கற்பனையில், ஓவியமான வர்ணனைகளில் தனியடையாளம் பெற்ற பல்லாயிரம் பாடல்கள் எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். இப்படித் தன்
பங்களிப்பின் மூலம் அக்காலக்கட்டத்தில்  வறுமையிலிருந்த திரைப்பாடல்களுக்குச் செழுமை சேர்த்தவர் அவர். காற்றில் கலந்து காணாமல் போய்க் கொண்டிருந்த திரைப்பாடல்களை நினைவேடுகளில் சேமித்து வைக்கும்படியான ஓர் இலக்கியமாய் மாற்றியவர் அவர்.
இன்றைய காலத்துத் தொலைக்காட்சி இசைப்பாடல்ப் போட்டிகளில் கவிப்பேரரசுவின் பாடல்களே அதிக பாடகர்களால் பாடப்படுகிறது.
அவரை வெறும் திரைப்பாடல் ஆசிரியர் என்கிற ஒற்றை வகைமைக்குள் அடக்கி விட முடியாது.
தமிழில் உள்ள அத்தனை எழுத்து வகைமைகளிலும் எழுதியவர்; எழுதிக் கொண்டும் இருப்பவர்.
தன் எழுத்தின் மூலம் தனக்கான சாம்ராஜ்யத்தை நிறுவி கடைசி வரை பதவி விலகாத ஆளுங்கட்சியாக
அரியணையில் அமர்ந்திருப்பவர்.

திரைப்படப் பாடல்கள், கவிதைகளில் மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள்,கட்டுரைகள், நாவல்கள் ,சிறுகதைகள்,
வரலாற்று ஆய்வுகள், திரைப்பட  வசனங்கள் ,மேடைப் பேச்சுகள்என அனைத்திலும் துலங்கு தமிழால் விளங்கி வெற்றி பெற்றவர்.எந்த வகைமையில்  எழுதினாலும் தன் நறுமணம் வீசும் வாசனைத் தமிழால் வாசகர்களை வசப்படுத்தியவர்.
சுமார் அரை நூற்றாண்டு காலம் இலக்கியத்தை ரசிக்கும் ஈர மனம் கொண்ட இளைஞர்கள் இவரது சொக்கத் தமிழில் சொக்கிப் போய் கிடக்கிறார்கள்.
அன்று முதல் இன்று வரை வற்றாத ஜீவநதியாய் பெருகி வழியும் இவரது படைப்பூக்கம்  வளரும் தலைமுறைக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது.
எம்ஜிஆர் -சிவாஜி காலம் தொட்டு, ரஜினி -கமல் காலம் என வளர்ந்து, விஜய் அஜித் காலமெனத் படர்ந்து, தனுஷ் சிம்பு என அடர்ந்து இன்றைய புதுமுகங்கள் வரை தொடர்ந்து எழுதி வருகிறார்.
அந்த வகையில் நான்கு தலைமுறைக் கலைஞர்களுக்கும் எழுதியுள்ள வாழும் கவிஞர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
தமிழ்ப் புலவர்கள் என்றாலே  புரவலர்கள் முன் முதுகெலும்பு வளைந்து இரவலர் போல் நிற்கும் நிலையிலான ஒரு தோற்றம் இருந்தது.
 இந்நிலையில் கம்பீரமும் தமிழின் அடையாளம் என்பதற்கு உதாரணமாக தனது தோற்றத்தாலும் மொழியாலும் நடத்தையாலும் இலக்கிய செயல்பாடுகளாலும் தமிழக இளைஞர்கள் மத்தியில் தனக்கான ஒரு பிம்பத்தை வரைந்து கொண்டார்.
தமிழ் படித்தவன் தலைகுனியக் கூடாது என்பதற்கு தானே ஒரு உதாரணமாக விளங்குகிறார்.
இவரது படைப்புகளில்குறிப்பிடத்தக்கவை என,
வைகறை மேகங்கள்,
திருத்தி எழுதிய தீர்ப்புகள்,
இன்னொரு தேசியகீதம்,
எனது பழைய பனையோலைகள்,
கவிராஜன் கதை,
இரத்த தானம்,
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல,
தமிழுக்கும் நிறமுண்டு,
பெய்யெனப் பெய்யும் ம‌ழை
எல்லா நதியிலும் என் ஓடம்,
கொடி மரத்தின் வேர்கள்,
இதுவரை நான்,
கல்வெட்டுகள்,
என் ஜன்னலின் வழியே,
ஒரு மெளனத்தின் சப்தங்கள்,
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்,
வடுகபட்டி முதல் வால்கா வரை,
இதனால் சகலமானவர்களுக்கும்,
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்,
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்,
வானம் தொட்டுவிடும் தூரம்தான்,
மீண்டும் என் தொட்டிலுக்கு,
வில்லோடு வா நிலவே,
சிகரங்களை நோக்கி,
ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்,
காவி நிறத்தில் ஒரு காதல்,
தண்ணீர் தேசம்,
கள்ளிக்காட்டு இதிகாசம்,
கருவாச்சி காவியம்,
மூன்றாம் உலகப்போர்,
தமிழாற்றுப்படை என எத்தனை வகைமைகள் எத்தனை படைப்புகள்!
இந்த வரிசையை வெற்றிகொள்ள வருகிறது மகாகவிதை.
வைரமுத்துவின் வழியைப் பின்பற்றிய இளைஞர்கள் அவரது பாதிப்பில் நிறைய பேர் எழுத வந்தார்கள்.
அவரது ரசிகராகத் தமிழால் வயப்படுத்தப்பட்டு ஈர்க்கப்பட்டவர்கள், பல்லாயிரம் பேர் பேனா பிடித்தார்கள்.
அவர்களில் நகல் எடுத்தவர்கள் நகைப்புக்கு உள்ளானார்கள். தூண்டுதலாகக் கொண்டவர்கள் துலங்கினார்கள். தங்கள் ஆர்வத்தை ஆற்றலாக மாற்றியவர்கள் மட்டும் நிலைத்து நிற்கிறார்கள்.
ஒரு தமிழ் ரசிகனாக அவருடன் எனக்கு ஏற்பட்ட நட்பும் அன்பும் புரிந்துணர்வும் அறிமுகக் காலத்தில் இருந்து இன்று வரை தொடர்கிறது. 
நான் அவர் மேல் வைத்துள்ளது அளப்பரிய மதிப்பு என்றால் அவர் என் மேல் வைத்துள்ளது அளப்பரிய அன்பு. 
அவர் தனது எந்த நட்புக்கும்  கற்பு உண்டு என்று அதைப் பராமரிப்பவர்.
அந்த வகையில் என்னை தனது அனுக்கமான நட்பு மண்டலத்திலும் அன்பு சூழ் உலகத்திலும் இடம் கொடுத்து வைத்துள்ளார்.
முப்பது ஆண்டுகாலம் தாண்டிய கனிந்து மகிழும் நட்பு எங்களுடையது.
“இலக்கியத்தில் நட்பின் இலக்கணம் பிசிராந்தையார் என்பார்கள் -அது 
அந்தக்காலம்;
நட்பின் நவீன இலக்கியம் கவிப்பேரரசு என்பேன்.”
மனிதர்களால் ஆனது வாழ்வு என்று சிறுகதை எழுதியவர்  மட்டுமல்ல அதை வாழ்க்கையிலும் பின்பற்றித் தொடர்பவர்.எப்போதுமே அன்பான மனிதர்கள் சூழ இருப்பவரான அவர், தனது
படைப்புலகம் சார்ந்த முக்கியமான தருணங்களில் நானும் உடனிருக்கும் வாய்ப்பை எனக்கு அளித்துள்ளார்.
எனது திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு எங்களை வாழ்த்தினார்,எமக்காகக் வாழ்த்துக் கவிதையும் பாடினார்.
“நட்சத்திரங்களே வந்து வாழ்த்துமழை தூவுங்கள்
நிலவுள்ள வரை நீங்கள் வாழ்க 
நிலமுள்ள வரையில் நீங்கள் வாழ்க “என்று வாழ்த்தினார்.
எனக்கு அவரது இதயத்தில் இடம் கொடுத்தது மட்டுமல்லாமல்,அவரது நூல் வெளியீட்டு விழாக்களிலும் , அவர் கலந்து கொண்ட பெரிய மேடைகளிலும் இடம் அளித்தவர்.
“எனது இலக்கியத்தில் மட்டுமன்றி,இதயத்திலும் இருப்பவர் கல்லாறு சதீஷ் “என்று எழுதித் தந்தவர்.
அது அவர் என் மேல் கொண்டுள்ள அன்பின் அடையாளம்.
அவரது மகன்கள் இருவரின் திருமண விழாக்களில் நானும் கலந்து கொண்டேன்.அவரது தந்தை மறைந்த போது நானும் உடன் இருக்கும் காலவாய்ப்பு கிடைத்தது.இப்படி அவரது சுக துக்கங்களில் பங்கேற்கும் வகையில் காலம் எனக்கு வாய்ப்பளித்தது.
அவரது மூன்றாம் உலகப் போர் நூல் அறிமுக விழாக்கள் ஐரோப்பிய நாடுகளில் எனது தலைமையில் நடைபெற எனக்கு வாய்ப்பு வழங்கியவர்.
கவிப்பேர்ரசுடன் சிங்கப்பூர் ,சுவிட்சர்லாந்து ,நெதர்லாந்து, லட்சம்பர்க், பெல்ஜியம்,ஜேர்மனி,பிரான்ஸ் ,இலங்கை,இந்தியா,
எனப் பல நாடுகளுக்குப் பயணப்பட்டுள்ளேன்.
அவரது பாடல்களிலும் கவிதைகளிலும் நாவல்களிலும்,பேச்சிலும் காணப்படுவது வெறும் அழகியல் கூறுகள் மட்டுமா?  உளவியல், அரசியல், உலகியல், மெய்யியல், அறிவியல், ஆய்வியல்,   போன்ற எண்ணற்ற இயல்களைக் காண முடியும்,உடன் பயணிக்கும் போது அந்த அறிவின் வீச்சை ஒரு ஆசானிடம் கற்கும் மாணவனாகப் பயின்றுள்ள வாய்ப்பை என் பாக்கியம் என்பேன்.
ஒரு படைப்பாளியாக மட்டுமல்ல தனி மனிதராக எதையும் திருத்தமுறச் செய்தலும், முறையாகத் திட்டமிடுதலும், விழா நிகழ்ச்சிகளை நேர்த்தியாக நடத்துதல், நேர மேலாண்மை செய்தல் என அவரிடம் கற்றுக் கொள்ள ஏராளம் உண்டு.
அவரது நடை உடைகளில் மட்டுமல்ல நடைமுறைகளில் கூட நேர்த்தி,  கம்பீரம், கனிவு அனைத்தும் இருக்கும்..
தனது எழுத்தின் மூலம் தமிழின் ஆழத்திற்கும், கவிதையின் ரகசிய பிரதேசங்களுக்கும்  அழைத்துச் சென்ற அனுபவத்தை வழங்கியவர்.
திரைப்படப் பாடல்களுக்கு வழங்கப்படும் குடியரசுத் தலைவர் விருதை
 7 முறை பெற்றுள்ள இந்தியாவின் ஒரே கவிஞர் இவர் மட்டுமே.இந்திய அரசின் உயர் விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.அது மட்டுமல்ல தமிழ்நாடு அரசின் கலைமாமணி, சாகித்ய அகாடமி விருது போன்றவற்றையும் பெற்றவர்.
காகிதத்தில் மட்டுமல்ல ஒலிநாடாக்களிலும்
கவிதை கேளுங்கள்,
தேன் வந்து பாயுது படைப்புகளை வழங்கியவர்.
கால மாற்றத்தை உணர்ந்து இணைய உலகிலும் நாட்படுதேறல்  எனும் படைப்பாக காணொலி வடிவிலும்  வழங்கியவர். 
இப்படி காகிதத் தமிழ் காலம் முதல் கணினித் தமிழ் காலம் வரை
கரை காணாத் தமிழ் கடலில் மூழ்கி முத்தெடுத்து வருபவர். இப்போது,தன்  உயிரை உருக்கி மகாகவிதை என்னும் மாய நூலைப் படைத்துள்ளார்.
இந்த நூல் வெளியீட்டு விழா 2024 ஜனவரி 1ஆம் நாள் நடைபெறுகிறது.
காலம் வழங்கிய அந்த அரிய வாய்ப்பில் நானும் கலந்து கொண்டு கவிஞரை வாழ்த்துகிறேன்.ஆயிரம் பிறை கண்டு வாழ்க.!
அகவை மூவாத தமிழ் போல் வாழ்க!
என்றும் கனிந்த அன்புடன்
கல்லாறு சதீஷ்.
சுவிற்சர்லாந்து.
 

 

Leave a Reply