• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய ஒரே பரிசு அதுதான்!..

சினிமா

எனக்கு ஒன்னும் தர மாட்டீங்களா?!.. எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய ஒரே பரிசு அதுதான்!..

50,60களில் தமிழ் திரையுலகில் சில முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து திரைப்படங்களை தயாரித்து வந்தன. ஏவிஎம் நிறுவனம், எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி ஸ்டுடியோ, மாடர்ன்ஸ் தியேட்டர்ஸ் ஆகியவை அப்போது மிகப்பெரிய திரைப்பட நிறுவனங்களாக இருந்தது.

பெரும்பாலான நடிகர்கள் இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் ஏதோ ஒரு படத்தில் மட்டுமே நடிப்பார்கள். இன்னும் சரியாக சொல்வதென்றால் சில நடிகர்கள் ஒரு பட நிறுவனம் தயாரிக்கும் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்தார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி கூட அப்படி ஒரே நிறுவனத்திற்கு பல படங்களில் நடித்திருக்கிறார்கள்.

இதில் ஏவிஎம் நிறுவனம் இப்போது சினிமா தயாரிப்பதையே விட்டு விட்டார்கள். கடைசியாக 2014ம் வருடம் இதுவும் கடந்து போகும் என்கிற படத்தை தயாரித்தார்கள். அதுதான் அவர்கள் கடைசியாக தயாரித்த திரைப்படம். ஜெமினி ஸ்டுடியோ 1968ம் வருடம் ஒளி விளக்கு என்கிற படத்தை தயாரித்தது. அதன்பின் 1969ம் வருடம் ஒரு ஹிந்தி படம். அதோடு சரி. அதேபோல்தான், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனமும். இந்த நிறுவனம் இல்லாமலே போய்விட்டது.

அந்த காலத்தில் இவர்கள் மூவருக்கு முன்பே திருச்சி சவுந்தரராஜன் என்கிற ஒரு தயாரிப்பாளர் இருந்தார். இவர் பல திரைப்படங்களை தயாரித்தவர். எம்.ஜி.ஆர் வளரும் காலத்தின் இவரின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்தார். திருச்சி சவுந்தரராஜன் தயாரிப்பு நிறுவனம் துவங்கி 25 வருடங்கள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் தன்னுடன் பணியாற்றிய எல்லோருக்கும் ஒரு விலை உயர்ந்த பேனாவை பரிசாக கொடுத்தார்.

அவரிடம் ஆடை வடிவமைப்பாளராக இருந்த நடேசன் என்பவருக்கு போனாவை கொடுப்பதற்காக சவுந்தர ராஜனின் மகள் பூமா அவரை தேடி வந்தார். அப்போது அவர் உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தார். அவருக்கு அருகில் எம்.ஜி.ஆர் இருந்தார். விஷயத்தை சொல்லி அவரிடம் பேனாவை கொடுத்தார் பூமா.

அருகிலிருந்த எம்.ஜி.ஆர் ‘எனக்கு ஒன்றும் பரிசு இல்லையா?’ என பூமாவிடம் கேட்க ‘நீங்கள் எங்கள் அப்பாவுடன் பணியாற்றி இருக்கிறீர்களா?’ என அவர் கேட்க, எம்.ஜி.ஆர் ‘ஏன் இல்லை.. அவர் தயாரித்த பைத்தியக்காரன் படத்தில் நடித்திருக்கிறேன்’ என சொல்ல, அடுத்த நாளே அவருக்கும் ஒரு பேனாவை கொடுத்து மகிழ்ச்சியடைந்தார் சவுந்தரராஜன்.

எம்.ஜி.ஆரிடம் அவர் கேட்கமாலேயே பல விலையர்ந்த பரிசுகள் அவரை தேடி வந்தது. ஆனால், கேட்டு வாங்கிய ஒரே பரிசு அந்த பேனா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறுமுகம் தாரமங்கலம் சேலம்

Leave a Reply