• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காஸாவில் சிக்கியுள்ள குடும்பத்தினர் தொடர்பில் பிரித்தானிய எம்.பி உருக்கம்

காசா நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்களில் தனது உறவினர்களும் இருப்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லைலா மோரன் கவலை தெரிவித்துள்ளார். தமது உறவினர்கள், உணவு அல்லது குடிநீரின்றி மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதனிடையே, தொடர்புடைய தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த ஒரு தாயார் மற்றும் அவரது மகள் இஸ்ரேல் ராணுவத்தின் sniper படையால் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  
கொல்லப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும், நஹிதா மற்றும் அவரது மகள் சமர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுக்கப்படாமல் தேவாலயத்தினுள் மிகக் கொடூரமான தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் லைலா மோரனின் குடும்பத்தினர், பாட்டி ஒருவர், அவரது மகன், அவரது மனைவி மற்றும் அவர்களது 11 வயது இரட்டையர்கள் ஆகியோர் தங்கள் குடியிருப்பு இஸ்ரேல் ராணுவத்தால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் காஸா நகர தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

60 நாட்களுக்கும் மேலாக அந்த தேவாலயத்தில் உள்ள அறைகளில் டசின் கணக்கானவர்களுடன் வெறும் தரையில் படுத்துறங்கி வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை வரையில் உயிருடன் இருப்பார்களா என்பதில் தமது சந்தேகம் இருப்பதாக உறுப்பினர் லைலா மோரன் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு கிடைக்கும் வேளைகளில் தம்முடன் அவர்கள் தொடர்பில் இருப்பதாகவும் லைலா மோரன் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, தமது உறவினர்களை மீட்கும் வகையில் சில நாடுகளுடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும், ஆனால் தற்போதைய சூழல் மிகவும் சிக்கலாக உள்ளது என்றார். 
 

Leave a Reply