• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலக்கியமும் எழுத்தும் என்கூட இருக்கிறதால மனசும் ரொம்ப இளமையாவும் உற்சாகமாவும் இருக்கு

சினிமா

வேல ராமமூர்த்தி பிரபல எழுத்தாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவருக்கு இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருநாழி சொந்த ஊர் ஆகும். இவர் இந்திய இராணுவத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு, அஞ்சலகத்தில் பணியாற்றினார். இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் 2008ல் ஆயுதம் செய்வோம் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமானார்.
இதனையடுத்து, 2013ல் மத யானை கூட்டம் படத்தில் அருமையான வேடத்தில் நடிக்க தொடங்கி தொடர்ந்து கிடாரி, கொம்பன், அப்பா, ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, துப்பாக்கி முனை, புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
அவரை பற்றி அவர் சொல்வதை பார்ப்போம்
'' பள்ளிக்கூடம் விட்டதும் `திடுதிடு'ன்னு வீட்டுக்கு ஓடி வருவேன். சாப்பாடு இருக்குற அலமாரியைத் திறந்தா சட்டி சட்டியா மீனும் தளும்பத் தளும்ப தயிரும் இருக்கும். வயிறு நிறைய சாப்பிட்ட பிறகுதான் மத்த வேலை எல்லாம். அன்னிக்கி அப்படி ஆரோக்கியமா சாப்பிட்டதுதான் இன்னிக்கிவரைக்கும் என் உடம்பு திடகாத்திரமா இருக்கு. சின்ன வயசுல இருந்து, இப்ப வரைக்கும் நான் எந்த மாத்திரையும் போட்டுக்கிட்டதும் இல்ல, உடம்பு முடியலைன்னு ஆஸ்பத்திரிக்கும் போனது இல்ல.'' நாற்பதைத் தாண்டினாலே சர்க்கரைநோய், பிரஷர்னு அல்லல்படும் இந்த நவீன யுகத்தில் அறுபதைத் தாண்டியும் 'ஆஸ்பத்திரியா அது எங்க இருக்கு ?' எனக் கேட்டு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி.
தலைவாழை இலையில் திகட்டத் திகட்ட பரிமாறப்படும் வெள்ளாட்டுக்கறியைப்போல், தமிழ் வாசக பரப்பில், தன் மண் சார்ந்த எழுத்துக்களை தனிச்சுவையுடன் பரிமாறி வருபவர் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி. தான் கண்ட, பார்த்த, வாழ்ந்து அனுபவித்த தெற்கத்தி மக்களின் வாழ்க்கைப்பாடுகளை தன் தூவலால் மிடுக்குடன் கலைவடிவமாக்கிவருகிறார். 'வீரத்தேவர், துரைப்பாண்டி, கொம்பையா பாண்டியன்' போன்ற மண் சார்ந்த கதாபாத்திரங்களை ஏற்று எழுத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் கம்பீரம் காட்டி வருகிறார்.
''சொந்த ஊர் ராமநாதபுரம் பக்கத்துல பெருநாழிங்கிற கிராமம். முழுக்க முழுக்க விவசாயக் குடும்பத்துல பிறந்தவன் நான். எங்க ஊர்ல இருந்து ஏழெட்டு கிலோமீட்டர் தூரத்துல முக்கூர் கடல். வாவல், நெய் மீன் சீலா, பொட்ட வால, முட்டைப் பாறைன்னு மீனுக எல்லாம் அங்க இருந்து தினமும் எங்க ஊருக்கு பெட்டி, பெட்டியா வரும். வீட்டுக்கு வேண்டப்பட்ட மீன் கடைக்காரர், மீன் வந்ததும் துள்ளத் துடிக்க, உசுரோட எங்க வீட்டுக்கு அனுப்பி வெச்சுருவாரு. வாரத்துல பாதி நாள் எங்க வீட்டுல மீன் குழம்புதான். அப்போ எங்க ஊர்ல எல்லா வீட்டுலயும், பெரிய பெரிய கிடாய்களும் ஆடுகளும் வளர்ப்போம். எங்க ஊர்ல கறிக்கடைகளும் அதிகம் உண்டு. கறி வாங்குனா ஒவ்வொரு தடவையும் ரெண்டு கிலோ, மூணு கிலோன்னு வாங்கி எங்க வீட்டுல சமைப்பாங்க. கடையில் இருந்து கறி வாங்கிட்டு வரும்போது கள்ளப்பிராந்து (பருந்து) தட்டிட்டுப்போன கறியே பல கிலோ இருக்கும்.
அப்படி மீனும் கறியுமா தின்னு வளர்ந்த ஒடம்பு இது

"ஆட்டுக்கறி, உருளை கிழங்க வெளுத்து கட்டுவேன்" 
அதுபோக கம்பு, குதிரைவாலி, தட்டாங்காய், மிதுக்கங்காய், மஞ்சணத்திக் காய், வேப்பம்பழம் புளியம்பழம்னு காட்டுல விளைஞ்ச எதையும் விடுறது இல்ல. அதோட எங்க ஊரு அரைக்கீரை ரொம்ப ஃபேமஸ். தோணும்போதெல்லாம் அரைக்கீரையை அவிச்சு நல்லெண்ணெய் தொட்டு சாப்பிடுவேன். இவ்வளவும் தின்னுபுட்டு சும்மா இருக்க மாட்டேன். பள்ளிக்கூடத்துக்கு போய்ட்டு வந்த மிச்ச நேரத்துல களையெடுக்குறது, மாடு மேய்க்குறதுன்னு ஏதாவது ஒரு வேலை பார்த்துக்கிட்டே இருப்பேன். கிணத்துல நீச்சல் அடிக்கிறது, மரத்துக்கு மரம் தாவுறதுன்னு ஒரு எடத்துல நிக்க மாட்டேன். ராத்திரியானாக்கூட தூங்குறது கெடயாது. கள்ளன் - போலீஸ், கிட்டிப்புல்லுன்னு ஏதாவது விளையாடிக்கிட்டே இருப்போம் எங்க ஊர்ல.
ரசாயன உரம் போடாம இலைதழைகள், மாட்டுச்சாணியப்போட்டு வளர்ந்த சத்தான உணவுகளைச் சாப்பிட்டதாலும், ஓடி ஆடிக்கிட்டு இருந்ததாலும் எனக்கு 16 வயசுலயே திடகாத்திரமான உடம்பு அமைஞ்சது. பி.யு.சி முடிச்ச கையோட மிலிட்டிரி செலக்‌ஷனுக்குப் போனேன். என் உடம்பையும் படிப்பையும் பார்த்தவுடனே செலக்ட் பண்ணிட்டாங்க. வயர்லெஸ் ஆபரேட்டரா அஞ்சு வருஷம் வேலை பார்த்தேன். ராணுவத்துல கொடுத்த டிரெய்னிங்ல என்னோட உடலையும் மனசையும் ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வந்துட்டாய்ங்க. சாப்பாட்டு விஷயத்துல நான் ரொம்ப கரெக்‌டா இருப்பேன். அளவாத்தான் சாப்பிடுவேன். நொறுக்குத்தீனி எதுவும் திங்க மாட்டேன்.
இப்பவும் நைட்டு எந்நேரம் படுத்தாலும் காலையில 4.30 மணிக்கெல்லாம் எழுந்திடுவேன். வண்டியை எடுத்துகிட்டு மதுரை ஏர்போர்ட்டுக்குப் போயி, முக்கால் மணிநேரம் நடப்பேன். தனியாதான் நடப்பேன். அதுக்குப் பேரே நடைபயிற்சி தான். மத்தவங்ககூட பேசிச் சிரிச்சுக்கிட்டு ஏனோதானோன்னு போறது பயிற்சி இல்ல. அத முடிச்சுட்டு, இருபது நிமிஷம் எக்சர்சைஸ் பண்ணுவேன். வயசு 67 ஆயிடுச்சு. ஆனா இப்பகூட தினமும் முப்பதுல இருந்து 40 தண்டால் போட்ருவேன். வாய்ஸ் எக்சர்சைஸ் பண்ணுவேன். மதுரை ஏர்போர்ட்ல இருந்து, திருப்பரங்குன்றம் மலைக்குக் கேட்குறமாதிரி சத்தம் போடுவேன். ஒரே மாதிரி இல்லாம, அடிவயித்துல இருந்து, தொண்டையில இருந்து விதவிதமா கத்துவேன். நடிகனா இருக்குறதால குரல் கம்பீரமா இருக்க அது உதவியா இருக்கு. ஷூட்டிங் போயிட்டா இதெல்லாம் பண்ண முடியாது. ஒரு மாசம் பண்ணாம விட்டாக்கூட, அடுத்தமுறை போய் பண்ணும்போது கால்வலியோ, உடம்பு வலியோ எனக்கு வந்ததே இல்ல.
விதை இல்லாத பழங்கள், காய்கறிகளையும் எண்ணெயில பொரிச்ச பாரம்பர்யம் இல்லாத எந்த உணவையும் நான் சாப்பிடுறதில்ல. இயற்கை உணவுகளை மட்டுந்தான் சாப்பிடுறேன். சர்க்கரை நோய், பிரஷர்னு எந்தப் பிரச்னையும் எனக்கு இல்ல. அவரவர் உடம்புக்கு அவரவர்தான் வைத்தியன், விஞ்ஞானி. டாக்டரைவிட நமக்குத்தான் நம்ம உடம்பப் பத்தி தெரியும். நமக்கு எந்த உணவு சரிவராதுன்னு தெரிஞ்சு சாப்பிட்டாலே போதும் எந்தப் பிரச்னையும் வராது.
என் அம்மா மாதிரியே என் மனைவியும் எனக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளா சமைச்சுப் போடுறாங்க. அது எனக்குக் கிடைச்ச பரிசு. என் ஆரோக்கியமான உடம்புக்கு அவங்க ரெண்டு பேரும்தான் முக்கியக் காரணம். அதோட இலக்கியமும் எழுத்தும் என்கூட இருக்கிறதால மனசும் ரொம்ப இளமையாவும் உற்சாகமாவும் இருக்கு'' என்கிறார் எழுத்தாளர், நடிகர் வேல ராமமூர்த்தி.

நன்றி : விகடன்
 

Leave a Reply