• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாலேந்திரா என்றொரு கலைஞன்!

அ யேசுராசா 
கட்டுபெத்தை உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் (பின்னர் மொரட்டுவைப் பல்கலைக்கழகம்) பொறியியல் மாணவராகக் கற்றுக்கொண்டிருந்த 1972 இலிருந்து, அண்மைக்காலம்வரை, நாடகத்துறையில் அர்ப்பணிப்புடன் இயங்கித் தனது அடையா ளத்தை ஆழமாகப் பதித்தவர் பாலேந்திரா!  யாழ்ப்பாணத்தில் நாடகங்களுக்குப் புகழ்பெற்ற அரியாலை அவர் பிறந்த ஊரென்பதும் கவனத்துக்குரியது. கொழும்பில் மாணவப்  பருவத்திலும், 1978 இல் அவைக்காற்று கலை கழகத்தை ஆரம்பித்துச் செயற்பட்ட காலத்தி லும், 1982 இல் புலம்பெயர்ந்து முதலில் நோர்வே யிலும் பிறகு இலண்டனில் வாழும் காலத்திலும் (யேர்மனி, பிரான்ஸ், நெதர் லாந்து, சுவிஸ், கனடா, அவுஸ்திரேலியா முதலியவற்றையும் உள்ளடக்கி)  – தான் பேசியும் எழுதியும் வருவதுபோலவே – தொடர்ந்த நாடக மேடையேற்றச் செயற்பாடுகளில், சுமார் 66 நாடகங்களை உருவாக்கி அளித்திருக்கிறார். தமிழில்  எழுதப்பட்ட நாடகங்க ளுடன், உலக அரங்கில்  புகழ்பெற்ற பிறமொழி  நாடகங் கள் பலவற்றின் மொழியாக் கங்களாகவும் அவை அமைந்துள்ளன ; சிலவற்றைத் தவிரப் பெரும்பான்மை யானவை, பொதுப் பார்வை யாளரையும் கூருணர்வு மிக்க தேர்ந்த இரசிகர்களையும் கவர்ந் திருப்பவை.
                                                                                ..
பாலேந்திராவை முதலில் எவ்வாறு அறிந்துகொண்டேன் என யோசிக்கையில், மங்கலாகச் சில நினைவுகள் தோன்றுகின்றன. எழுபதுகளின் ஆரம்பங்களில், எமது கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகத்தின் உறுப்பினர்களும் – கட்டுபெத்தை உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவர்களுமான மாவை நித்தி யானந்தன், தில்லைக்கூத்தன் ஆகியோருடன், நானும் குப்பிழான் 
ஐ. சண்முகன் மற்றும் சில நண்பர்களும் சில நிகழ்ச்சிகளுக்காகக் கட்டுபெத்தைக்குச் சென்றதுண்டு ; அச்சந்தர்ப்பங்களில்தான் பாலேந்திராவை அறிந்துகொண்டேன் ; அக்காலங்களில் அவர் ஏணிப்படிகள் நாடகத்திலும் நடித்திருந்தார் ; அந்த நாடகத்தை நானும் பார்த்துள்ளேன்.
1982 தை மாதம் சென்னையில் நடைபெற்ற, இலக்கு அமைப் பின், எழுபது களில் கலை இலக்கியம் என்ற கருத்தரங்கில் நான் பங்குபற்றிக் கருத்துப் பரிமாற்றம் செய்யவேண்டுமென்று, பத்மநாப ஐயர் என்னை வற்புறுத்தி, அங்கு நான் செல்வதற்குரிய எல்லா ஒழுங்குகளையும் தானே செய்திருந்தார். சர்வதேச கடவுச் சீட்டு விண்ணப்பத்தில் பத்தாயிரம் ரூபாவுக்கான பிணைக்கு (Bond) ஒருவர் கையெழுத்திடவேண்டும். இலங்கை மின்சாரசபையின் கொழும்புத்  தலைமை யகத்தில் பொறியியலாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த  பாலேந்திராவே, பத்மநாப ஐயரின் வேண்டுகோளுக்கிணங்க எனது விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு உதவி னார்.  

பாலேந்திராவின் புகழ்பெற்ற நாடகங்களான யுகதர்மம், கண்ணாடி வார்ப்புகள், ஒரு பாலை வீடு, துக்ளக், முகமில்லாத மனிதர்கள், அரையும் குறையும்  முதலியவற்றை யாழ்ப்பாணத்தில் பார்த்துள்ளேன் ; நாடகத்தின் பின்னர் நடைபெற்ற விமர்சனக் கலந்துரையாடல்களிலும் பங்குபற்றியுள்ளேன். அதுபோலவே ஒருபாலை வீடு பற்றிய எனது விமர்சனக் கட்டுரை, சென்னையி லிருந்து வெளிவந்த கணையாழி சிற்றிதழி லும் (1979) ;  யுகதர்மம் மற்றும் நாற்காலிக்காரர் ஆகியவை பற்றிய கட்டுரை கொழும்பு தினகரனிலும் (1980) ; முகமில்லாத மனிதர்கள் கட்டுரை எமது அலை சிற்றிதழிலும் (1980) வெளிவந்துள்ளன.
எனது கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள் :

“... பாலேந்திரா நெறியாள்கையைக் கையாண்டார். நவீன நாடகப் பிரக்ஞை நிறைந்தவராய், ஏற்கெனவே நடைமுறைச் சாதனைகளால் பெற்ற அனுபவ ஞானத் துடன், அலட்டிக்கொள்ளா மலேயே அவர் இயங்குகிறார். நாடகக் கருப்பொருளை வெளிக் கொணர்வதில்  உத்திகள், குறியீடுகள் என்றெல்லாம் செயற்கையாய் அந்தரப்படும் அவசியமே அவருக்கு இல்லை. திரை விலகினதும் உயர்ந்து குவிந்த, பளிச்சென்ற சுவர்களுடன்  வறண்ட பாலை வீடு தெரிந்ததிலிருந்து, மூடுண்ட – அதனுள் அமுங்குண்ட  - முணுமுணுக் கின்ற – வக்கிரங்கொண்ட – சிலவேளை கிளர்ந்து எதிர்ப்பும் காட்டு கின்ற – கேவலங்களைப் பூசி மெழுகுகின்ற – பைபிளில் வரும் “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்” போன்ற அந்த வீட்டு மனிதர் களின் ஒருங்கசைவினால் கட்டிச் செல்லப்படும் நாடக உணர்வுச் சூழல் இறுதிக் காட்சியில் உச்சமடைகிறதுவரை, பார்வையாளரைப் பிரிக்காத ஒன்றிப்பைப் பலிதமாக்கும் நெறியாள்கை அவருடைய தாகிறது ; அதுவே, நாடகத்தின் வெற்றியுமாகிறது.” - (ஒரு பாலை வீடு).
“அந்நிய களத்தில்  இயங்கும் பாத்திரங்களை உருவாக்கி, உலகப் புகழ்பெற்ற ஒரு நாடகாசிரியரின் நாடகத்தினை வெற்றிகர மாக இன்னொரு மொழியில் நிகழ்த்திக் காட்டுதல் என்பது சாதாரண மானதல்ல ; நாடகாசிரியரின் ஆதார நோக்கு, மேடை அமைப்பு, பாத்திர இயக்கம், உருவ ஒப்பனை, இசை பற்றிய சரியான அறிதல் களும், நீண்ட உழைப்பும், பயிற்சியும் அவசியமானவைகளாகும். இந்நாடகத்தின் நெறியாள ரான க. பாலேந்திரா இவற்றைப் பேணியுள்ளமையை இந்த நாடகத்தின் பெருமளவு வெற்றி நிரூபிக்கிறது. தயாரிப்பிலுள்ள நேர்த்தி மிகவும் பாராட்டுக்குரியதே. சில உச்சரிப்புத் தெளிவீனங்களால் நிகழ்ந்த தவறில் கவனம் செலுத்த வேண்டுமென்பதே இவரிடம் எதிர்பார்க்கப்படுகிறது.” - (யுகதர்மம்). 
“... தீவிரமாய் இயங்கிவரும் ந. முத்துசாமி எழுதியதே நாற்காலிக் காரர் நாடகம்.  ஓர் அரசியல் நாடகம் என, அவரே இதைச் சொல்லி யுள்ளார். கும்பல் சேர்ந்து, பின் அணிபிரிந்து வேடிக்கையாய்க் கோஷம்போட்டு, பின்னர் செயலை மறந்து கோஷத்திற்காகக் கோஷமென்றாகி, தொங்கிக்கொண்டு நின்ற கோஷத்தை மட்டுமே நியாயப்படுத்துவதாகி – உன்னத குறியை அடையும் இயக்கம் என்ற பிரமையில், தாமே மயங்கி சக்தி விரயம், கால விரயம் செய்வதாய் எமது சமூகத் தில்  நிலவும் பிரிவுகளின் அபத்த நடத்தைப் போக்குகள், மிகுந்த எள்ளலுடன் இதில் வெளிப்பாடு கொள்கின்றன. நேரடிப் புரிதலில் உடனடியாக அரசியல்துறைப் பரிமாணமே அழுத்தமாய்ப் பதியினும், அது கொண்டுள்ள குறியீட்டம்சங் களினால், எல்லைப்பாடு களைக் கடந்து – தத்துவம், கலை, இலக் கியம், ஆன்மிகம் எனப் பிற துறைகளிலும் கால்பதிக்கும் பொதுமை யும், அவ்வத்துறைகளின் அபத்தச் சூழல்களில்  அதிர்வு களைச் சலனிப்பதாகவும் இருக்கிறது. அரசியல் சாயம் மட்டும் பூசி,, அதன் வீச்சினைக் குறுக்கவேண்டியதில்லை...” - (நாற்காலிக்காரர்).
“இந்திரஜித் இடையிடையே அறிகிறான் ; உணர்கிறான். சலிப்புற்ற சுழல் வட்டத்துக்கப்பால் வேறெங்கோ தூரச் செல்வதையே விழைகிறான் ; ஓர் ஒளி நட்சத்திரமாய்ப் பிரகாசிக்க விரும்புகிறான். தான் பிரபஞ்சத்தில் சிறு தூசியென்ற போதும், யுகங்களின் முன் ஒரு கணமேயென்றபோதும் – சிதறுண்டு போகும், இழக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தன்னை – தனது மனிதப் பெறுமானத்தைத் திரட்டிப் பேண முனைகிறான் ; தனது வாழ்வுக்கு அர்த்தத்தைச் சேர்க்க முனைகிறான். எதிர்காலத்தின் எதிர்பார்ப்பு களிலும், கழிந்துவிட்ட இறந்த காலத்தில் நின்றும் மேலும் வாழ்க்கையை இழத்தலைவிட, நிகழ்காலத்தில் -  நிஜமான கணங் களில் – பூரணமான  ஒன்றுதலில் அதைத் திரட்டிக்கொள்வதையே தீர்வாகக் காண்கிறான்.” - (முகமில்லாத மனிதர்கள்).
* *
புகழ்பெற்ற கலைஞர்களில் சிலரைத் தவிரப் பலரும் – தத்தம் துறைகளில் திறமை உடையவராயிருந்தாலும்,  -  சொற்பொழிவு களிலோ கட்டுரைகளிலோ தமது கருத்துகளைத் தெளிவாக வெளிப் படுத்தும் ஆற்றல் அற்றவர்களாய் இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், தனது நேர்காணல்களிலும் கட்டுரைகளிலும் தனது எண்ணங்களைத் தெளிவாக முன்வைப்பவராகவே பாலேந்திரா காணப்படுகிறார்.
i சிறந்த வாசகராக அவர் இருக்கிறார். புத்தகங்கள், சிற்றேடு களுடன் அவருக்கு நல்ல பரிச்சயம் உள்ளது. பத்மநாப ஐயருடன் தொடர்பு ஏற்பட்டபின், அவர்மூலமாக ஏராளம் தமிழகச் சிற்றேடுகள், அவரது கைகளில் கிட்டின. தனது வாசிப்பைப்பற்றி அவர் கூறு கிறார் :
“நான் பொதுவாக வாசிப்பது அதிகம். உண்மையில் நான் ஓர் இலக்கியச் சுவைஞனாகவே இருந்தேன். பின்னர் நான் பார்த்த நாடகங்களில் ஏற்பட்ட சலிப்பும் அதிருப்தியுமே என்னை நாடகங் கள் தயாரிக்கத் தூண்டின.  பின்னர் அதுபற்றிய புத்தகங்களை நிறைய வாசித்தேன். கொழும்பில் வெளிநாட்டவர் அவ்வப்போது வந்து சில நாடகப் பயிற்சி வகுப்புக்கள் நடத்துவார்கள். அவற்றிற்கும்  நான் தவறாது போவேன். ஆனால் கூடுதலாக வாசிப்பதன்மூலமே  நான் உலக நாடக வளம்பற்றி, நாடகத் தயாரிப்புப்பற்றி நாடக இலக்கியங்களில் அறிந்துகொண்டேன்.”
ii தனது நாடகத் தெரிவு எவ்வாறானதென்று கூறுவது :
“எமது வாழ்க்கைக்கு ஒட்டியதாக இருக்கவேண்டுமென்பது மிக முக்கியம். கண்ணாடி வார்ப்புகள் எனது தனிப்பட்ட வாழ்வோடு தொடர்புடையது. அதுமட்டுமல்ல பலவிதமான வகைகளையும் தமிழுக்குக் கொண்டுவரவேண்டுமென விரும்பினோம். உதாரணமாக யுகதர்மம் காவியப்பாணியிலானது. நட்சத்திரவாசி கூடிய நவீனத் துவமானது. பாதல் சர்க்காரின் முகமில்லாத மனிதர்கள் நாடக அமைப்பு, பாத்திர வகை கள் எல்லாம் முற்றிலும் வித்தியாச மானவை. மோகன் ராகேஷின் அரையும் குறை யும் இன்னொரு விதமானது.”
iii தனது நாடகத் தயாரிப்பு முறைபற்றி :
“பிரதியைத் தெரிவு செய்வதுதான் என் முதல் வேலை. நல்ல பிரதி கிடைத்தவுடன் அதைப் பலமுறை வாசித்துப் பார்வைப் படுத்திக்கொள்வேன். அதை மனதில்போட்டு மீட்டு மீட்டு உருப் போடுவேன். நான் நடக்கும்போதும் வேறு வேலைகள் செய்யும் போதுகூட அது வந்து தொல்லைசெய்யும் அளவுக்கு அது என் மனதில் ஆழமாகப் பதியும்படி செய்யவேண்டும். பின்னர் நடிகர் தேர்வு, ஒளியமைப்பு, உணர்வுச் சூழலை வெளிப்படுத்தும் அரங்க அமைப்பு, ஏற்ற இசை எதுவுமே அங்குதான் மனதில் நிழலாடும் ஒரு வடிவத்திற்கு ஏற்ப அமையும்  அப்பிரதியைக் கலைநயப்படுத்தி, நிர்வகித்து, பௌதிக வெளிப்பாடு அடையும்வரை ஒரு பிரசவ வேதனைதான். மொழிபெயர்ப்பு நாடகம் என்றால் அந்த நாட்டின் கலாசாரம், காலம், பழக்கவழக்கம், அவர்களுடைய கட்டடக்கலை, இசை இவைபற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டியேற்படும்.” 
iv “பிரதி மேடையேறுவதன் முன் நெறியாளர் மனதில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அதை Effective ஆக பார்வையாளர் களுக்கு மாற்றவேண்டும்.” என்று, ஓரிடத்தில் பாலேந்திரா குறிப்பிடு கிறார். புகழ்பெற்ற யேர்மன் திரைப்பட நெறியாள ரான வேர்னர் ஹேர்சொக், நான் எதுவோ, அதுதான் எனது படங்கள் (I am what my films are ) என்னும், தன்னைப் பற்றிய ஆவணப்படத்தின் ஓரிடத்தில், “எனது படங்கள் தயாரிக்கப்படுமுன்பே, எந்நேரமும் என்முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன” எனக் குறிப்பிடுவது எனக்கு நினை வில் வருகின்றது! இருவேறு துறைகளில் பிரகாசிக்கும் தேர்ந்த கலைஞர் இருவரும் இங்கு, ஒரேபுள்ளியில் இணைகிறார்கள்!
v. எழுபதுகளிலும் பிறகும் மொழியாக்க நாடகங்களை – மார்க்சியவாதியான ஃபிரெக்ற்றின் யுகதர்மம், முற்போக்குப் போராளிக் கவிஞன் கார்சியா லோர்காவின் ஒரு பாலை வீடு முதலி யவை அடங்கலாக -  பாலேந்திரா மேடையேற்றியபோது, குருட்டுத் தனமான வன்மத்துடன் முற்போக்கு அணியினரால், குறிப்பாக முற்போக்கு அணி ஆய்வாளரான க. கைலாசபதியால், அவை கண்டனத்துக்குள்ளாகின ; அந்த நாடகங்களை “குடியேற்றவாதத் தின் எச்ச சொச்சங்கள் போலும்” என்றும் குறிப் பிடப்பட்டது! இக்கண்டனங்களுக்குப் பலர் எதிர்வினையாற்றினாலும், பாலேந்திராவின் எதிர்கொள்ளல்களும் சுவராசியமானவை. உதாரணத்துக்கு, 1994 இல் அவரது நேர்காண லில் குறிப்பிடப்பட்ட கருத்துகள் சில :
“... தமிழ் நாடகத்தினுடைய வளர்ச்சி எதுவாக இருந்தாலும் இங்கு லண்டனில் உலக மொழிகளில் மேடையேறும் உன்னத நாடகங்க ளைப் பார்க்கின்றபோது இவற் றைத் தமிழுக்குக் கொண்டு சேர்க் கின்ற உன்னத பணியினைச் செய்வதற்கு நூற்றுக் கணக்கான தமிழ்க் கலைஞர்கள் செயற்பட்டால்கூட நல்லதுதான் என்று சொல்வேன்.  வேறு எந்த மொழியிலும் இப்படியொரு பிறமொழியாக் கங்களுக்கான எதிர்ப்பு இந்தளவு இல்லை என்றும் சொல்வேன். சிறுகதையில், நாவல்களில், கவிதைகளில், விஞ்ஞானம், அரசியலில் மொழிபெயர்ப்பை மனமுவந்து ஏற்பவர்கள், நாடகத்துறை என்றதும் இந்தா பிடி சாபம் என்று ஏன் வரிந்து கட்டிக்கொண்டு எதிர்க்கிறார் களோ தெரியவில்லை. நான் நெறிப்படுத்திய 35 நாடகங்களில் 18 நாடகங்கள் தமிழில் எழுதப்பட்ட நாடகங்களே. மொழிபெயர்ப்பை மொழிபெயர்ப்புக்காக  அல்ல எமது சமூக வாழ்வுக்கு மிகவும் நெருக்கமாக ஒத்திணைந்துபோகத்தக்க நாடகங்களையே நான் தெரிவுசெய்திருக்கிறேன். அதனால்தான் என்னுடைய நாடகங்கள் இன்றும் ரசிகர்களின் ஆதரவை ஈர்த்து நிற்கின்றன.” 
* *
தனது நாடகப் பிரதிகள் சிலவற்றையும், தனது நேர்காணல்கள், அரங்க அனுபவக் கட்டுரைகள் போன்றவற்றையும் நூல் வடிவில் கொண்டுவரும் முயற்சியினையும் பாலேந்திரா மேற்கொண்டு வருகிறார். தனது குழுவினரின் கலைச் செயற் பாடுகள் பற்றிய ஆவணங்களை முறையாகப் பேணியும் வருகிறார் ; அவற்றையும் நூல்வடிவில் கொண்டுவருதல் அவசியம். ஈழத்து நாடக வரலாறு எழுதப்படுகை யில், முக்கிய சான்றாதாரங்களாக அவை துணை செய்யும்!
19. 10. 2023 
நன்றி : ஜீவநதி (இதழ் 213)
புரட்டாதி 2௦23

Leave a Reply