• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யார் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் - அமைச்சர் கெஹெலிய

இலங்கை

இதுவரை நடைபெற்ற கோப் 28 மாநாட்டு இணக்கப்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளை விரைவாக அமுல்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சூழல் மற்றும் அபிவிருத்தியை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இரத்தினக்கற்கள் மற்றும் கனிய வளங்களைப் பொருளாதார ரீதியாக பயன்படுத்தப்படும் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் முறையான ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இயற்கை சூழல் கட்டமைப்பைப் பாதுகாத்தல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக தற்போது உலகளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் பல உலகத் தலைவர்கள் இதில் ஆர்வமாக உள்ளனர்.

இதுவரை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதே ஜனாதிபதியின் பிரதான இலக்காகும்.

காலநிலை மாற்றம் தொடர்பான பல முக்கியமான முன்மொழிவுகள் குறித்து உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் தரமற்ற மருந்துகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதன்போது கிடைத்த முதலாவது முறைப்பாடின்போதே செயற்பட்டு குறித்த மருந்துக்கு அனுமதி பெறப்பட்ட விதம், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஊடாக ஆராயப்பட்டது.

போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்தது.

இது தெரியவந்தவுடன் நான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தேன். அது தொடர்பாக தற்போது நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நான் செய்த முதலாவது முறைப்பாட்டைத் தொடர்ந்து பல்வேறு குழுக்கள் முறைப்பாடளிக்க ஆரம்பித்தன.
யார் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply