• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு விசேட ஆணைக்குழு? - சஜித் பிரேமதாச

இலங்கை

நாட்டை வங்குரோத்து நிலைக்கு உட்படுத்தியதாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நபர்களின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு உட்படுத்திய ராஜபக்சர்களின் குடியுரிமையை இரத்து செய்யக் கோரி பொதுமக்கள் கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டம் இன்று புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டமானது நீதிக்கான மக்கள் ஆணையைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், “ஊழல் கும்பல் எடுத்த தவறான முடிவுகளால் நாடு வங்குரோத்தானதன் காரணமாக, 220 இலட்சம் மக்கள் மற்றும் வர்த்தகர்களின் வாழ்வாதாரம் சீரழிந்துள்ள நிலையில் அவர்கள் நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ள இந்த தீர்ப்பின் ஊடாக வழிவகுக்கப்படுகின்றது.

இந்த கையொப்பத் திரட்டின் மூலம் ஒரு விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்பட்டு அதன் மூலம் நாட்டின் உயர் சட்டத்தின் பிரகாரம், நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய அனைவரினதும் பிரஜா உரிமைகளை இல்லாதொழிக்க ஜனாதிபதியை நிர்ப்பந்திக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவர்களுக்கு மீண்டும் தேர்தல்களுக்கு முன்நிற்க முடியாதவாறும், வாக்குரிமையும் பிரயோகிக்க முடியாதவாறும் உரிமைகள் மறுக்கப்பட வேண்டும்.

கிராமம் நகரமாக சென்று இலட்சக்கணக்கான கையெழுத்துக்களை திரட்டி, ஜனாதிபதி தொடர்ந்தும் ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாவலரும் அடிமையுமல்லாது மக்களின் பாதுகாவலராக இருக்க வேண்டியதை கட்டாயமாக்கும் செயற்பாடு இதனூடாக மேற்கொள்ளப்படுகின்றது.

220 இலட்சம் மக்களும் வீதிக்கு இறங்கி இந்த மனுவில் கையொப்பமிட்டு,’ராஜபக்சர்களைப் பாதுகாக்காமல் அவர்களின் குடியுரிமைகளை சட்டப்பூர்வமாக இரத்து செய்’ என்று ஜனாதிபதியை கட்டாயப்படுத்த முன்வாருங்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply