• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வண்ணைக் கலைவாணர் நாடக மன்ற நிறுவனர்களில் ஒருவரான கலைஞர் இரா.பற்குணம் அவர்கள் காலமானார்.

இலங்கை

ஈழத்து நாடகக் கலைத்துறையின் ஒரு விருட்சம், 'வண்ணைக் கலைவாணர்' நாடக மன்றத்தின் கலைத்தூண் சரிந்தது. ஈழத்துக் கலையுலகம் தனது கலைப்புதல்வர்களைத் தொடர்ச்சியாக இழந்து வருகின்றது.

யாழ்ப்பாணம் 'நாச்சிமார் கோவிலடி' என்றதுமே கலைஞர்கள் ஒவ்வொருவரும் நினைவுக்கு வருவார்கள். இசை, நாடகக் கலைஞர்கள் நிறைந்த இடமான நாச்சிமார் கோவிலடிப் பகுதிக்கு மாலை நேரத்தில் சென்றால், ஒரு பெரிய கலைஞர் கூட்டத்தையே தரிசிக்கலாம்.

அந்தப் பகுதியில் மிக நீண்ட காலம் கலைப்பணியாற்றியவர், குறிப்பாக நாடகக் கலையில் சிறந்தோங்கி விளங்கியவரான கலைஞர் இராசையா பற்குணம் அவர்கள் 2023 நவம்பர் 20ம் திகதி தாயகத்தில் காலமானார்.

'வண்ணை கலைவாணர்' நாடக மன்றத்தின்  உருவாக்கத்தில் முன்னணி வகித்தவர். அந்த மன்றத்தினூடாக பல நாடகங்களை மேடையேற்றிவர். நடிகர்கள் பலரை 'வண்ணை கலைவாணர்' நாடக மன்றத்தின் ஊடாக வளர்த்தெடுத்தவர், அவர்கள் கலைத்துறையில் புகழடைந்த பொழுது பார்த்து மகிழ்ந்து பாராட்டி வாழ்த்தியவர்.

ஈழத்தின் ஒப்பற்ற கலைஞர்களாக விளங்கிய எஸ்.ரி.அரசு, கணபதிப்பிள்ளை - வில்லுப்பாட்டு சின்னமணி, எஸ்.லோகநாதன், திருநாவுக்கரசு, கிருஷ்ணமூர்த்தி போன்ற பல கலைஞர்களுடன் பணியாற்றி அவர்களின் புகழுக்குக் காரணமாக அமைந்தவர். இவர்களைப் போன்று பல கலைஞர்கள் இவரால் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்றும் அவர்கள், கலைஞர் பற்குணம் அவர்களின் கலைப்பாதையைப் பின்பற்றி வருகின்றார்கள்.

'வண்ணை கலைவாணர்' நாடக மன்றத்தால் மேடையேற்றப்பட்ட பல நாடகங்களில் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்துப் புகழ் பெற்றவர்.

கலையரசு க.சொர்ணலிங்கம், நாடகர் ஏ.சி.தாசீசியஸ், ஏ.ரகுநாதன் போன்றோருடன் கலைத்தொடர்பைப் பேணி வந்த ஒரு மாபெரும் நாடகக் கலைஞரை ஈழதேசம் இழந்து நிற்கிறது.

'நடிகமாமணி' என்ற விருதினை அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையினார் இவருக்கு வழங்கினார்கள். இலங்கை அரசின் 'கலாபூசணம்' விருதினை வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலைஞர் இரா.பற்குணம் அவர்களுக்கு வழங்கி மாண்பேற்றியிருந்தார்.

அத்துடன், நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பிரிவு 'கலைஞானச்சுடர்' என்ற பட்டத்தை கலைஞர் பற்குணம் அவர்களுக்கு வழங்கியது.

இவ்வாறு பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுக்கொண்டவர் 'வண்ணைக் கலைவாணர்' நாடக மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவரான கலைஞர் இரா.பற்குணம் அவர்கள் இன்று எம்மோடு இல்லை.

அவரை இழந்து நிற்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்.

S.K.Rajen

Leave a Reply