• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் புலம்பெயர் குடும்பம் ஒன்று வாகனம் மோதிக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம்

கனடா

கனடாவின் ஒன்ராறியோவில் புலம்பெயர் இஸ்லாமிய குடும்பத்தின் மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர் மீதான வழக்கில், அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நதானியேல் வெல்ட்மேன் என்ற இளைஞரை குற்றவாளி என தீர்ப்பளிக்க நடுவர் நீதிமன்றம் சுமார் ஆறு மணிநேரம் எடுத்துக்கொண்டதாகவும், அவர் 25 ஆண்டுகள் பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனையை எதிர்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்லது.
  
மேலும், வெல்ட்மேனின் நடவடிக்கைகள் பயங்கரவாத பின்னணிக் கொண்டதா என்பதை நீதிபதி ரெனி பொமரன்ஸ் தண்டனை அறிவிக்கும் போது தீர்மானிப்பார் எனவும் கூறப்படுகிறது.

அஃப்சால் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மீது வேண்டும் என்றே தமது டிரக்கை ஓட்டிச் சென்ற விவகாரத்தில் 22 வயதான வெல்ட்மேன் மீது நான்கு கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் கடந்த 2021 ஜூன் மாதம் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் நடக்க சென்றுள்ளனர் அஃப்சால் குடும்பத்தினர். இதில் சல்மான் அஃப்சால் (46), அவரது மனைவி மதீஹா சல்மான் (44), தம்பதியரின் மகள் யும்னா அஃப்சால் (15), மற்றும் அஃப்சாலின் தாயாகிய தலத் அஃப்சால் (74) ஆகியோர் கொல்லப்பட்டனர்.

தம்பதியரின் 9 வயது மகன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். வெல்ட்மேன் மீதான தீர்ப்பு வெளியானதும் கனேடிய இஸ்லாமியர்களின் தேசிய கவுன்சில் தங்களது சமூக ஊடக பக்கத்தில் நீதி வழங்கப்பட்டது என பதிவிட்டுள்ளது.

விசாரணையின் போது அஃப்சால் குடும்பத்தில் நால்வரை கொலை செய்துள்ளதை வெல்ட்மேன் ஒப்புக்கொண்டாலும், அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். ஒன்பது வார விசாரணையின் போது, விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்த வெல்ட்மேன்,

தாக்குதல் நடந்த அன்று தனது வீட்டை விட்டு வெளியேறி முஸ்லீம்களைக் கொல்வதற்காகத் தேடிச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 2019ல் நியூசிலாந்தில் இனவெறி நபரால் 51 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் தாம் ஈர்க்கப்பட்டதாகவும் வெல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தாக்குதல் சம்பவம் கனடா முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியதுடன் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கான அழைப்புகளும் மீண்டும் விடுக்கப்பட்டன.

கடந்த 2007ல் பாகிஸ்தானில் இருந்து அஃப்சால் குடும்பம் கனடாவுக்கு புலம்பெயர்ந்துள்ளது. இந்த வழக்கின் இறுதி தண்டனை தீர்ப்பானது டிசம்பர் 1ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது. 
 

Leave a Reply